பேல் பூரி

கூகுள் போட்டோஸின் புதிய அம்சங்கள்
பேல் பூரி

கண்டது

(குடந்தை- ஸ்ரீவாஞ்சியம் சாலையில் உள்ள கிராமத்தின் பெயர்)

'மேலராமன்சேத்தி'

(சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள சலூன் கடையின் பெயர்)

'வந்தா வெட்டுவோம்'

-சம்பத்குமாரி, பொன்மலை.

(நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பேக்கரியின் பெயர்)

'இரட்டைபனை'

-அ.ரவீந்திரன், குஞ்சன்விளை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'காட்டுக்கடை, மேட்டுக்கடை, தெருவுக்கடை, இளங்கடை'

-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது

(திருச்சியில் ஒரு பூங்காவில் இரு முதியவர்கள் பேசியது)

'என் மாப்பிள்ளைக்கு வரதட்சிணை பாக்கி வெச்சது.. நல்லதா போச்சு..?'

'ஏன் என்னாச்சு சார்..'

'ஆமாம். அந்தக் கோபத்துல எங்க வீட்டுப்

பக்கமே வராம இருக்காரு..'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருவர் பேசியது)

'மச்சான்.. நான் காதலிக்கிறேன்டா..'

'நீ கடனாளியாகும்போதே நினைச்சேன்டா..'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)

'உன்னில் சரிபாதி. நான்தானேடி...'

'ஆமாம். அதுக்கென்னங்க..'

'கவர்மென்ட் தந்த உரிமைத் தொகையில் பாதியை எனக்கு கொடேன்..'

-இந்து குமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!

நேற்றையப் பொழுதைச் சுமப்பவனும்

நாளையப் பொழுதை நினைப்பவனும்

இன்றையப் பொழுதை இழந்திடுவான்.

-பொறிஞர் ப.நரசிம்மன், திருச்சி.

மைக்ரோ கதை

'தலை வலிக்குது. காபி தாயேன் நிர்மலா' என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் தனது மனைவியிடம் கேட்டான் நிரஞ்சன்.

'சீரியல் முடியற வரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க.. வேணும்னா ஃப்ரிட்ஜில் பால் இருக்கு.. எடுத்துப் போட்டு குடிங்க' என்றாள்.

'எப்போ சீரியல் முடியும்..'

'எல்லா சீரியல் முடிய நைட் 12 மணியாகும்..'

நிரஞ்சன் செல்போனை பார்த்தபோது, நேரம் ஏழு மணியைக் காட்டியது. நேரே மாடிக்குச் சென்றவன், கேபிள் இணைப்பைத் துண்டித்துவிட்டு கீழே வந்தான்.கீழே வந்தபோது, நிர்மலா தனது செல்போனில் விட்டுபோன சீரியலை பார்த்துகொண்டிருந்தாள்.

நிரஞ்சனுக்கு தலைசுற்றலே வந்துவிட்டது.

-ச.பிரபு (எ) தேனி ச.அரசமதி

எஸ்எம்எஸ்

ஆழமாக நேசிப்போர் அனைவரும்

ஆழமாத வெறுக்கவும் செய்வர்.

- குப்புசாமி, நெய்வேலி.

அப்படீங்களா!

கைப்பேசி கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தாலும், வாட்ஸ் ஆஃப்பில் பகிரப்பட்ட புகைப்படமாக இருந்தாலும் அவை கூகுள் போட்டோஸில் தானாக பதிவேற்றமாகிவிடும். இவையெல்லாம், ஜிமெயில் கணக்கின் 15 ஜி.பி. இடத்தில் சேமிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கூகுள் போட்டோஸை பயன்படுத்தும் பயனாளர்களுக்காகப் புகைப்படங்களை எடிட் செய்யும் புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதிநவீன சேவைகளை இலவசமாகப் பயனாளர்களுக்கு கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

மேஜிக் எரேசர்: புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பொருள்களை நீக்க உதவும். கை விரலால் தேவையற்ற பொருளை அழித்துவிடலாம். இதற்காக கூகுள் போட்டோஸில் சென்று எடிட் - டூல்ஸ் - மேஜிக் எரேசர் என்பதைத் தேர்வு செய்து தேவையற்ற பொருள்களை அழித்துவிடலாம்.

போட்டோ அன்பிளர்: தெளிவற்ற புகைப்படங்களை தெளிவாக்க இந்த சேவை உதவும்.

போட்ரைட் லைட்: புகைப்படங்களை எடுக்கும்போது, தேவையான இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தால் இந்த சேவை மூலம் அதில் வெளிச்சத்தை சேர்த்து கொள்ளலாம்.

மேஜிக் எடிட்டர்: புகைப்படத்தில் உள்ள வானத்தின் நிறத்தை மாற்றவும், தேவையான பொருள்களை புகைப்படத்தில் சேர்க்கவும் உதவும். இவற்றையெல்லாம் நமது அறிதிறன்பேசியில் உள்ள கூகுள் போட்டோஸ் செயலியிலேயே எடிட் செய்துவிடலாம் என்பதுதான் இதன் சிறப்பு. மாதம்தோறும் 10 மேஜிக் எடிட்டை இலவசமாகச் செய்யலாம். அதற்கு மேல் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com