கோடையை சமாளிப்பது எப்படி?

வெயிலில் இருந்து மாடித் தரையைப் பாதுகாக்க புதிய வழிமுறைகள்
கோடையை சமாளிப்பது எப்படி?

கோடைக்காலம் வந்துவிட்ட நிலையில், வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துகொள்ள சில வழிமுறைகள்:

மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்: மாடித் தரைக்கு வெள்ளை நிற சுண்ணாம்பைக் கெட்டியாக அடிப்பதால், வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இவ்வாறு செய்தால் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம். குளிர்ச்சியாகவே இருக்கும். வெப்பத் தடுப்புக்கென்றே பிரத்யேகமாக விற்கப்படும் சுண்ணாம்புக் கலவைகளையும் பயன்படுத்தலாம். ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெயிலைச் சமாளிக்கச் சுண்ணாம்பைக் கொண்டு குறைந்த செலவில் அடித்துகொள்வது செலவு குறைவு.

தார்பாலின்கள்: தார்பாலின்கள் அல்லது உபயோகப்படுத்தப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பந்தல் போலவே போடலாம். ஆனால், காற்றடித்தால் கிழிவது, அதிக வெயில் பட்டால் தனது தன்மையை இழந்து கிழிந்து / நைந்துபோதல், காற்று உள்ளே வெளியே செல்ல வழியில்லாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் ஷேட் நெட் போன்ற குளிர்ச்சி அளிப்பதில்லை போன்ற பிரச்னைகள் இருக்கவே செய்யும்.

தென்னை ஓலைகள்: குடிசை போடப் பயன்படுத்தும் தென்னை ஓலைகளை மாடியில் பரவலாகப் போட்டு தரையை மூடுவதன் மூலமும் ஓரளவு சூடு இறங்காமல் தவிர்க்கப்படும். மாடியில் குடிசை போடலாம். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். தீப்பிடிக்கக் கூடிய வாய்புகள் இருப்பதால், இதை எச்சரிக்கையாகவே பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம் 4 வருடங்கள் வரும். மழைக்காலத்தில் ஒழுகாமல் இருக்க சில விஷயங்கள் செய்யவேண்டும்.

சான்ட்விச் பேனல்: இருபக்கம் மெல்லிய தகடுகளைக் கொண்டு நடுவில் பைபர் போன்ற அதிக கணமில்லாத, கடினமான ஒரு வெப்பத் தடுப்புப் பொருளை வைத்து இந்த கூரையைச் செய்யலாம். சப்தம், வெளிப்பக்க வெப்பம் அல்லது குளிர் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் தடுக்கப்படும். 25 ஆண்டுகள் உழைக்கும் என்று சொல்கிறார்கள், குறைந்த காலத்தில் இந்த பேனலை வைத்து அழகாக ஒரு வீட்டையே நீங்கள் கட்டிவிடலாம். தேவையில்லாதபோது பிரித்து எடுத்து வேறு இடத்தில் மீண்டும் வீடு கட்டிக் கொள்ளலாம். காங்கிரீட் வீடு கட்டுவதை விட செலவு குறைவுதான். இந்த பேனலைக் கொண்டு மேற்கூரை அமைப்பதன் மூலமும் வெயில் சூடு இறங்குவதைத் தடுக்கமுடியும். இதுவும் மெட்டல் ரூஃபிங்கை விட செலவு அதிகம் பிடிக்கும்.

கொடிப் பந்தல்: முல்லை, கொடி சம்பங்கி, பாஷன் ப்ரூட், பலவகை படர்ந்து வளரும் க்ரோட்டன்கள் போன்றவற்றை ஒரு பெரிய தொட்டியில் வளர்த்தோ அல்லது தரையிலிருந்து மேல் எழுப்பியோ மாடி முழுவதற்கும் படறச் செய்யலாம். இவை பசுமையாக நிழல் தந்து உங்கள் மாடித் தரையில் சூடேற்றாமல் காக்கும். வாசமுள்ள பூக்களையோ, மனத்துக்கினிய பச்சை நிறத்தையோ உங்களுக்குத் தரும்.

பெரிய இலைகளை உடைய, அடர்த்தியாக வளரக்கூடிய வெயில் தாங்கும் எந்தச் செடிகளையும் நெருக்கமாக தொட்டிகளில் வைத்தும் மாடித் தரையை வெயில் சூட்டிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும்.

இதர வழிமுறைகள்: கடல் அருகே ஈரப்பதம் அதிகம் இருக்கும் பகுதிகளில் (வெயில் காலத்தில் வியர்த்துக் கொட்டும்) ஏ.சி. எனப்படும் ஏர்கன்டிஷனர்கள் மட்டுமே பயன்தரும். விலை குறைவு என்று ஏர்கூலர்களை வாங்கினால், கிலோ கணக்கில் ஐஸையும், குளிர் நீரையும் ஊற்றினாலும் எரிச்சலையும் உடல் கேட்டையுமே தரும்.

ஏ.சி., ஃபேன் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் அறை குளிர்ச்சியாக அதிக நேரம் பிடிக்கும். மின்சார செலவும் அதிகரிக்கும்.

-நாகஜோதி கிருஷ்ணன், சேப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com