புள்ளிகள்

புத்தரின் அன்பு: பிச்சைக்காரனுக்கு உணவு வழங்கிய கதை
புள்ளிகள்

புத்தரிடம் வந்த சீடன், "ஒரு பிச்சைக்காரனுக்கு நான் நீண்ட நேரம் உபதேசம் செய்தும் அதை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை'' என்று கோபமாகக் கூறினான்.

புத்தரோ, "அந்தப் பிச்சைக்காரனை என்னிடம் அழைத்துவா?'' என்றார்.

சீடனும் அவ்வாறே செய்தான்.

உடல் மெலிந்து பல நாள் பட்டினியோடு பிச்சைக்காரன் இருப்பதை அறிந்தார் புத்தர். உடனே அவனுக்கு வயிறு நிறைய உணவை அளிக்கச் சொல்லி, திருப்பி அனுப்பச் சொன்னார் புத்தர்.

இதைக் கண்ட சீடன், "நீங்கள் அவனுக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லையே?'' என்றான்.

"இன்று அவனுக்கு உணவுதான் உபதேசம். ஒருவன் பட்டினியாக இருக்கும்போது, உபதேசம் எப்படி மண்டையில் ஏறும். இப்போது அவனுக்கு முதல் தேவை உணவு. அவன் உயிரோடு இருந்தால்தானே நாளை உபதேசத்தைக் கேட்பான். பசித்தவனுக்கு என்ன சொன்னாலும் பயன்படாது'' என்றார் புத்தர்.

தத்துவ மேதை தாமஸ் புல்லரிடம் வந்த ஒருவர், "மனிதனுக்கும் ஞானிக்கும் உள்ள வேறுபாடு என்ன?'' என்று கேட்டார். அதற்கு தாமஸ் புல்லர், "பாவம் செய்பவன் மனிதன். பாவத்துக்காக வருந்துபவன் ஞானி. பாவத்துக்காகப் பெருமைப்படுபவன் சாத்தான்'' என்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமண அழைப்பிதழை அனுப்பி அத்துடன் கைப்பட கடிதமும் எழுதியிருந்தார். திருமணத்துக்கு வர வேண்டாம் என்று?

"அன்புள்ள என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, தங்களுக்கு ஓய்வு இருக்கிறது என்று திருமண விழாவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால் திருமணம் நடைபெறுவது மிகவும் சிறிய கிராமம். நீங்கள் வருவது தெரிந்தால், ஏராளமான மக்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கு வசதி செய்ய என்னால் முடியாது. சமாளிப்பதும் சிரமம். ஆகையால், தயவு செய்து வாழ்த்தை மட்டும் அனுப்பி வைத்தால் போதும்'' என்று இருந்தது.

சிறைத்தண்டனை முடித்து நடிகர் எம்.ஆர்.ராதா வெளியே வந்ததும், கிருபானந்த வாரியாரை சந்தித்தார். இதுகுறித்து எம்.ஆர்.ராதாவிடம் "சினிமா எக்ஸ்பிரஸ்' ஆசிரியராக இருந்த வி.ராமமூர்த்தி கேட்டார். இதற்கு எம்.ஆர்.ராதா, "ஆமாம், வாரியார் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். பார்த்துவிட்டு வந்தேன். வாரியார் நல்லவர். மக்களைத் திருத்த நல்ல விஷயங்களைச் சொல்கிறார். அது அவர் வழி. என்னைப் போன்றவர்கள் அதிலுள்ள சந்தேகங்களைக் கேட்கிறோம். அவர் "தெய்வம்' என்ற திரைப்படத்தில் நடித்தார். அது தவறுதான். ஆனால் வாரியாரோ, "நான் பிரசங்கம் செய்யும்போது எடுத்துவிட்டார்கள்' என்கிறார். இதை நான் ஏற்றுகொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தை எடுத்துக்கிட்டு போய் விலைக்கு விற்கக் கூடாது. அவர் திரைப்படத்தில் நடித்திருக்கக் கூடாது. நெய்வேலியில் அவர் ஏதோ பேசினாருன்னு கலாட்டா பண்ணினார்களாம். அவர் எதுவும் தப்பாகப் பேசவில்லை. யார் மனதையும் புண்படும்விதமாக வாரியார் பேசமாட்டார்'' என்றார்.

-முக்கிமலை நஞ்சன்

எழுத்தாளர் தி.சு.செல்லப்பா பெங்களூரில் தனது மகனுடன் வசித்தார். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்த ராஜாராம் உள்ளிட்ட இலக்கிய நண்பர்கள் சிலருடன் இணைந்து "விளக்கு' எனும் அமைப்பையும், "புதுமைப்பித்தன் நினைவு அறக்கட்டளை'யும் ஏற்படுத்தி, ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் படைப்பாளிக்கு விருதளிக்க முடிவு செய்தார். அதன் முதல் விருதை சி.சு.செல்லப்பாவுக்கு அளிப்பது என முடிவு செய்து, தமிழவன் வாயிலாக செல்லப்பாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு செல்லப்பா, "விருது பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மூத்த எழுத்தாளரை கௌரவிப்பதைவிட, வெளிவராமல் இருக்கும் அவருடைய படைப்பு நூலை வெளியிடுவதே தக்க கௌரவிப்பாகும்'' என்றார். அதன்படி, அவருடைய "என் சிறுகதை பாணி' எனும் நூல் விளக்கு வெளியீடாக 1995-இல் வெளிவந்தது.

"விளக்கு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வெளி ரங்கராஜன் நூலை வெளியிட முயற்சித்து, செல்லப்பாவிடம் சேதமடைந்த நிலையில் இருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தொகுத்து "சுதந்திரத் தாகம்' எனும் நூலை வெளியிட்டார். 3 தொகுதிகளாக, 2 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.

மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:

"நான் 1935-ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். தொழிலை மிகவும் நேசிக்கிறேன். சினிமாவில் இருந்து விலகி, ராணுவத்தில் சேர நினைத்தேன். வறுமை காரணமாக, ஏழு வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். வார சம்பளம் நான்கு அணா. நாடகத்தில் நடிக்க முதலில் பயிற்சி அளித்தவர் காளி என்.ரத்தினம். "ராஜகுமாரி' படத்தில் நல்ல வேடம் கிடைத்து, எனது திறமை வெளிப்பட்டது. "மலைக்கள்ளன்' படம் வந்தவுடன் திருப்புமுனை ஏற்பட்டு, சிறந்த நடிகரானேன். "கூண்டுக்கிளி'படத்தில் சிவாஜியும் நானும் நடித்தோம். பின்னர், "நாடோடி மன்னன்' படத்தைச் சொந்தமாகத் தயாரித்தேன். அப்போது, புதுமுகமாக இருந்த சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினேன். படமும் வெற்றி பெற்றது. 1959-இல் சீர்காழியில் "இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது, ஒரு நடிகர் என் மீது விழுந்ததால் கால் பிசகியது. மருத்துவரின் சிகிச்சையால் கால் குணமாகியது. "திருடாதே' படத்துக்குப் பின்னர் நானும் சரோஜாதேவியும் பல படங்களில் நடித்தோம்..'' என்று எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com