பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் -183

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் -183

நீதிபதி சிவப்பாவின் முகத்தில் கடுமை தெரிந்ததையும் தேவிதாஸ் தாக்கூரின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது.

'லஞ்ச ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா விஷயத்தில் ஒவ்வொரு வழக்காக அவரைக் கைது செய்கிறீர்கள். அதில் உள்நோக்கம் இருப்பது போலத் தெரிகிறது. அவர் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் தேவையில்லாமல் அவரை சிறையில் வைத்தால் அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும்' என்றார் நீதிபதி சிவப்பா.

நீதிபதி இப்படிக் கூறியதும் அவர் ஜாமீன் வழங்குவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் வழக்கை அடுத்த நாளுக்கு ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். அப்போதும் தேவிதாஸ் தாக்கூரின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

நீதிமன்றம் கலைந்து நாங்கள் வெளியேறும்போது, வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது. அவரைக் கைது செய்ய முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற

நீதிபதி ராமமூர்த்தி அனுமதி அளித்ததாகவும், கைது செய்வதற்கான வாரன்ட்டை சிறையில் ஜெயலலிதாவுக்கு அளித்திருப்பதாகவும் தகவல் சொன்னார் அங்கிருந்த நிருபர் ஒருவர்.

நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிய வழக்குரைஞர் தேவிதாஸ் தாக்கூரை சந்திக்க விரைந்தேன்.

'நீதிபதி சிவப்பாவின் பேச்சிலிருந்து இன்றைக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்றுதான் நான் நினைத்தேன்' என்றபோது கலகலவென்று சிரித்தார் தாக்கூர்.

'ஜாமீன் மறுப்பதற்கு முன்னால் தாங்கள் நடுநிலையாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவும் நீதிபதிகள் சிலர் அரசு தரப்பு வழக்குரைஞர்களிடம் இப்படி கடுமையாகக் கேள்விகள் எழுப்புவது வழக்கம். அதையெல்லாம் கேட்டு ஏமாந்து விடக்கூடாது. நாளை என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்' என்று தேவிதாஸ் தாக்கூர் சொன்னபோது அவரது புன்னகையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது.

அடுத்த நாள் காலையில் உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதா ஜாமீன் வழக்கு விசாரணை என்னவாகப் போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அங்கே சென்றேன். நீதிமன்றம் கூடியபோது தேவிதாஸ் தாக்கூர் நீதிபதி சிவப்பாவிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தார்.

'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பத்து நாள்கள் சிறையில் இருந்துவிட்டார். இன்னும் மூன்று நாள்களில் விசாரணையை முடிக்குமாறு அரசுக்கு உத்தரவிடுங்கள். அதற்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்' என்றார் அவர்.

'ஜெயலலிதாவை வேறு சில வழக்குகளிலும் கைது செய்து இருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கிய வழக்கு தொடர்பான மனு மட்டுமே இந்த நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. மற்ற வழக்குகளும் இருப்பதால் ஒட்டுமொத்தமாக நான் ஜாமீன் வழங்க முடியாது' என்றார் நீதிபதி சிவப்பா.

'அரசியல் நோக்கத்துடன் ஜெயலலிதாவை சிறையில் வைத்திருக்கிறார்கள். அவர் குற்றம் செய்தார் என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே சிறை தண்டனை அனுபவிக்கிறார். மற்ற வழக்குகள் தொடர்பாக அவரை நீதிமன்றத்துக்கு

வரவழைத்து சரணடையச் செய்து, அதற்குப் பிறகு ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்யச் சொல்கிறேன்' என்கிற தேவிதாஸ் தாக்கூரின் வாதம் ஏற்கப்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. இன்னும் அங்கே இருப்பதில் அர்த்தம் இல்லை என்று நான் கிளம்பி விட்டேன்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த நகைகள் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டு இருந்தது. அதை 'நியூஸ்கிரைப்' சந்தாதாரர்களான பத்திரிகைகளுக்கு உடனடியாக அனுப்பித் தர வேண்டிய வேலையும் இருந்தது.

அங்கே தில்லியில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியிருந்தன. பி.வி. நரசிம்மராவை நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அகற்றும் முயற்சி காங்கிரஸ் கட்சியில் வேகம் எடுத்திருந்தது. என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நண்பர்கள் அனைவரும் தில்லிக்கு வரும்படி என்னை வற்புறுத்தினார்கள். நினைத்தால் தில்லிக்குப் பறக்கும் நிலையில் நான் இல்லை என்பதால் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு அலுவலக வேலைகளில் ஈடுபட்டிருந்தேன்.

சற்றும் எதிர்பார்க்காமல் எனது நண்பர் 'வேன்டேஜ் லெதர்ஸ்' அதிபர் சேதுப்பிரகாசத்திடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'நான் நாளை காலை விமானத்தில் தில்லி செல்வதாக இருக்கிறேன். நீங்களும் வருகிறீர்களா?' என்று அவர் கேட்டபோது எனக்குத் திகைப்பு. நான் ஏன் மறுக்கப் போகிறேன்..

வீட்டுக்கு விரைந்து அடுத்த நாள் டில்லி பயணத்துக்குத் தயாராகி விட்டேன்.

நாங்கள் தில்லிக்குச் சென்று இறங்கிய நேரம் கடுமையான குளிர். நடுங்கும் குளிரிலும் தில்லி அரசியல் அக்னி நட்சத்திரக் கோடையாக கொதித்துக் கொண்டிருந்தது .

அன்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு கூட இருந்தது. அந்தக் கூட்டத்தில் நரசிம்மராவை பதவி விலகக் கோரி வற்புறுத்த இருந்தனர், அவருக்கு எதிரான கோஷ்டியினர்.

விமான நிலையத்திலிருந்து சேதுப்பிரகாசம் தனது அலுவல்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். நான் ஸ்ரீகாந்த் ஜிச்கரைப் பார்க்கச் சென்றேன். அவர் நரசிம்மராவை சந்திப்பதற்குப் போய் விட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்தே தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ராஜேஷ் பைலட் வீட்டில் தான் இருப்பதாக அவரது உதவியாளர் செல்வராஜ் தெரிவித்தார். உடனே அக்பர் ரோடு பத்தாம் இலக்க பங்களாவுக்கு விரைந்தேன்.

ராஜேஷ் பைலட்டுடன் காலை உணவை முடித்துக் கொண்டு அவரது காரிலேயே நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டோம்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 24 பேரிடம் நரசிம்மராவ் ராஜிநாமா செய்யக் கோரும் தீர்மானத்தில் கையொப்பம் பெறப்பட்டு இருப்பதாக ராஜேஷ் பைலட் தெரிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நிர்பந்தம் காரணமாகத்தான் கூட்டத்தைக் கூட்ட நரசிம்ம ராவ் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார் ராஜேஷ் பைலட்.

'அவரே சிக்கலான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார். இந்த நிலையில் அவரைப் பதவி விலகச் சொல்வது நியாயமா ?' என்கிற எனது கேள்வியை ராஜேஷ் பைலட் ரசிக்கவில்லை. என்னை முறைத்து பார்த்தபடி திருப்பிக் கேட்டார்-

'அவரது சிக்கல்கள் முக்கியமா, இல்லை காங்கிரஸ் சிக்கலில் இருப்பது முக்கியமா? காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் கைது செய்யப்படுகிறார், சிறைக்குப் போகிறார் என்றால் எவ்வளவு கேவலம்? நம்மால் கட்சிக்குப் புகழ் சேர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, பழி வரக்கூடாது என்பது தானே நல்ல தலைவருக்கான அடையாளம். அது நரசிம்மராவ்ஜிக்கு தெரிய வேண்டுமா இல்லையா?'

'பி.வி. ராஜிநாமா செய்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். கட்சித் தலைவராக சீதாராம் கேசரி பொறுப்பேற்றது போல, நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகவும் அவரே தன்னை நியமித்துக் கொள்ள மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதை நீங்கள் விரும்புகிறீர்களா?'

'அது அடுத்த கட்ட பிரச்னை. அதற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.'

'அடுத்ததாக யார் நாடாளுமன்ற கட்சித் தலைவராவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?'

'அவரைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும்.'

'நீங்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட நினைக்கிறீர்களா?'

'நினைக்கக் கூடாதா, அதற்கான தகுதி எனக்கு இல்லையா? இப்படி எல்லாம் கேட்க நான் தயாராக இல்லை. இப்போது பதவி காலியாக இல்லை. நரசிம்மராவ்ஜி பதவி விலகட்டும். அதற்குப் பிறகு இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்'

'நான் சொன்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களை நாடாளுமன்றக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.'

சிரித்தபடியே என் கைகளை பற்றி கொண்டு ராஜேஷ் பைலட் கேட்டார்-

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அதற்கு என்ன காரணம்?'

'வேறொன்றுமில்லை, உங்கள் வயதும் உங்களுக்கு இருக்கும் வேகமும் தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் அதற்கு இடம் கிடையாது என்பதுதான் நான் அறிந்த வரையில் உண்மை. சரத் பவார் கட்டாயம் போட்டியில் குதிப்பார். கருணாகரனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. தானே ஏன் நாடாளுமன்றக் கட்சி தலைவராகக் கூடாது என்று சீதாராம் கேசரி விரும்புகிறார். பொதுவான வேட்பாளராக பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொள்ளப்படலாம். இதில் உங்களுக்கு ஏது இடம்?'

நான் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்ட ராஜேஷ் பைலட் மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொன்ன அந்த வார்த்தைகள் இப்போதும் எனது காதில் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.

'இவர்களிடமிருந்து எல்லாம் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றி இளைஞர்களுக்கான, புதியவர்களுக்கான கட்சியாக மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொன்ன தலைவர்களில் யார் கையில் காங்கிரஸ் போனாலும் அது பழையபடி தனிப்பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியாக உயராது. எனது பயமெல்லாம் இவர்கள் ஒதுங்கி இருக்கும் சோனியா காந்தியை வலிய வரவழைத்து, அவரது காலடியில் கட்சியை சமர்ப்பித்து விடுவார்களோ என்பதுதான். அப்படி நடந்தால் அதைவிட துரதிஷ்டம் வேறு எதுவுமே இருக்க முடியாது.'

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'

'பாரதிய ஜனதா கட்சி ஏற்கெனவே வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது மக்களவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக உயர்ந்துவிட்டது. சோனியா காந்தியோ அவரது குடும்பமோ தலைமைப் பொறுப்புக்கு வந்தால், பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது என்பது கனவாகத் தான் இருக்கும்'

நாங்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்து விட்டோம். காரில் இருந்து இறங்கி அவர் உள்ளே போனார், நான் வெளியே காத்திருந்தேன்.

நரசிம்ம ராவ், பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, பிரணாப் முகர்ஜி, கருணாகரன் என்று ஒருவர் பின் ஒருவராக வந்தனர். உள்ளே போனார்கள்.

நரசிம்மராவைத் தொடர்ந்து வந்த காரில் ஸ்ரீகாந்த் ஜிச்கரும், கே.கே. திவாரியும் வந்தனர். என்னை பார்த்ததும் ஜிச்கர் அருகில் வந்தார். நாங்கள் ஓர் ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டோம்.

'என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?.'

'பெரியவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எல்லோரும் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் ராஜினாமா செய்யத் தயாராக இருந்தார். நாங்கள் தான் அவர்கள் தீர்மானம் கொண்டு வரட்டும் என்று சொல்லி இருக்கிறோம்.'

'அவரை ராஜிநாமா செய்யக் கோரும் தீர்மானத்தில் 24 பேரிடம் ஏற்கெனவே கையொப்பம் பெறப்பட்டிருப்பதாக ராஜேஷ் பைலட் சொல்கிறார்.'

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியே வந்தார் பி.வி. நரசிம்மராவ். அவர் தனது காரில் ஏறிச் சென்றார். ஸ்ரீகாந்த் ஜிச்கரும் அவர் பின்னால் கிளம்பிவிட்டார். பத்தே நிமிடங்களில் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டம் முடிந்து விட்டது.

வெளியே வந்த ராஜேஷ் பைலட்டின் காரில் நானும் இணைந்து கொண்டேன்.

'கூட்டத்தில் என்ன நடந்தது ? நரசிம்மராவ் ராஜிநாமா செய்ய சம்மதித்தாரா?' என்று ஆர்வத்துடன் கேட்ட என்னைப் பார்த்து சிரித்தார் ராஜேஷ் பைலட்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.