பேல் பூரி

காலச்சுவடுகள் பேசும் கிராமிய கதைகள்

கண்டது

(திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'குவளைக்கால்'

-பத்மா சாரதி, தஞ்சை.

(திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'காவல்கிணறு'

(விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'மல்லாங்கிணறு'

(தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'நாலுமூலைகிணறு'

-ஜே.எல்.புனிதவதி, கோவை.

(கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சின்ன சேலம் அருகே உள்ள ஊரின் பெயர்)

'வீரபயங்கரம்'

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

கேட்டது

(நாகப்பட்டினம் கடற்கரையில் இருவர் பேசியது)

'அடிக்கடி குடும்பத்தோடு பீச்சுக்குப் போனது தப்பா போச்சு..'

'என்னாச்சு பிச்சுமணி சார்..'

'என்னை பிச்சுமணின்னு கூப்பிடாம,

எல்லோரும்'பீச்சுமணி'என்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்களே..'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

(சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருவர்..)

'புதுசா வாங்கித் தந்த ஜீன்ஸ் மாப்பிள்ளைக்குப்பிடிக்கலை..?'

'ஏன் பிடிக்கலை..'

'கிழிசல் கம்மியா இருக்காம்...'

-பர்வதவர்த்தினி, பம்மல்.

(நாகர்கோவிலில் உள்ள ஓர் பாடப் புத்தகங்கள் விற்பனைக் கடையில் பள்ளி மாணவனும், அவனுடைய தந்தையும்...)

'அப்பா.. இந்தக் கடையில் பிச்சைக்காரங்களைக் கூட விற்குறாங்களா?'

'ஏன்டா இப்படி கேக்குற..?'

'போர்டில் நோட்டு, பென்சில், ரப்பர்.. கிடைக்குமுன்னு போட்டிருக்கிறாங்களே.. ரப்பர்னா பிச்சைக்காரன்தானே..'

'உன்னை படிக்கவைச்சதே தப்புடா...'

-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

நாளை நல்லபடியாக மாறிவிடும் என்பது நம்பிக்கை.

அப்படி மாறவில்லையெனில் சமாளித்துவிடலாம் என்பது

தன்னம்பிக்கை.

- ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

மைக்ரோ கதை

தனது வீட்டுக்கு சற்று தொலைவில் நடைபாதையில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையில், கடைக்காரரிடம் 70 ரூபாய் சொன்ன புத்தகத்தை அறுபதுக்கு பேரம் பேசி வீட்டுக்கு வந்தாள் வேதவள்ளி.

புத்தகத்தைப் பிரித்து படிக்கத் தொடங்கியவள் ஆச்சரியப்பட்டாள்.

அந்தப் புத்தகத்தில் எப்போதோ வைக்கப்பட்ட நூறு ரூபாய் இருந்தது தெரிந்தது. அதை எடுத்துகொண்டு புத்தக வியாபாரியிடம் கொடுத்தாள்.

அவரோ, 'புத்தகத்தை வாங்கிய பிறகு அது உங்களுக்கே சொந்தம்' என மறுத்துவிட்டார்.

அவர் ஏழ்மையிலும் நேர்மையாக இருந்ததை அறிந்த வேதவள்ளி அந்தப் பணத்தை எடுத்துகொள்ள விரும்பாமல், அங்கே கோயில் வெளியே அமர்ந்திருந்த வயதான மூதாட்டியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சந்தோஷமாய் வீட்டுக்குச் சென்றாள்.

-இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

எஸ்எம்எஸ்

ஊர் மெச்சும் முன் தாய் மெச்சட்டும்.

-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.

அப்படீங்களா!

விநாடிக்கு சுமார் 99,000 தேடுதல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதை எழுத்து, குரல், புகைப்படம் ஆகிய வடிவில் தேடுதல் செய்ய முடியும். தற்போது புதிய சேவையாக வட்டமிட்டு தேடும் சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

'சாக்கிள் டூ சர்ச்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சேவையின்படி, ஸ்மார்ட்போனில் உள்ள ஹோம் பட்டனை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் செயல்படத் தொடங்கிவிடும்.

அதன்பின்பு ஸ்மார்ட்போன் திரையில் தெரியும் எந்தவொரு பொருளோ, எழுத்தோ என எதுவாக இருந்தாலும் அதை வட்டமிட வேண்டும். அப்படி வட்டமிட்டு சுட்டிக்காட்டிய மறுநொடியில், அந்த பொருள் தொடர்பான தகவலை கூகுள் ஏஐ தேடி, உங்களுக்கு அதுதொடர்பான தகவலை வழங்கும்.

வீடியோ அல்லது புகைப்படத்தில் இருக்கும் வார்த்தை தொடர்பான தகவல்களை வட்டமிட்டாலும் அதன் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் வரும் நாள்களில் சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன்களான கூகுள் பிக்சலிலும், பின்னர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com