பேல் பூரி

ரோபோடிக் தொழில்நுட்பம் சாலை பள்ளங்களை சரிசெய்ய புதிய புரட்சி
பேல் பூரி

கண்டது

(அம்பத்தூரில் உள்ள டீக்கடை போர்டில் எழுதியிருந்தது)

'ஒரு டீ சொல்லு..'

-கே.அசோகன், சென்னை.

(சென்னை பூந்தமல்லியில் உள்ள நகைக்கடை முன் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தில்...)

'கோபப்படாமலேயே இருந்து விடாதீர்கள்.

கோமாளியாக்கிவிடுவார்கள்!'

-எஸ்.வடிவு, ஆவடி.

(நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டு கழிவுநீர் அகற்றும் நிறுவன வாகனத்தின் பெயர்)

'விடாமுயற்சி'

-அ.இரவீந்திரன், கன்னியாகுமரி.

கேட்டது

(திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் நர்ஸூம், நோயாளியும் பேசியது)

'சொல்லுங்க சார்.. உங்களுக்கு என்ன ப்ராப்ளம்...'

'நீ தான் எனக்கு பிராப்ளம்..'

'என்ன நீ நான்னு மரியாதை குறையுது..'

'சாரிம்மா.. நான் சொன்னது KNEE ப்ராப்ளம்..'

-சம்பத்குமாரி, பொன்மலை.

(கோவை இடையர்பாளையத்தில் இருவர்..)

'என்ன சார்.. வெளியூர் போகும்போது வீட்டுக்கு சாதாரண பூட்டும் வாட்டர் டேங்குக்கு ஸ்பெஷல் பூட்டும் போடுறீங்க?'

'எங்க வீட்டில் விலை உயர்ந்த பொருள்

தண்ணீர் மட்டும்தான் சார்...'

-எம்.பி.தினேஷ், கோவை-25.

(காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

'மச்சி.. பயம்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்துட்டேன்டா..'

'பெண்டாட்டியை பார்த்தா பம்மறியே அதுக்குப் பேர் என்னடா..?'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

யோசிக்கிறாங்கப்பா!

உடன்பிறந்தவர்களின் உண்மையான முகம் சொத்து பிரிக்கும்போது தெரியும்.

-கல்கி, சிதம்பரம்,

மைக்ரோ கதை

கல்யாண பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எதிரே ஒரு முரட்டு ஆசாமி வந்து நின்று, என் பக்கத்தில் இருந்தவரை முறைத்தார்.

'ஏய்.. என்கிட்ட வாங்கின 2 ஆயிரம் ரூபாய் கடனை எப்போதுதான் தர்றே. வசமாய் மாட்டினே.. குடுடா..' என்று கத்தினார் முரட்டு ஆசாமி.

'அண்ணாச்சி அடுத்த வாரம் கொடுத்துடறேன். என்னை அவமானப்படுத்த வேண்டாம்..' என்று கெஞ்சினார் பக்கத்து இருக்கை ஆசாமி. முரட்டு ஆசாமி நகரவே இல்லை.

உடனே மொய் எழுத வைத்திருந்த பணம் 2 ஆயிரத்தை இடது கையில் எடுத்து, முரட்டு ஆசாமியிடம் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியோடு பெற, பக்கத்து இருக்கை ஆசாமியின் முகத்தில் மகிழ்ச்சி பேரலை. உதவி செய்திட்ட திருப்தி எனக்கு..!

-கு.அருணாசலம், தென்காசி.

எஸ்எம்எஸ்

தேவைக்குதான் வணங்குகிறோம் இறைவனை.

தேவையே நீதான் என்று எப்போது வணங்கப் போகிறோம்.

-பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

அப்படீங்களா!

பள்ளங்கள் இல்லாத சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, பெரும் சேதம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை வெளிநாடுகளிலும் காணப்படுகிறது.

சற்று கவனம் தவறினால் சாலை விபத்து ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும். விபத்து ஏற்பட்டதற்கு சாலையில் இருந்த பள்ளம்தான் காரணம் என்று வழக்கு தொடர முடியாது. இந்தப் பிரச்னைக்கு பிரட்டனில் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன், கணினியில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் - ஏஐ தற்போது முதல் முறையாக சாலை பள்ளங்களை சரி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ, சாலைகளில் உள்ள பள்ளங்களை தானாக கண்டறிந்து சரி செய்து விடுகிறது.

பிரிட்டனில் உள்ள லிவர்ஃபூல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹெட்போர்ட்ஷைர் நகரத்தினர் இந்த ரோபோவை தயாரித்துள்ளனர்.

'ரோபோடிஸ்3டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ சாலையில் உள்ள பள்ளங்களைத் தானாகக் கண்டறிந்து ஆராய்ந்து அந்தப் பள்ளத்தை சரி செய்கிறது. பார்ப்பதற்கு

பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ரோபோ வாகனத்தில் சாலையை சீரமைப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடை

பெற்றுள்ளது. உலகின் முதல் ஏஐ பொருத்தப்பட்டுள்ள சாலை சரி செய்யும் ரோபோ இதுவாகும். இந்தியாவில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டால் இதன் தேவை பல மடங்கு பெருகும் என்பது நிச்சயம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com