பேல் பூரி

வீழ்ந்தால் அழாதே எழுந்திரு
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

கண்டது

(நாகர்கோவில் நகரில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)

'வீழ்ந்தால் அழாதே எழுந்திரு''

-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

(கரூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'பவித்ரம்''

-கு.பாலசுப்பிரமணி, இடையகோட்டை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'குதிரைபந்திவிளை''

-அ.ரவீந்திரன், குஞ்சன்விளை.

கேட்டது

(கோவையில் ஓடிய நகரப் பேருந்து ஒன்றில் நடத்துநரும், பயணியும்..)

'ரயில்வே ஸ்டேஷன் இறங்குதா...''

'அது இறங்காது.. நான்தான் இறங்கணும்...''

'ஐயா.. தமிழ்ப் புலவரே... சீக்கிரம் இறங்குங்க..?''

-எம்.சுப்பையா, கோவை.

(புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே தாயும், மகனும்...)

'டேய் மணி... உழவர் சந்தையில் போய் காய்கறி வாங்கிட்டு வா.. அதுவும் விவசாயி வைச்சிருக்கிற கடையா பார்த்து வாங்கு.. அங்கதான் பிரஷ்ஷா இருக்கும்...''

'அதெப்படிம்மா.. விவசாயி வெச்சிருக்கிற கடைன்னு எப்படி கண்டுபிடிக்கிறது..''

'உழவர் சந்தையில் கடை வைச்சிருந்தா அவன் வியாபாரி. அதுவே ரோட்டோரம், திறந்தவெளியில் கடை வைச்சிருந்தா அவன் விவசாயி...''

-உ.அரசு, புதுச்சேரி.

(திருச்சியில் சாலையோர சிற்றுண்டிக் கடை ஒன்றில்...)

'ஏம்பா.. முப்பது ரூபாய்க்கு டிபன் சாப்பிட முடியுமா?''

'ஓ.. ஒரு இட்லி அரை வடை, அரை தோசை சாப்பிடலாமே...''

-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

சிலர் புன்னகைக்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும்,

சிலரது கண்ணீருக்கு நாம் காரணமாக இல்லாமல் இருப்பதே சிறந்தது.

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

ஒருவரை நீண்ட நாள்களாகக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல், 'நீதிபதி அவர்களே.. யாரை கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டாரோ, அவர் இன்னும் ஐந்து நிமிடங்களில் நீதிமன்றக் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்தவுடன் என் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்'' என்று கூறி அமர்ந்தார்.

நீதிமன்றத்தில்இருந்த எல்லோரும் கதவையே பார்த்தனர். பத்து நிமிடங்கள் கழிந்தும், யாரும் வரவில்லை.

உடனே வக்கீல் எழுந்து, 'காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டார் என்பதை யாரும் முழுமையாக நம்பாமல் வாசலையே பார்த்தீர்கள். ஆகவே, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து விடுதலை செய்ய வேண்டும்'' என்று கூறி கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி அளித்த தீர்ப்பில், 'அந்த பத்து நிமிடங்கள் எல்லோரும் வாயிலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒரு தடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் பார்க்கவில்லையே? ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

-த.நாகராஜன், சிவகாசி.

எஸ்.எம்.எஸ்.

வீடு உயர்ந்திருப்பது பார்ப்பதற்கு நல்லது.

உள்ளம் உயர்ந்திருப்பது வாழ்க்கைக்கு நல்லது.

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்ட சாட்பாட், வாட்ஸ் ஆஃப் செயலியை தேடல் பயன்பாட்டு செயலியாகவும் மேம்படுத்தியுள்ளது. பயனாளர்களை அதிகரிக்க, புதிய சேவைகளை வாட்ஸ் ஆஃப்பின் தாய் நிறுவனமான மெட்டா தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

வாட்ஸ் ஆப்பில், சேமிக்கப்படாத எண்களில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் தகவல்கள் வந்து கொண்டிருந்தால் அதை வாட்ஸ் ஆஃப்பே தானாக தடை செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, புதிய எண்களில் இருந்து விளம்பரம் உள்ளிட்ட ஸ்பேம் தகவல்கள்தான் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இவற்றை நாம் அழிக்காமல் அப்படியே வைத்துவிட்டால், ஸ்பேம் தகவல்களால் கைப்பேசியின் செயல்பாடு திறன் குறைந்து

விடும். இதைத்தடுக்க, புதிய எண்ணில் இருந்து தொடர்ந்து தகவல்கள் பகிரப்பட்டால், அந்தத் தகவல்கள் முடக்கப்படும். அதன்பின்னர் அந்தத் தகவல்களின் வருகை குறைந்தால் தானாகவே மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

இந்த சேவையைத் தொடங்க வாட்ஸ் ஆஃப்பின் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி - செட்டிங்ஸ் - பிரைவசி - அட்வான்ஸ்டு - பிளாக் அன்னோன் அக்கவுண்ட் மேசேஜஸ் என்பதை தேர்வு செய்தால் இந்த சேவை தொங்கிவிடலாம். ஆன்ட்ராய்டு அப்டேடட் வெர்ஷன் 2.24.20.16-இல் இந்தச் சேவை பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வாட்ஸ் ஆஃப் பயன்பாட்டாளர்களுக்கும் இது அறிமுகமாகலாம்.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.