பேல் பூரி

'என் தம்பி ரொம்பவே பயந்த சுபாவம் உள்ளவன். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்..''
பேல் பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(அணைக்கரை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'கோடாலி''

-வீர.செல்வம், பந்தநல்லூர்.

(நாகப்பட்டினம்- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலின் பெயர்)

'குற்றம்புரிந்தான்வாய்க்கால்''

-நாகஜோதி, நாகப்பட்டினம்.

(திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'குவளைக்கன்னி, உச்சிபொத்தை, தேன்பொத்தை, வாவாநகரம்.''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

கேட்டது

(திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றின் அருகே இருவர் பேசியது)

'என் தம்பி ரொம்பவே பயந்த சுபாவம் உள்ளவன். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்..''

'ஏன்?''

'அதுல 'ஆவி' இருக்குமாம்...''

-எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.

(பெரியகுளம் மருத்துவமனை ஒன்றின் முன் இருவர்...)

'வாழ்க்கையே ரொம்ப முரண்பாடா இருக்கு..?''

'ஏன்?''

'ரேஷன் கடைக்குப் போயிருந்தேன். எனக்கு சுகர் இல்லைன்னு சொல்லிட்டாங்க? ஆஸ்பத்திரிக்கு வந்தேன். எனக்கு சுகர் இருக்குன்னு சொல்றாங்க?''

-சி.செல்லமுத்து, மேல்மங்கலம்.

(திருச்சியில் திருமண பந்தியில் இருவர்..)

'இலையில்தான் நிறைய சாப்பாடு இருக்கே.. மறுபடியும் எதுக்கு கேட்டு வாங்கறீங்க?''

'அவரு அடுத்த ரவுண்ட் வர்றதுக்கு லேட் ஆகும். ரொம்பவே பசி.. கூடுதலாக வாங்கிக்கிறேன். அதான்...''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்றுக் கொள்ளுதல், மாற்றிக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற மூவகைத் தீர்வு உண்டு.

ஏற்றுகொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

மாற்ற முடியாத விஷயங்களை விட்டுவிடுவது நல்லது.

-பத்மா சாரதி, தஞ்சாவூர்.

மைக்ரோ கதை

தன் மகனை முதல்முறையாக அரசியல் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார் தந்தை.

கூட்டம் அதிகம். அவர்கள் மேடையைவிட்டு வெகுதொலைவில் இருந்தனர்.

ஆனாலும், மரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் தலைவரின் குரலைக் கேட்டு திருப்தி அடைந்தார் தந்தை.

வீட்டுக்கு வந்த மகனிடம் அம்மாவோ, 'அந்தத் தலைவரைப் பார்த்தியாம்மா?'' என்று கேட்டார்.

'இருட்டில் மரத்து மேல உட்கார்ந்துகொண்டு சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். முகத்தைப் பார்க்க முடியவில்லையே அம்மா'' என்றான் சிறுவன்.

-நெ.இராமகிருஷ்ணன். சென்னை-74.

எஸ்எம்எஸ்

இரவல் கொடுக்கல்- வாங்கல் இயலாத ஒரே மூலதனம் தன்னம்பிக்கை.

-எம்.ரவீந்திரன், திருமருகல்.

அப்படீங்களா!

பத்து ஆண்டுகள் பழைமையான அறிதிறன்பேசிகளில் வாட்ஸ் ஆஃப் செயலி நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆஃப்பில் தற்போது அறிமுகமாகி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ,) சேவைகள் இந்தப் பழைய அறிதிறன்பேசிகளில் இயங்காது என்பதால், 2013- இல் அறிமுகமான ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்ஷன் அறிதிறன் பேசிகளுக்கு வாட்ஸ் ஆஃப் அப்டேட்களை நிறுத்தி உள்ளது.

எனினும், வழக்கமான தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிய வெர்ஷன் உள்ள அறிதிறன்பேசிகளைப் புதிதாக வாங்கினால்தான் வாட்ஸ் ஆஃப் சேவையைப் பயன்படுத்த முடியும்.

வாட்ஸ் ஆஃப் சேவை நிறுத்தப்பட்ட அறிதிறன்பேசிகள்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்3, கேலக்ஸி நோட் 2, கேலக்ஸி எஸ் 4 மினி, மோட்டோரோலா - மோட்டோ ஜி (1 ஜென்), ரேசர் எச்டி, மோட்டா இ 2014, ஹெட்டிசி - ஒன் எக்ஸ், ஒன் எக்ஸ்+, டிசைர் 500, டிசைர் 601, எல்ஜி - நெக்ஸஸ் 4, ஜி2 மினி, எல் 90, சோனி - எக்ஸ்பிரீயா இசட், எஸ்பி, டி ஆகியவை உள்ளன.

2013-இல் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு கிட்கேட்டுதான் அந்த நிறுவனத்தின் 11-ஆவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இதற்கு கூகுள் நிறுவனமும் அப்டேட்டை நிறுத்தி உள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.