நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது.
அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உதவி வருகிறார். சிகிச்சைக்கான அனைத்து செலவுக்கான பில், மருத்துவமனையில் வங்கி கணக்கு விவரம் உள்ளிட்டவற்றை அனுப்பி வையுங்கள் அந்தப் பணத்தை அனுப்பச் சொல்கிறேன் எனக்கூறியிருக்கிறார் ரஜினி. ஆனால், சத்யநாராயணன் உடன் இருந்தவர்கள் பில்லை அனுப்பவில்லை. இந்த நிலையில் இதுவரை ஆன செலவு விவரங்கள் அனுப்பப்பட்டது. உடனே ரஜினி பணத்தை செலுத்தி விட்டார்.
மாநாட்டிற்கு பிறகு கட்சி வேலைகள் தீவிரமாக இருந்து வருவதால், 'தளபதி 69' படத்திற்கு மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளே ஒதுக்கி கொடுத்து நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பை கூட, ஹைதராபாத்தில் வைக்க வேண்டாம் என அவர் சொல்லியிருப்பதால், சென்னையில் பையனூரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
ரஜினியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு அங்கே தான் நடந்தது. கலை இயக்குநர் வி.செல்வகுமார் கைவண்ணத்தில் போலீஸ் நிலையம் முதல் தொழிற்சாலை வரை பல்வேறு செட்டுகள் அமைத்து படமாக்கி வருகின்றனர். இதுவரை 40 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்திருக்கலாம் என்கின்றனர். விஜய்யின் தேதிகள் இல்லாத நாட்களில் இதர நடிகர்களின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
10 வருடங்களுக்கு பின் சல்மான்கானை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.. இவர் கடைசியாக பாலிவுட்டில் அகிரா திரைப்படத்தை இயக்கியிருந்தார். 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ. ஆர். முருகதாஸின் ஸ்டாலின் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்தான் ஜெய் ஹோ.
அத்திரைப்படம் வெளியாகி 10 வருட இடைவெளிக்குப் பிறகு சல்மான் கானை வைத்து இயக்கியிருக்கிறார் முருகதாஸ். படத்தின் பெயர் சிக்கந்தர். இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் சந்தோஷ் நாராயணன்
விஜய் ஆண்டனி 3.0 கான்சர்ட் மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் சில சூழல்களால் அந்த கான்சர்ட் தற்போது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதுகுறித்து பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி, 'எதிர்பார்க்காத சில விஷயங்களாலும், அதிகாரிகளின் ஆலோசனையின்படி தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 கான்சர்ட் தள்ளி வைக்கப்படுகிறது.
கடைசி நேர மாற்றத்திற்காகவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கும் மன்னிப்பை கோருகிறேன். கான்சர்ட் நடைபெறவிருக்கும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். கான்சர்ட் நடக்கும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.