ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இயற்ஹைகயை மதித்து நடந்தால்...

மனிதர்களுக்கான காலைக்கடன்களில் முக்கியமானவை எவை என்று ஆயுர்வேதம் கூறியுள்ளதா? அதுபற்றிய விவரமறிந்தால் நன்மையடைவேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இயற்ஹைகயை மதித்து நடந்தால்...
Published on
Updated on
2 min read

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

மனிதர்களுக்கான காலைக்கடன்களில் முக்கியமானவை எவை என்று ஆயுர்வேதம் கூறியுள்ளதா? அதுபற்றிய விவரமறிந்தால் நன்மையடைவேன்.

-பார்கவி, திருச்சி.

'வைகறைத் துயிலெழு! மலஜலம் கழிப்பது காலைக்கடன்! இயற்கை மதித்து நட! அது உனக்கு கட்டாயம் உதவும்' என்கிறது ஆயுர்வேதம். கடன் என்பது செய்து தீர வேண்டிய கடமை வடிவில் உள்ள செயல். ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியத் தேவை உண்பதுபோல், அவசியத் தேவையான உடல் உபசாரம் இது. இதனைச் செய்யத் தவறுபவர்கள் பலர் நீடித்த சில்லரை நோய்களில் பல மணி நேரங்களையும் பொருளையும் வீணடிக்க நேரும். இயற்கையின் தண்டனை நிதானமாக வரும். ஆனால் கொடியது.

மலம், சிறுநீர் கழித்தவுடன் வாய் கொப்பளிப்பதையும், கை-கால் அலம்புவதையும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். சிலருக்கு காலையில் காபி சாப்பிட்டால்தான் மலம் வெளியேறுகிறது என்பார்கள். வேறு சிலருக்கு காலை உணவைச் சாப்பிட்டால்தான் போகிறது என்கின்றனர்.

இந்தநிலை பழக்கத்தாலும் வந்திருக்கலாம். விடியற்காலையில் லேசாகத் தோன்றிய உந்துதலைப் பொருட்படுத்தாதிருக்கலாம். உந்துதலின் முக்கியத்துவத்தை உணராமல் அதை அடக்கிவிடலாம். இவைத் தவறானவை எனத் தெரிந்தும், மெத்தனமாக இருப்பவர் நோய்களுக்கு முன்னுரிமை தருகின்றனர். சிலர் கவனத்துடன் ஆராய்ந்து, அதைத் தவிர்க்க, சுகம் காணலாம்.

நோயின்றி நீண்ட நாள் வாழ- விடியற்காலையில் மலம் முதலியவற்றை வெளியேற்றுவதே! இதனால் குடல் இரைச்சல், வயிற்றில் உப்புசம், கனம் முதலியவை ஏற்படாமல் இருக்கும். சிறுநீர், மலம் செல்லும் ஓட்டைகளைச் சுத்தமாக வைத்துகொள்வதால் நோய்கள் பல தோன்ற வாய்ப்பில்லாமையால் ஆயுள் நீள்கிறது. உடலின் அழகும் வலியும் கூடுகிறது. தூய்மை உணர்ச்சி ஓங்குகிறது. மனத் தளர்ச்சி, கெட்ட எண்ணங்கள் தோன்றுவதில்லை. அதனால் கெட்ட செயல்களில் ஈடுபாடு ஏற்படுவதில்லை.

வெளியில் சென்று வந்த பின்னர் முதலில் கைகளையும், கால்களையும் கழுவிக் கொள்வது சிறந்த பழக்கம். வாழ்நாளில் தீயவற்றில் இருந்து நம் உணர்வின்றியே நம்மை விலக்கித் தரக் கூடிய ஆழ்மனப் பயிற்சிக்கு உதவும். உள்மனக் கூர்மையை வளப்படுத்துவதே இத்தகைய பழக்கங்களின் நோக்கம்.

கைகால்களைக் கழுவுவதால் அழுக்கு நீங்குவது மட்டுமல்ல, உடல் களைப்பும் அயர்வும் நீங்கி புத்துணர்ச்சி பெறவும் நரம்புத் தளர்ச்சி நீங்கவும் கண்பார்வை மங்காதிருக்கவும் உதவும். தொற்றுநோய்களை உண்டாக்கும் நுண்ணியக் கிருமிகள் பாதிப்பதையும் இது தடுக்கும்.

ஸாக்ஸூம் பூட்ஸூம் அணிந்து வெளியே சென்று வருபவரும்கூட அவைகளை நீக்கிய பின் உடல், கை, கால்களைக் கழுவும்போது அவர்கள் பெறும் புத்துணர்ச்சியைக் கழுவுவதைப் பழக்கமாகக் கொள்பவரே அறிவர்.

காலைக் கடன்களில் பற்களைத் துலக்குதல், அடுத்துவரும் நிகழ்ச்சி, பல் தேய்பதற்கு முன் வாய் நிறைய நீர் நிரப்பிக் கொப்பளித்துத் துப்புதல் மிக அவசியம். இதனால் பற்பசையிலுள்ள ரசாயனக் கலவையால் வாயில் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உமிழ்நீர் ஆரோக்கியத்துக்கு சிற்றுண்டி, முழு உணவு, வெற்றிலைப் பாக்கு, பழம், பட்சணம், காபி, டீ முதலியற்றுக்குப் பின் வாயைக் குழப்பி அலம்புவதும், கொப்பளித்துத் துப்புவதும் நல்லது. உணவுக்கு முன் வாய் கொப்பளித்தால், வயிற்றுலுள்ள ஜீரணத்திரவங்கள் சுறுசுறுப்புப் பெறும்.

குளிர்ந்த நீரால் வாய் கொப்பளித்தால், நாவரட்சி அடங்கும். ஊத்த நாத்தம், தொண்டையின் கபப்பூச்சு அகலும். கண் முதலியவை தெளிவடையும். வென்னீரால் வாய் கொப்பளிக்க, நாக்கின் ருசியின்மை நீங்கும். எகிறுகள் கொழுத்திருத்தல், பற்களில் வலி நீங்கும். வாய் மொடமொட என உணவேற்கத் தயாராகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.