தேவவிரதன்
அங்கிச்சிம்மா என் பாதேவவிரதன்ட்டி. அவளுக்கு அந்தப் பெயர் காரணப் பெயர். இடுகுறிப்பெயரல்ல. 'அங்கிச்சி' என்று செல்லமாக அழைக்கப்பட்ட என் அம்மாவின் கடைசி தங்கை மங்களத்தின் பெயர். அதை என் தாய் வழிப் பாட்டிக்கு சூட்ட காரணம் என் மூத்த சகோதரியாக இருக்க வேண்டும். தன் அம்மாவை 'அம்மா' என்றும், கிட்டத்தட்ட தன் வயதில் உள்ள அம்மாவின் 'அங்கிச்சி' என அழைக்கப்பட்ட கடைசி தங்கையின் தாயை 'அங்கிச்சிம்மா' என்றும் அழைக்க அதுவே தொடர்ந்து பாட்டியின் பெயராயிற்று என்று பின்னாளில் அறிந்துகொண்டேன்.
நான் ஏன் அங்கிச்சிமாவை நினைவு கூறுகிறேன் என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு.
நான் என் குடும்பத்தில் மிகக் கடைசியில் பிறந்தவன். வெகுநாள் இடைவெளிக்குப் பிறகு. எனக்கு நினைவு தெரிந்த நேரத்தில் அங்கிச்சிம்மா நல்ல பாட்டியாகி விட்டாள். 'நான் அறிந்த பெண்களிலேயே மிகவும் அடக்கமான பெண்மணி யார்?' என்று இன்னும் என்னைக் கேட்டால் நான் தயக்கமில்லாமல் 'அங்கிச்சிம்மா' என்றுதான் சொல்லுவேன். அவள் அதிர்ந்தோ, உரத்தக் குரலிலோ பேசி நான் கேட்டதில்லை. 'சாது' என்றால் பரம சாது. யார் அவளை என்ன திட்டினாலும் பதில் பேசத் தெரியாது. மௌனமாக கண்ணீர்தான் விடுவாள், ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு.
என் தாத்தா 'லாயர்' என்று பெயரில் ஒருநாள் கூட தொழில் செய்யாத ஒரு முசுடு. அவருடன் பேச எல்லோருமே பயப்படுவார்கள். ஆனால், அவர் அதை எதோ ஒரு கித்தாப்பாக நினைத்துகொள்வார்.
அங்கிச்சிம்மா மாநிறத்துக்கும் கம்மி; கருப்பு என்றே சொல்லலாம். ஆனால், முகத்தில் எப்போதும் சாந்தம்தான் தவழும். மடிசார் தான் கட்டிக் கொண்டிருப்பாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு அவளுக்கு பாந்தமாக இருக்கும். கழுத்தில் திருமாங்கல்யச் சங்கிலியைத் தவிர, ஒரு பவழ மாலை போன்ற எதோ ஒன்று இருக்கும். காதில் சாதாரண வெள்ளைக் கல் தோடுகளும், ஒரு மூக்கில் வெள்ளைக் கல் பேசரியும், மற்றொன்றில் முத்து மூக்குத்தியும் அணிந்திருப்பாள். ஆனால், மொத்தத்தில் பார்க்க லட்சுமிகரமாக இருப்பாள். எழுதப் படிக்க தெரியாது; ஏதாவது புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு புரட்டி கொண்டிருந்தபோது நான் சிறுவனாக போய் கேட்டிருக்கிறேன்.
'என்ன பாட்டி பாக்கறே?' என்று கேட்பேன். சன்னமாகச் சிரிப்பாள்.
'எனக்கென்னடா குழந்தை? உங்களைப்போல் படிப்பா வாசிப்பா என்ன உண்டு? எதோ பொம்மை பார்க்கிறேன், அவ்வளவுதான்' என்பாள்.
'நீ ஏன் பாட்டி படிக்கலை?' என்று கேட்டால், 'எனக்கென்னடா தெரியும்? என் அப்பா, அம்மாவைத்தான் கேட்கணும். பொண்ணாய் பொறந்தால் ஆத்துக் காரியம் பண்ண தெரிஞ்சால் போதுமுன்னு சொல்லிட்டா' என்பாள்.
ஆனால், வீட்டு வேலை அத்தனையும் மாங்கு, மாங்குன்னு செய்வாள். சில சமயங்களில், என் அம்மாவும், பெரியம்மாவும் கூட அங்கிச்சிம்மாவை தட்டாமலையாட்டுவார்கள். அவள் தப்பு செய்தால் தொலைந்தாள்; திட்டுகிற திட்டிலும், பேச்சிலும் அவளை குத்துகுத்து கண்ணீருக்கு அழ அடித்து விடுவார்கள். அப்படியோர் வாயில்லா பூச்சி அங்கிச்சிம்மா.
அவளை அவள் பெற்ற பிள்ளைகளோ, பெண்களுமே வைத்துகொண்டாடவில்லை. பிறர் மனதைக் கவரும் வகையில் அவளிடம் எதுவுமேயில்லையே? ஒருசில எழுத்தாளர்கள் தங்களின் அந்தக் கால பாட்டிகள் மிக சாதுரியமானவர்களாக இருந்ததாக எழுதியதை படிக்கும்போது, எனக்கு அங்கிச்சிம்மாவின் ஞாபகம் வரும். அந்தப் பாட்டிகள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும். என் பாட்டி புண்ணியம் செய்யவில்லை. அப்படியும் ஒரேயடியாக சொல்ல முடியாது. 'ரிஷி பஞ்சமி' விரதம் என்ற எதோ ஒன்றை பாட்டி செய்த நினைவு புகை போல் இருக்கிறது. அவற்றை எல்லாம் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்வி கேட்டு அறிந்துகொள்ளும் சாதுர்யமோ, வயதோ எனக்கு இல்லை.
அவள் பெற்றது மூன்று பெண்களும் மூன்று ஆண்களும். அவரவர் பெரியவர்களாகி கிராமத்தைவிட்டு விலகி நகரம் சென்ற பின்னர், கிராமத்தில் என் அம்மாவுடன் இருந்த அங்கச்சிம்மாவை யாரும் சட்டை செய்யவில்லை.
ஒருநிலையில், எங்கள் குடும்பமும் அதிர்ந்தது. பாட்டி வேறு வழில்லாமல் மேட்டூரில் இருந்த என் பெரிய மாமாவின் வீட்டில் தாத்தாவுடன் அடைக்கலம் புக வேண்டியதாயிற்று. தாத்தாவுக்கு 'பார்கின்சன்' நோய் வந்து அவருக்கு பணிவிடை செய்ய அவள்தான் வேண்டி இருந்தது. ஒரு சப்தம், ஒரு வார்த்தை, ஒரு முணுமுணுப்பு இல்லாமல் தன் கடமை என்று அவரை கவனித்துகொண்டதோடு ஓரளவுக்கு வீட்டு வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த ஒரு சில நகைகளும் போயின. திருமாங்கல்யமே மஞ்சள் சரட்டில் தொங்கியது. காதில் இருந்த அந்த சிவப்புத் தோடும், மூக்குத்திகளும்தான். அவை அதிகம் விலை பெறாதவை. திருமாங்கல்யம் ஒன்றுதான் தங்கம். கைகளிலும் பித்தளை வளைகள். எல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டதில், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியத்தில் அடிபட்டு போயின.
தாத்தாவும் ஒருநாள் போய்சேர்ந்தார். அங்கிச்சிம்மா தானே வலுவில் தன்னை அலங்கோலம் செய்துகொள்ள ஒப்புதல் கொடுத்தாள். குடும்பம் ஒன்றும் அவளை வற்புறுத்தவில்லை. அதே சமயம் மகள்களோ (அதில் ஒருத்தி பால்ய விதவை, ஏனோ என் தாத்தா அவளுக்கு மொட்டை அடிக்கவில்லை), மருமகள்களோ, 'வேண்டாமே, இது தேவையா?' என்றும் சொல்லவில்லை. சவரத் தொழிலாளி வந்து தலையை மொட்டை அடித்தபோது, சிறு பையனாக பார்த்துகொண்டிருந்த எனக்குத்தான் அழுகை வந்தது. ஏன் என்று தெரியவில்லை. எனக்கு அங்கிச்சிம்மா எப்போதும் அந்த பெரிய குங்கும பொட்டோடு பார்த்த முகம்தான் நினைவுக்கு வந்து துக்கம் முட்டியது. வண்ணச்சேலைகள் ஒதுக்கப்பட்டு நார்மடி புடவைதான் பிறகு. ஆனாலும் ஜாதிக்கட்டு மடிசார்தான். பாட்டிக்கென்று எந்த தனி ஆசைகளும் இல்லாத ஒரு ஜென்மம் என்றே தோன்றியது.
அதற்கு பிறகு அங்கிச்சிம்மாவின் வாழ்க்கை இன்னும் கஷ்டம் அடைந்தது. அவள் இருக்கும் இடத்திற்கு எவரும், குடும்ப, இளம்பெண்கள் செல்ல வேண்டாம் என்று மறைமுகமான உத்தரவு போடப்பட்டதோ என்று நான் நினைக்கிறேன். எந்தப் பிள்ளையின் வீட்டில் இருந்தாலும் ஒதுக்காக ஓரிடத்தில் அங்கிச்சிம்மா உட்கார்ந்திருப்பாள். காய்கறிகள் நறுக்குவது, வேறு எதாவது மாவு பிசைவது அல்லது முறுக்கு சுற்றுவது போன்ற வேலைகள் அவளுக்கு தரப்படும். அவளும் செய்வாள். ஆனால், ஒழுங்காகச் செய்தால் பாராட்டு வராது. தப்பு செய்தால், அது சிறியதாக இருந்தாலும் வசவு நிறைய விழும். நான் முன்னே சொன்னது போல் அமைதியாக கண்ணீர் விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள்.
பார்வை பழுதடைந்ததால் சோடா புட்டி கண்ணாடி போல ஒன்றை போட்டிருப்பாள். அப்பவும் அவளுக்கு கண் பார்வை அவ்வளவாக இல்லை. அதை பற்றி எவரும் சட்டை செய்யவில்லை. ஏன், அவளே பொருள்படுத்தவில்லை. அவளிடம் யாரும் பேச மாட்டார்கள்; அவளும் யாரிடமும் எதுவும் கேட்க மாட்டாள். அப்படியே எதாவது கேட்டாலும் பதில் மருமகளோ, பேத்தியோ, பிள்ளையோ, பேரனோ அவர்களிடமிருந்து எதிர்மறையாகவே வரும்.
அதற்கு காரணங்கள் அந்த நாள்களில் நிறைய இருந்தன. சம்பளம் இவ்வளவு கிடையாது; வசதிகள் குறைவு. கைக்கும், வாய்க்குமான வாழ்க்கைதான். அதில் தோன்றும் கையாலாகாமை, பணத் தட்டுப்பாடு, வீட்டில் அதிக குழந்தைகள், பொறுப்புகள் மனிதர்களே மனிதர்களை வெறுக்கும் அளவில் கொண்டு சேர்த்தது. ‘அந்த காலம் பொற்காலம்' என்ற பொய்க்கதையை நான் கேட்கத் தயாரில்லை. காசு பணம் உள்ளவர்களால்தான் என்றுமே நல்ல வாழ்க்கை வாழ முடியும். நான் அந்த தலைமுறையின் இன்றைய பிரதிநிதி. மிக கஷ்டம், கஷ்டம், சற்று வசதி, மிகுந்த வசதி எல்லாவற்றையுமே பார்த்தவன்.
'கொஞ்சம் தீர்த்தம் கொடேன்' என்று யாரையாவது கேட்டால் தொலைந்தது. 'கால்ல என்ன கட்டையா? எழுந்து போய் தண்ணி குடிக்க முடியாதா?' என்று பதில் வரும். 'மணி என்ன?' என்று கேட்டால், 'எந்த ஆபீசுக்கு போகணும் மணி தெரிஞ்சிண்டு இந்த வயசிலே?' என்று நக்கல் வரும்.
'பசிக்கிறதே? எதாவது சாப்பிட இருக்கா?' என்றால் சாடல் இன்னும் பயங்கரமாக இருக்கும். 'கொட்டிக்கத்தானே குத்துக்கல் மாதிரி இன்னமும் உக்காந்தித்திருக்கே? வரேன் வரேன்' என்ற வசவு விழும்.
நான் கல்லூரி முடித்து வேலை கிடைக்காமல் தென்னாட்டின் ஓர் தொழிற்சாலை உள்ள ஊரில் வேலை பார்த்த என் மாமன் வீட்டில் ஓரிரு மாதங்கள் தங்க நேர்ந்தது. தொழிற்சாலை என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவம் பெற. அப்போதுதான், எனக்கு அங்கிச்சிம்மாவை அருகில் அவளின் மோசமான காலகட்டத்தில் பார்க்க நேர்ந்தது.
அவளுக்கு ஏற்பட்ட மூளைக்கோளாறு விசித்திரமாய் எனக்கு பட்டது. அவள் எப்போதும் 'இல்லாத ஒர் குழந்தையையே' தேடுவாள். பெரியம்மாவிடம், 'அடியே, அந்த குழந்தை பாலுக்கு அழறதேடி? கொண்டா, நான் கொண்டுபோய் கொடுக்கிறேன்' என்பாள்.
'அதெல்லாம் ஒன்றுமில்லை.. நீ போய் படுத்துகொள்' என்றால் ஒருசமயம் கேட்பாள். இல்லையென்றால், 'நீ பொய் சொல்றே? அது அழறது எனக்கு கேட்கிறதே? கொண்டா, நான் போய் கொடுக்கிறேன்' என்று அடம் பிடிப்பாள். அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியிராது. சில சமயம் பேசாமல் போய் விடுவாள். பல சமயங்களில் கூக்குரலிடுவாள். 'ஐயயோ, அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறதே? இவர்கள் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே?' என்று கத்தி விட்டு தானும் அழுவாள்.
ராத்திரி தூங்க மாட்டாள். முழித்திருந்து இந்தப் புராணம்தான். தூங்குபவர்களை எழுப்பி இம்சிப்பாள். பிரச்னை? குழந்தைதான்.
ஒருமுறை 'தண்ணி கொடு' என்று அடம் பிடித்தாள். மாமாவே எழுந்து வந்து, ஒரு டம்பளரில் தண்ணீரை எடுத்துகொண்டு வந்து கொடுத்தார். அதை கையில் வாங்கிகொண்டவள் நகர்ந்து போக ஆரம்பித்தாள். மாமா, 'எங்கே போறே?' என்று கேட்டதற்கு, 'குழந்தைக்கு கொடுக்கத்தான்' என்றாள். மாமா கோபத்தில் அவள் கையில் இருந்த தண்ணீரை வாங்கி வீசினார். ஒரே கூக்குரல். அழுகை. 'குழந்தையை தவிக்க விடுகிறார்களே?' என்று.
எங்களால் அந்தச் சத்தம் போட்டு கூக்குரலிட்டு அடம் செய்த அங்கிச்சிம்மாவை புரிந்துகொள்ளவே முடியவில்லை. எல்லோருமே ஒரு வகையில் அவளது முடிவுக்காகக் காத்திருந்ததுபோல தெரிந்தது. பிள்ளைகள் மத்தியில் அவளை யாரிடம் எத்தனை நாள்கள் வைத்திருப்பது போன்ற சண்டைகளுக்குப் பிறகு அவள் ஒருநாள் காலையில் மூச்சற்றுப் போனாள். அந்தப் படைப்பின் சரித்திரம் ஒரு வழியாக முடிந்தது. எவருக்கும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
'அங்கிச்சிம்மா இறந்து விட்டாள்' என்ற செய்திதான் எனக்கு வந்தது. நான் அப்போதுதான் நெய்வேலியில் அரசாங்க ஆதரவில் பயிற்சியாளனாகச் சேர்ந்திருந்தேன். எனக்கு அவள் மரணம் ஒருவகையில் நிம்மதியைத் தந்தது. காரணம் இதுதான். கடைசிக்காலத்தில் ஒவ்வொரு பிள்ளைகளிடத்திலும் தன் வாழ்வுக்காக அல்லாடுகிற நிலையும் அந்த ஒதுக்கலும் இனி இருக்காதில்லையா?
'வாழ்க்கை எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒன்று போல் தான், கடவுள் எல்லோரையும் ஒன்று போல்தான் நடத்துகிறார்' என்பது பச்சை பொய் என்று என்னால் உணர முடிந்தது. அதை உணர என் வாழ்க்கையிலேயே பின்னர் பல நிகழ்வுகள் நடந்தன.
அசடோ, சமத்தோ, புத்திசாலியோ, மடச்சியோ வாழ்க்கை ஒரு சிலருக்கே வரமாக அமைகிறது. சிலருக்கு அது சாபம்தான். அந்த சிலர் நல்லவரா, கெட்டவரா என்ற கேள்வியே அபத்தம்.
வாழும்போதே நரகத்தைப் பார்த்து அனுபவித்துவிட்ட அங்கிச்சிம்மாவுக்கு இறந்தவுடன் சொர்க்கமோ, நரகமோ கிடைத்திருந்தால் என்ன, கிடைக்காமல் போயிருந்தால் என்ன?
அசடாக, அபத்தமாக, அடக்கமாக, அடங்கிப்போன, அலைக்கழிக்கப்பட்ட அங்கிச்சிம்மாவின் வாழ்க்கைதான் அதற்கு சான்று. சொல்ல மறந்துவிட்டேனே? அங்கிச்சிம்மாவின் பெயர் சுப்புலட்சுமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.