Enable Javscript for better performance
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சுலோச்சன முதயார் பாலம்-175!- Dinamani

சுடச்சுட

  
  k6

  * திருநெல்வேலி-பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களுக்கு இடையே சுமார் 800 அடி அகலத்தில் தாமிரவருணி ஆறு பாய்கிறது. ஏப்ரல், மே மாதங்களை தவிர மழைக் காலங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். இந்த ஆற்றைக் கடக்க 1836-1840 களில் படகில்தான் பயணிக்க வேண்டும். படகுக்காக பல மணி நேரம் காத்திருந்து மக்கள் பயணிக்கும் சூழல் இருந்தது. குழுவாக செல்வோர் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. படகில் செல்ல போட்டியும் அதிகம் இருக்கும்.
  * 1840 இல் மார்ச் மாதம் தாம்சன் என்பவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சமயத்தில், தாமிரவருணி ஆறு படகு குழாமில் சிலர் கொலை செய்யப்பட்டனராம். அப்போது, இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என ஆட்சியர் முடிவு செய்தார். 
  * இதற்காக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர். கேப்டன் பேபர், ஹார்ஸ்வி, சிராஸ்தார் போன்றவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாலம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. 
  * பாலம் கட்டுவதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டது. அதற்கான பொறுப்பினை கேப்டன் பேபரிடம் ஆட்சியர் ஒப்படைத்தார்.
  * இப்பாலம் 760 அடி நீளம் 21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுகள், அவற்றைத் தாங்கும் வகையில் இரட்டைத் தூண்களுடன் வரைபடமும் தயாரானது. 
  * பாலத்தின் தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டும் வகையில் லண்டன் தேம்ஸ் நதியில் கட்டப்பட்டுள்ள வாட்டர்லூ பாலத்தை போன்ற தோற்றத்துடன் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. பாலம் கட்டத் தேவையான நிதியோ ரூ. 50 ஆயிரம் ஆகும்.
  * பாலத்துக்கான நிதியை கேட்டதும் இவ்வளவு நிதிக்கு என்ன செய்வதென ஆட்சியர் மலைத்துப் போனார். 
  * மக்களிடம் இருந்து நிதி திரட்டலாம் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்போது, சிராஸ்தாராக பணி செய்து வந்த சுலோச்சன முதலியார் பக்கம் ஆட்சியரின் கவனம் திரும்பியது. 
  * முதலியார், தொண்டை மண்டலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமணம் என்ற ஊரில் இருந்து இவரது மூதாதையர்கள் திருநெல்வேலியில் குடியேறியவர்கள் ஆவர். தங்கம், வெள்ளி நாணயங்கள் குவிந்திருக்கும் கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர். கௌரவத்திற்காக ஆட்சியர் அலுவலகத்தில் (தாசில்தார் நிலையில்) வேலை செய்தார். அலுவலகத்திற்கு குதிரை பூட்டிய வண்டியில்தான் வருவார். நீளமான கருப்புக் கோட்டு, ஜரிகை தலைப்பாகை, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் அணிந்து அலுவலகத்திற்கு வருவதுண்டு.
  * மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதற்கு சுலோச்சன முதலியாருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. வீட்டுக்கு சென்ற அவர், நடந்த ஆலோசனை குறித்து தன் மனைவி வடிவாம்பாளிடம் கூறினார். பாலம் கட்டுவது குறித்த நினைவுகளால் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. 
  * மனைவியிடம் கலந்து பேசிய சுலோச்சன முதலியார், அலுவலகத்திற்கு வந்ததும் பாலம் கட்டுவதற்கு ஆகும் மொத்த செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக ஆட்சியரிடம் கூறினார். மனைவி கொடுத்தனுப்பிய தங்க நகைகள், பணத்தை வெள்ளித் தட்டில் வைத்து ஆட்சியரிடம் கொடுத்தார். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், சுலோச்சன முதலியாரை கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 
  தனிநபர் ஒருவரின் நன்கொடையால் இப்பாலம் கட்டப்பட்டது, திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இப்பாலத்துக்கு சுலோச்சன முதலியார் பாலம் என பெயர் சூட்டப்பட்டது.
  * 1840 இல் பாலம் கட்டும் பணி தொடங்கியது, 3 ஆண்டுகளில் 1843 இல் நிறைவடைந்ததை அடுத்து நவம்பர் மாதம் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. இப்பாலம் கட்டி முடித்து 174 ஆண்டுகள் முடிந்து கடந்த நவம்பர் 27இல் 175 ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இப்பாலம் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
  - சா. ஷேக் அப்துல் காதர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai