எம்.ஜி.ஆரின் ஆசி தான் காப்பாற்றுகிறது! இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்

எனது குருநாதரிடம் பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் அவரால் எப்படி சில விஷயங்களை செய்ய முடிகிறது என்று என்னால் இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் ஆசி தான் காப்பாற்றுகிறது! இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்

பிடித்த பத்து
குருநாதர்: எனது குருநாதரிடம் பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் அவரால் எப்படி சில விஷயங்களை செய்ய முடிகிறது என்று என்னால் இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது படம் வெளியாகும் நாள் அன்று தொலைபேசியை (இன்று கைபேசி வந்த பிறகு வேறு விஷயம்) அருகில் வைத்துக் கொண்டுதான் தூங்குவார். தனது படத்தை பற்றி தனக்கு தெரிந்தவர்கள், விநியோகஸ்தராகள் மற்றும் நண்பர்கள் கூறுவதை உன்னிப்பாக கேட்டு தெரிந்துகொள்வார். தவறுகளை சுட்டிக் காட்டினால் எடுத்துக் கொள்வார். ரொம்ப நெருங்கியவர்கள் என்றால் அதற்கான காரணம் கூறி எப்படி அது தவறில்லை என்றும் வாதாடுவார். ஆனால் அதெல்லாம் படம் வெளியான இரண்டு நாளைக்கு மட்டுமே. மூன்றாம் நாள் முதல் அடுத்த படத்தை பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவார். படம் வெளியாகி விட்டாலே நமக்கும் அதற்கான உறவு முடித்து விட்டது என்பார் எனது குருநாதர் பாக்யராஜ். 
எம்.ஜி.ஆர்.: ஒரே மாதத்தில் மூன்று முறை அவரை சந்திக்கும் பேறு பெற்றவன் நான். மூன்று முறையும் அவர் "உனக்கு என்ன வேண்டும் சொல்லு, நான் செய்கிறேன்'', என்று கேட்டார். மூன்றாவது முறை என்னிடம், ""வீடு வாங்கி விட்டாயா'' என்று கேட்டார். "இருக்கு சார்'' என்றேன். ""கார் இருக்கா'' என்றார். "இருக்கு' என்பதற்கேற்ப தலையாட்டினேன். பின் "என்ன செய்வது' என்று அவர் யோசிக்கும் முன்பு அவர் காலில் விழுந்து, "உங்கள் வாழ்த்து தான் வேண்டும்'' என்று கூறினேன். சிரித்துக் கொண்டே வாழ்த்தினார். அவரது வாழ்த்து தான் இன்று என்னையும் எனது குடும்பத்தாரையும் காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன். 
பி.ஆர்.பந்துலு: நான் இயக்குநர் ஆன பிறகு அவரது படங்களை பார்த்த பொழுது அசந்து விட்டேன். ஒரு கதையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், முக்கியமான கதாபாத்திரங்களை எப்படி முழுமையாக படைக்க வேண்டும், காட்சிகளை எப்படி சரியாக பிரிக்க வேண்டும் என்பதை எல்லாம் பார்த்து தெரிந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், வியந்து, மனதிற்குள்ளேயே ரசித்திருக்கிறேன். அவரது ஒவ்வொரு படமும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடம் என்று கூறலாம். அவரது திரைப்படங்கள் ஜாதி, மத, மொழி பேதம் இல்லாதது. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். இருவரையும் வைத்து படமெடுத்தவர். "கர்ணன்', "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்', மக்கள் திலகத்திற்கு "ஆயிரத்தில் ஒருவன்', "தேடிவந்த மாப்பிள்ளை', "நாடோடி', "ரகசிய போலீஸ் 115' ஆகிய படங்களை சொல்லலாம். 
சார்லி சாப்ளின்: இவர்தான் இந்த யுகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி. மெüனப் பட காலத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் இன்றும் நமக்கு சிரிப்பூட்டும். விஞ்ஞானம் யுகத்திலும் நகைச்சுவை என்பது பல்வேறு வழிகளில் உருமாறி நம்மை வந்தடைந்து விடுகிறது. ஆனால் அன்று அப்படி அல்ல. இதில் இருந்து ஒன்று மட்டுமே தெளிவாக தெரிகிறது. எந்த யுகத்திலும் மக்களின் உணர்ச்சிகள், அவர்களது ஆசாபாசங்கள் மாறாது என்பதுதான்.
பஷீர்: ஒருமுறை மலேசியாவிற்கு சென்று இறங்கினேன். அப்பொழுதெல்லாம் நான் அதிகமாக வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றதில்லை. என்னை மலேசியாவில் அழைத்தவர்கள் எல்லாம் வெளியே இருப்பார்கள் என்பது கூட தெரியாது. கூப்பிட்டார்கள் டிக்கெட் வந்தது, சென்று விட்டேன். மலேசிய கஸ்டம்ஸில் "பணம் எவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்கள்'' என்று கேட்டதற்கு, "என்னிடம் பணம் இல்லை'' என்று கூறினேன். "எங்கே தங்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ""தெரியாது'' என்று கூற, என்னை மட்டும் ஒதுக்கி உட்கார சொன்னார்கள். 
அப்பொழுது ஒருவர் என்னை பார்த்து விட்டு, அந்த கஸ்டம்ஸ் அதிகாரியிடம் ஏதோ அவர்கள் மொழியில் பேசினார். தனது பெட்டியைத் திறந்து காண்பித்து, பின்னர் என்னை பார்த்து, ""வாருங்கள் போகலாம்'' என்றார். நானும் விட்டால் போதும் என்று வெளியே வந்தேன். அதன் பின்னர்தான் உள்ளே என்ன நடந்தது என்பது புரிந்தது. "பணமே இல்லாமல் எப்படி இந்த நாட்டில் இவர் தங்க முடியும்'' என்று கேட்டதற்கு, அதற்கு எனது நண்பர், "என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது. நான் கியாரண்டி'' என்று கூறி, தனது பணம் உள்ள பெட்டியை காண்பித்து என்னை அழைத்து வந்திருக்கிறார். அன்று நண்பரானார். இன்றும் கூட சிங்கப்பூர், மலேசியா சென்றால் முதலில் 
இவரைத்தான் அழைத்துப் பேசுவேன். 
கொல்லங்குடி கருப்பாயி: எனது படத்தில் தான் அவர் நடித்தார். படப்பிடிப்பின்போது வி.கே.ராமசாமியும் இவரும் நடித்துக் கொண்டிருந்தார்கள். "இப்படி நடியுங்கள்'' என்று வி.கே.ஆர். சொல்ல, "அப்படித்தானே நடித்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார் இவர். பதில் பேசாமல் வி.கே.ஆர். என்னைப் பார்க்க, நான் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன். என் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டிருந்தேன். என்னைப் பார்க்க ஆஸ்பத்திரி வரை வந்தவர், என்னை பார்க்காமல் கீழே உட்கார்ந்து விட்டு சென்று விட்டதாக, எனது உதவியாளர்கள் கூறினார்கள். காரணம் கேட்டதற்கு,"அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதை பார்க்க மனமில்லை'' என்று கூறினாராம். என்ன ஒரு வெள்ளை மனம். 
பிரிஸ்பேன்: ஒருமுறை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து சென்னைக்கு புறப்படும் நேரத்தில் ஒரு நண்பர் நீங்கள் பிரிஸ்பேன் நகருக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தவே, சரி என்றேன். அவரே எனக்கும் என் மனைவிக்கும் டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்து என்னை அழைத்துக் கொண்டு போனார். பிரிஸ்பேன் நகர விமான நிலையத்தில் நாங்கள் காலடி எடுத்து வைத்ததுதான் தாமதம், ஒரு மூன்று வயது பெண் குழந்தை என்னைப் பார்த்து, "பாண்டியராஜன்'' என்று தனது பிஞ்சு குரலால் அழைத்தது. அந்தக் குழந்தையின் அப்பா என்று நினைக்கிறேன். அவர் நீங்கள் நடிகர் பாண்டியராஜனா என்று கேட்டு, "ஒரு நிமிடம் இருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விமான நிலையத்தில் இருந்த கடையில் இருந்து கேமராவை வாங்கி வந்து, என்னையும் அந்தக் குழந்தையையும் படமெடுத்தார். பின்னர் என்னிடம்,"இந்த குழந்தை இந்தியாவிற்கோ அல்லது இலங்கைக்கோ சென்றதில்லை. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் குழந்தை இது. தொலைக்காட்சியில் உங்களைப் பார்த்து ரொம்பவே ரசிக்கும். உங்கள் பெயரை கூப்பிடவும் எனக்கே ஆச்சரியம்'' என்றார். இந்த தொலைக்காட்சி எவ்வளவு பெரிய சேவை செய்கிறது என்று அன்று நினைத்துக் கொண்டேன். 
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்: மேடையில் ஏறி பேசுவது மிகப்பெரிய ஒரு கலை. அது எல்லோராலும் முடியாது. இன்று கூட மேடையில் பேசுவதென்றால் சிறிது நேரமாகவாவது யோசிப்பேன். அனால் இவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். மாலையில் ஒரு விழா நடக்க இருக்கிறது என்ற எண்ணமே இல்லாதது போல் எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பார். விழாவில் இவரது பேச்சுதான் சிறப்பாக இருக்கும். எப்படி இவரால் முடிகிறது என்று நினைப்பதுண்டு. எல்லாமே படிப்பதுதான் என்று நினைக்கிறேன். நினைவாற்றலும் இடம் கொடுக்க வேண்டும்.
இளையராஜா: இயக்குநர் ஒருவர் தனது படத்தால் மக்களை கட்டிப் போடலாம். ஒரு கதாநாயகன் தனது நடிப்பால் தனது ரசிகர்களை கட்டிப் போடலாம். ஆனால் இவர் செய்வது எல்லாமே இனியவை மட்டும் அல்ல புதியவை கூட. கிரியேஷன் (Creation) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான். ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள் என்றால் 1000 படத்தில் சுமார் 5000 பாடல்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு பாட்டைபோல் மற்றது இருக்காது. அதே போல் ஒரு பாட்டின் இடையே வரும் இசை திரும்பவும் வராது. இயக்குநரே விரும்பிக் கேட்டுக் கொண்டதால்தான் ஒரே ஒரு பாட்டினை திரும்பவும் இவர் இசையில் வெளிக்கொணர்ந்தார். இவரது இசை நாடு கடந்து, மொழி கூட கடந்து உலகமெங்கிலும் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. 
பி.வி.சிந்து: எனக்கு எல்லா விளையாட்டும் பிடிக்கும். பல்வேறு தரப்பட்ட விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் என்னை கவர்ந்திழுத்திருக்கிறார்கள். சமீபத்தில் நான் பார்த்த இவரின் விளையாட்டு என்னை மிகவும் ரசிக்க வைத்தது என்றால் அது மிகை இல்லை. இவர் ஆடும் பாணி சிறப்பானது. நம் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், நம் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் எனக்கு பெருமை அதிகம். 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com