உக்ரைன் நாட்டுப்புறக் கதை : மூன்று பூசணி விதைகள்! 

முன்னொரு காலத்தில் ஜமீன்தார் ஒருவர் இருந்தார். அவரிடம் மேக்ஸிம் என்ற ஏழைக் கூலி பணியாற்றி வந்தான்.
உக்ரைன் நாட்டுப்புறக் கதை : மூன்று பூசணி விதைகள்! 

முன்னொரு காலத்தில் ஜமீன்தார் ஒருவர் இருந்தார். அவரிடம் மேக்ஸிம் என்ற ஏழைக் கூலி பணியாற்றி வந்தான். ஒரு சின்ன குடிசை வீட்டில் வசித்து வந்தான். காற்றிலும் மழையிலும் கூரை அறுபட்டு மழைநீர் குடிசைக்குள் கொட்டும். மேக்ஸிமின் குடும்பம் பெரியது என்பதால் அரை வயிற்று சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டது.
 வசந்த காலம் வந்தது. அவர்களிடம் விதைப்பதற்கு ஒன்றுமில்லை. "இதோ பாருங்கள். அக்கம் பக்கத்தில் எல்லோரும் உழுதுவிட்டார்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டார் மேக்ஸிமின் மனைவி.
 "கவலைப்படாதே. நான் ஜமீன்தாரிடம் போய் விதைப்பதற்குக் கொஞ்சம் தானியம் கேட்கிறேன். அதைக் கொண்டு விதைத்து பயிர் செய்யலாம்'' என்றான்.
 ஜமீன்தாரிடம் சென்று, "ஐயா, என்னிடம் விதைப்பதற்கு ஒரு துளி கூட தானியம் இல்லை. நீங்கள் கொஞ்சம் கொடுத்து உதவுங்கள். இல்லையென்றால் நானும், என் குழந்தைகளும் பட்டினி கிடந்து உயிர் விட வேண்டியதுதான்'' என்று கெஞ்சினான்.
 ஜமீன்தார் கண்ணை உருட்டியபடி சத்தம் போட்டார். ""போய் வேலையைப் பாருடா. உனக்கு கிடைப்பது கிடைக்கும்.''
 மேக்ஸிம் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வீடு திரும்பினான். தன் மனைவியிடம் நடந்தைச் சொன்னான். அவனும் அவனது மனைவியும் பசியோடிருந்த தங்கள் குழந்தைகளை சோகத்தோடு பார்த்தபடி வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு தூக்கணாக்குருவிகள் பறந்துவந்து அவர்களின் குடிசை மேல் கூடு கட்டப் பார்த்தன. அதைப் பார்த்த மேக்ஸிம், ""பாவம், நீங்கள் கூடு கட்ட இந்த ஓட்டை குடிசைதானா அகப்பட்டது? முதல் மழையிலேயே உங்கள் கூடு அழிந்து போகுமே'' என்றான்.
 ஆனால் குருவிகளுக்கு அவன் பேச்சு புரியவில்லை. பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் வைக்கோல், தழைகள் போட்டு கூடு கட்டின. அவற்றில் முட்டைகள் இட்டு அடைகாத்தன. முட்டைகளில் இருந்து அழகிய சிறு குஞ்சுகள் வெளிப்பட்டன.
 ஒருநாள் ஒரு பெரிய பாம்பு எங்கிருந்தோ வந்து, அந்தக் குஞ்சுகளை நோக்கி விரைந்தது. அதைப் பார்த்து மேக்ஸிமின் குழந்தைகள் கூச்சலிட்டு, தங்கள் அப்பாவை அழைத்தனர். மேக்ஸிம் குடிசைக்கு வெளியே ஓடி வந்தான். ஒரு தடியை எடுத்துக் கொண்டு பாம்பை அதன் முதுகெலும்பு ஒடிய அடித்துப் போட்டான். பாம்போ திரும்பி தன்னை இழுத்துக் கொண்டு மண்ணில் விழுந்தது.
 அதற்குள்ளாகவே பாம்பு மூன்று குருவிக் குஞ்சுகளை விழுங்கி இருந்தது. நான்காவது குஞ்சு மட்டும் தப்பித்துக் கொண்டது. எனினும் அதன் கால் கடிபட்டு காயமுற்று இருந்தது.
 மேக்ஸிம் குருவிக் குஞ்சை எடுத்து குழந்தைகளிடம் கொடுக்க குழந்தைகள் அதற்குத் தீனி போட்டு காப்பாற்றினர். குஞ்சு பறக்கத் தொடங்கியவுடன் அது தன் அம்மாவையும் அப்பாவையும் தேடிப்போக அனுப்பி வைத்தனர். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியது. குருவிகள் வெப்பம் நாடி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டன. மழைக்காலம் முடிந்ததும் திரும்பி வந்தன.
 ஆனால் வறுமையில் வாடிய மேக்ஸிமின் குடும்பம் மட்டும் அதே நிலையில்தான் இருந்தது. அப்போது ஒருநாள் ஒரு குருவி பறந்து வந்து, மேக்ஸிமின் குடிசையில் இருந்த சிறிய ஜன்னலில் சிறகடித்து உட்கார்ந்தது. மேக்ஸிம் ஓடிவந்து குருவியைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டான். அந்தக் குருவி ஒரு தானிய விதையை அவன் உள்ளங்கையில் வைத்து ""கீச்சு கீச்சு'' என்றது. அவனைப் பார்த்து "இந்த தானியத்தை உன் கழனியில் விதைத்துவிடு'' என்று சொல்லிவிட்டுப் போய் மீண்டும் திரும்பி வந்து இன்னொரு தானிய விதையை அவனிடம் கொடுத்து "இதை உன் ஜன்னலருகே விதைத்துவிடு'' என்று சொல்லிவிட்டுப் போய் மீண்டும் திரும்பி வந்து மூன்றாவது விதை ஒன்றை அவனிடம் கொடுத்து "இதை உன் கிணற்றுக்குப் பக்கத்தில் விதைப்பாயாக'' என்று சொல்லிச் சென்றது.
 குருவிக்கு நன்றி தெரிவித்து மேக்ஸிம் அது சொல்லிய வண்ணமே விதைகளைப் பதித்தான். அவை முளைத்து பயிர் வளர அவன் அறுவடைக்காகக் காத்திருந்தான். மறுநாள் காலை வீட்டு வாசலுக்குச் சென்ற அவனது குழந்தைகள், அலறியபடி குடிசைக்குள் வந்து, "அப்பா, அங்கே பாருங்கப்பா, ஏதோ ஒன்று எத்தனை பெரிசாக வளர்ந்திருக்கிறது'' என்று தங்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
 மேக்ஸிம் வெளியே வந்தான். என்ன ஆச்சரியம்? வெளியே குடிசை வாசற்படிக்கு அருகே, ஜன்னலின் கீழே, கிணற்றுக்குப் பக்கத்தில் மூன்று பெருத்த பூசணிக்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்தான். அவற்றைக் கையில் தூக்கி பார்த்தான். அத்தனை பலம் அவனுக்கு இல்லை. காய்கள் பருத்து காலை நேர சூரிய ஒளியில் பளபளத்தன.
 இந்தக் காய்களை சமைத்து உணவு தயார் செய்யலாம் என்று மனைவியிடம் மகழ்ச்சியோடு கூறினான். ஒரு காயைப் பறித்து, அதை உருட்டி குடிசைக்குள் கொண்டு வந்தான். கத்தியை எடுத்து காயை இரு பாதிகளாக வெட்டினான்.
 அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. அந்தக் காய்க்குள் ரொட்டி, கடலைகள், வெண்ணெய், இறைச்சி, பொரித்த பண்டங்கள், இனிப்புகள், ஊறுகாய்கள், மதுபானம் என அத்தனை பொருட்களும் இருந்தன. அத்தனைப் பொருட்களையும் மேக்ஸிம் மேஜையில் பரப்பினான். அப்போதும் பூசணிக்காயில் எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லை.
 அவர்கள் எல்லோரும் அந்த உணவுப் பொருட்களை வயிறு நிரம்ப உண்டு திருப்தியடைந்தார்கள். மேக்ஸிமின் மனைவி ஒரு வெள்ளைத் துண்டால் அந்தக் காயை மறைந்து வைத்தாள்.
 மேக்ஸிம் வெளியே சென்று இரண்டாவது பூசணிக்காயைக் கொண்டு வந்து, இரு பாதிகளாக வெட்டினான். அதில் பட்டு துணிமணிகள், சட்டைகள், புத்தம் புதிய காலணிகள், கழுத்துக்கு முத்து, பவழ ஆரங்கள் முதலியவை இருந்தன. மேக்ஸிமின் மனைவி கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய, நல்ல பட்டுத் துண்டு எடுத்து, அந்தக் காயை மூடி வைத்தாள்.
 அடுத்து மூன்றாவது காயையும் மேக்ஸிம் வெட்டினான். அதில் நிறைய பொற்காசுகள் ததும்பி வழிந்தன. அவன் மனைவி அவற்றை எடுத்து ஒரு பெட்டிக்குள் வைத்து அந்தக் காயையும் துண்டால் மூடினான்.
 மேக்ஸிமுக்கு ஒரே சந்தோஷம். "இனி நாமும் நம் குழந்தைகளும் பட்டினி கிடந்து வாட மாட்டோம். இந்தப் பொல்லாத ஜமீன்தாருக்கு நாம் இனியும் அடிமையில்லை'' என்று ஆரவாரத்தோடு சொன்னான்.
 அவனும் அவனது மனைவியும் விலை உயர்ந்த அழகான ஆடைகளை அணிந்து கொண்டு, கிராமத்து வீதிகளில் வலம் வந்தார்கள். சில நாட்கள் கழிந்ததும் மேக்ஸிம் ஒரு நல்ல வீட்டைக் கட்டி குடியேற, ஊர் மக்கள் பிரமித்துப் போனார்கள். மேக்ஸிம் பெரிய பணக்காரனாக ஆனது பற்றி ஜமீன்தாரிடம் போய் சொன்னார்கள். உடனே ஜமீன்தார் அவனைத் தேடி வந்து, "ஏய் மேக்ஸிம்! இத்தனை செல்வம் உனக்கு எப்படி வந்தது?'' என்று கேட்டார். மேக்ஸிம் நடந்ததையெல்லாம் ஜமீன்தாரிடம் சொன்னான்.
 தன் மாளிகைக்குத் திரும்பிய ஜமீன்தார், ஒரு குருவிக் கூட்டைக் கட்டி, குருவிகள் குடிவர இயன்றதெல்லாம் செய்தார். ஒருநாள் அது நடந்தது. இரண்டு குருவிகள் அந்தக் கூட்டில் வந்து தங்கின. முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொரித்தன. குஞ்சுகள் வளர்வதைக் கண்ட ஜமீன்தார், ஒரு பாம்பையும் வரவழைக்க முயற்சி செய்தார். ஆனால் எந்தப் பாம்பும் வரவில்லை. ஜமீன்தாருக்கு ஆத்திரமாக வந்தது. வளர்ந்த குஞ்சுகளோடு இரண்டு குருவிகளும் பறந்து போய்விடும் நேரம் வந்தது.
 ஒருநாள் ஜமீன்தார் ஓர் ஏணியைக் கொண்டு வந்து கூட்டை நெருங்கி, ஒரு பாம்பின் வேகத்தோடு அனைத்துக் குஞ்சுகளையும் அடித்துப் போட்டார். ஒரு குஞ்சு மட்டும் காலில் காயத்தோடு தப்பியது. அதைக் கீழே கொண்டு வந்து கோடைக்காலம் முழுவதும் பார்த்துக் கொண்டார். மழைக்காலம் வந்ததும் அதை விடுவித்து பறக்க விட்டார். சிறகடித்து வானில் ஏறி அது பறந்து மறைந்தது.
 மழைக்காலம் போய் வசந்தம் வந்ததும் மற்ற இடங்களில் இருந்து பறவைகள் திரும்பி வந்தன. ஒரே ஒரு குருவி மட்டும் ஜமீன்தார் மாளிகையின் ஜன்னல் மேல் வந்து உட்கார்ந்தது. ஜமீன்தார் ஓடிவந்து அதைப் பார்த்து, "எனக்கு என்ன பரிசு கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார். குருவி மூன்று பூசணிக்காய் விதைகளை அவரிடம் கொடுத்து, அவற்றை முறையே வாசலுக்கு வெளியிலும், ஜன்னலுக்கு அருகிலும், கிணற்றுக்குப் பக்கத்திலும் புதைக்கச் செல்லிற்று.
 ""ரொம்பவும் நன்றி குருவியே! நானும் இந்த ஊர் ராஜாவை விட பெரிய பணக்காரனாகி விடுவேன்" என்று ஜமின்தார் மகிழ்ச்சியில் துள்ளினார்.
 விதைகள் முளைத்து மூன்று பெரிய பூசணிக்காய்களும் காய்த்தன. ஜமீன்தார் ஒரு காயை இரண்டாக வெட்டினார். அதில் இருந்து கணக்கற்ற வெட்டுக்கிளிகள் திடீரென பறந்து வந்து ஜமீன்தாரின் வயல்களில் வளர்ந்திருந்த பயிர்களை அழித்தன. ஜமீன்தார் இரண்டாவது பூசணிக்காயை வெட்டினார். அதிலிருந்து ஒரு பெரிய தீப்பந்தம் வெளிப்பட்டு, அவரது மாளிகையையும் இதர சொத்துக்களையும் எரித்து அழித்தது. மூன்றாவது காய் அறுபடாமல் நின்றது. ஜமீன்தார் மீண்டும் ஊருக்குத் திரும்பி வந்து தனது அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பினார். அந்தக் காயிலிருந்து கணக்கற்ற பாம்புகளும் மற்ற கொடிய விஷ ஜந்துகளும் வெளிவந்து அவரைப் பழிவாங்கி விடும் என்று ஊர் மக்கள் நம்பினார்கள்.
 மேக்ஸிம் தன் குடும்பத்தோடு பல காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
 - கன்யாமித்ரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com