நல்லவற்றை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் 

"சர்வர் சுந்தரம்' படத்தில் நாகேஷ் பெரிய நடிகர் ஆகிவிட்டாலும், முன்பு ஹோட்டலில் சர்வராக இருந்தபோது அணிந்திருந்த சட்டையை தன் பங்களாவில் தொங்க விட்டிருப்பார்.
நல்லவற்றை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் 

"சர்வர் சுந்தரம்' படத்தில் நாகேஷ் பெரிய நடிகர் ஆகிவிட்டாலும், முன்பு ஹோட்டலில் சர்வராக இருந்தபோது அணிந்திருந்த சட்டையை தன் பங்களாவில் தொங்க விட்டிருப்பார். பழையதை மறந்து போகாமல் இருக்கவே அப்படி செய்திருப்பதாக நாகேஷ் படத்தில் விளக்கம் தருவார். 
தொடக்கத்தில் சாதாரணமாக இருந்து பிறகு செல்வமும் செல்வாக்குடனும் இருக்கும்போது பழையதை மறந்து அர்த்த ராத்தித்திரியிலும் குடை பிடிப்பவர்கள் அதிகம் உள்ள இந்தக் காலத்தில் பழையதை மறக்காமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் ஒருவர்தான் ரவி சொக்கலிங்கம். 
துபையில் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று நான்கு முறை வந்து தமிழகத்தின் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவ மாணவியருக்கு புத்தகம், உடை, உணவு, படிப்புச் செலவு என்று பலவற்றையும் ஏற்று சேவை செய்து வருபவர். 
இவரின் தாத்தா சொக்கலிங்கம் "தினமணி' நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். தாத்தாவின் பங்களிப்பின் விழுமியங்களை தன் ரத்தத்திலும் பெயரிலும் கொண்டிருக்கும் ரவி சொக்கலிங்கம், சமூகத்திற்கு தன்னால் ஆன பங்களிப்பைச் செய்து வருகிறார். நலிந்தவர்களுக்கு உதவ மனமுள்ளவர்களுக்கு, "யாருக்கு உதவலாம்' என்று அடையாளம் காட்ட "சமூகத்திற்கு சேவை" (Service 2 Society) என்ற பொதுநல அமைப்பு ஒன்றையும் ஒத்த அலைவரிசையுள்ள நண்பர்களுடன், சமூக ஆர்வலர்களுடன் இணணந்து நடத்தி வருகிறார். 
தனது சேவை குறித்து இங்கே பகிந்து கொள்கிறார்:
"எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம். அப்பா சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பொறியாளராக பணிபுரிந்ததினால் படிப்பு சென்னையில் நடந்தது. பள்ளிப் படிப்பு தமிழ் வழிதான். பிறகு பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, மத்திய அரசின் தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரிந்தேன். பதவி உயர்வுகள் கிடைத்தன. அது போலவே பணிமாற்றமும் வந்தது. அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பணிமாற்றம். அதே சமயத்தில் துபையில் வேலைவாய்ப்பு கிடைத்தது. விருப்ப ஓய்வு பெற்று துபை வேலையை ஏற்றுக்கொண்டேன்.
எங்கள் குடும்பம் நடுத்தரக் குடும்பம் என்றாலும் துபைக்குச் சென்ற பிறகு பொருளாதார விஷயத்தில் நல்ல மாற்றம் வந்தது. துபையில் தனியாகத்தான் இருக்கிறேன். குடும்பம் மைசூரில். மனைவி வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கிறார். தமிழ் வழியில் படித்து நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன். இதுபோன்று எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா.. எவ்வளவு பேர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்? அவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும்... நல்லவற்றைப் படித்தால் மட்டும் போதாது.. பாராட்டினால் மட்டும் போதாது... நல்லவற்றை நாமும் செய்ய வேண்டும்.." என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘S2S’. 
சமூக சேவையைத் தொடங்கியபோது நான் எடுத்துக் கொண்ட உறுதி மொழி இதுதான். "யாரிடமும் நன்கொடை வேண்டும் என்று கேட்கக் கூடாது.' அதை இன்றைக்கும் கடைப்பிடித்து வருகிறேன். தமிழகம் முழுவதிலும் எனது உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். தவிர முகநூல் மூலம் ஒத்த மனதுடையவர்களை அவர்களது பதிவுகள், சேவைகள் மூலம் கண்டறிய முடிகிறது. அதனால் உதவி கேட்டு எங்கள் அமைப்பை அணுகுபவர்களின் கோரிக்கையில் எத்தனை உண்மையுள்ளது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொண்டு நிறுவனம் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போன்று இன்று பலரும் தானாக முன்வந்து உதவுகிறார்கள். அதனால் எண்பது மாணவிகளை, ஐம்பத்திரெண்டு மாணவர்களை ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க ஆகும் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். 
அவர்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவோரை மேல் படிப்பு படிக்க வைக்கவும் தயாராக உள்ளோம். பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பிறந்தநாள் பரிசுகள்... அவர்கள் வாசிக்க பிரபல குழந்தைகள் வார இதழை சந்தா கட்டி நூறு அரசு பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆசிரியர் தினத்தன்று சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் நூறு ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருள்களை வழங்கி வருகிறோம். சமீபத்தில் பூவாளூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு வீட்டில் அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்லை என்று தெரிய வந்தபோது என் மனைவி மூலம் மைசூரிலிருந்து சுடிதார் தைக்க துணிகளை வாங்கி அனுப்பி வைத்தோம். தையல் செலவுகளையும் ஏற்றுக் கொண்டோம்.
பயனாளர்களுக்குப் பணமாக எதையும் தருவதில்லை. பொருளாகத் தருகிறோம். பள்ளிக்கு கட்டணங்களை நேரடியாக எங்கள் அமைப்பு கட்டும். கல்லூரி அளவில் இரண்டு பேருக்கும், பாலிடெக்னிக்கில் மூன்று பேருக்கும் கல்லூரிச் செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதுதவிர, வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு பெற என்னென்ன பண்புகள் வேண்டும் என்பதை விழிப்புணர்வு சொற்பொழிவு மூலம் நானும் என் நண்பர்களும் பொறியியல் கல்லூரிகளில் நடத்தி வருகிறோம். நம் மாணவர்களுக்கு பாட அறிவு இருந்தாலும் பன்முகத்திறமை இருந்தாலும் அதை உரிய முறையில் வெளிப்படுத்த இயலவில்லை. "உன்னால் முடியும்..' என்று தன்னம்பிக்கையை அவர்களின் மனங்களில் விதைக்க இரண்டு நிமிடம் ஓடும் காணொளிகளை தயாரித்து காட்டி வருகிறேன். வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறேன். முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கு வசிப்பவர்களுக்கு என்ன உணவு தேவை என்று கேட்டறிந்து தரமாக சேமித்து வழங்கி வருகிறோம். S2S அமைப்பின் சேவையை மைசூர், பெங்களூரு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளோம். 
"S2S தனி ஒரு மனிதரின் முயற்சி அல்ல. சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் பங்களிக்க விரும்பும் நல்லோரின் ஒத்துழைப்பு மூலம் நடக்கும் இயக்கம். உதவிகளை பெரும்பாலும் பள்ளிகளிலிருந்து தொடங்குகிறோம். ‘உன்னால் முடியும்' என்று தன்னம்பிக்கையைத் தூண்டிவிடும்போது "சமுதாயத்திற்கு உதவவும் உன்னால் முடியும்' என்று உணர்த்துவதுதான் S2S அமைப்பின் லட்சியம். எங்கள் அமைப்பின் சேவைகளைப் பெற ‘S2S’ முகநூல் பக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம்'' 
என்கிறார் ரவி சொக்கலிங்கம். 
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com