"விருமாண்டி' படத்தில் பிரபலமான பாடல்! - கவிஞர் முத்துங்கம் 

காக்கிச் சட்டை' படத்திற்குப் பிறகு சத்தியா மூவிஸில் கமல்ஹாசன் நடித்த இரண்டாவது படம் "காதல் பரிசு.'
"விருமாண்டி' படத்தில் பிரபலமான பாடல்! - கவிஞர் முத்துங்கம் 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 48
'காக்கிச் சட்டை' படத்திற்குப் பிறகு சத்தியா மூவிஸில் கமல்ஹாசன் நடித்த இரண்டாவது படம் "காதல் பரிசு.' இந்தப் படத்தின் இயக்குநரும் ஜெகந்நாதன்தான். இதற்கு இசையமைத்தவர் இளையராஜா.
"காதல் மகராணி கவிதைப் பூவிரித்தாள் - புதுக்
கவிதைப் பூவிரித்து கனவில் தேன்தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள் மொட்டுப்போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்''
இது நான் எழுதிய பாடல். இதுவும் பிரபலமான பாடல்களில் ஒன்று. இதை எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் எஸ். ஜானகியும் பாடியிருப்பார்கள்.
நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு எல்லாவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற நடிகர் கமல்ஹாசன்தான். எதையும் புதுமையாகச் சிந்திக்கக் கூடிய சிந்தனையாளர். நடனங்களும் பயின்றவர். 
இப்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். நான் திரைப்படத் துறையைச் சார்ந்தவன் என்ற முறையில் அதை வரவேற்கிறேன். அவரை வாழ்த்துகிறேன். ரஜினிகாந்தும் கட்சி தொடங்க இருக்கிறார். அதையும் வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன். 
எம்.ஜி.ஆரைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய பேச்சு என்னைப் போன்ற எம்.ஜி.ஆர் பற்றாளர்களையெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் நான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தில் இருப்பவன் என்பதையும் இயக்கத்தின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய "விருமாண்டி' படத்திற்குச் சில பாடல்கள் எழுதக் கூடிய வாய்ப்பை எனக்கு இளையராஜா அளித்தார். அதில் "விறுவிறுமாண்டி விருமாண்டி', "காண்டாமணி ஓசை கேட்டிருச்சு', "மாட விளக்கெ யாரு இப்ப தெருவோரம் ஏத்துனா', "கருமாத்தூர்க் காட்டுக்குள்ளே' ஆகிய பாடல்களை நான் எழுதினேன்.
ஆனால் கமல்ஹாசன் எழுதிய "உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை' என்ற பாடல்தான், அதில் பிரபலமான பாடல்.
நான் எழுதிய "மாட விளக்கெ யாரு இப்ப தெருவோரம் ஏத்துனா' என்ற பாடலில் "ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு' என்று ஒரு வரி வரும்.
ஒன்றுக்கும் உதவாத சில மனிதர்களை "உதவாக்கரை' என்பார்கள். உதவாக்கரை என்ற பெயர் எதனால் வந்ததென்று பலருக்குத் தெரியாது.
ஓர் ஆற்றுத் தண்ணீர் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அது செல்லுகின்ற வரை அந்த ஆற்றுக்கு அது உதவுகின்ற கரையாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் ஓட்டை உடைசல் கரையில் ஏற்பட்டுவிட்டால் பெருமளவு தண்ணீர் வீணாகிவிடும். அப்போது ஆற்றுக்கு அது உதவாத கரை ஆகிவிடுகிறது. அதனால் அது "உதவாக்கரை'. இலக்கணக் குறிப்பில் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
இதுவே ஒன்றுக்கும் உதவாத மனிதனுக்குப் பெயராக ஆகிவரும்போது அது ஆகுபெயர் என்று இலக்கணம் கூறினேன். கமல்ஹாசன் இதைப் பல இடங்களில் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஆனந்த விகடன் கட்டுரையில் கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் சிந்தனையாளர் என்பதால்தான் இதையெல்லாம் கூடப் பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிடுகிறார். இந்தப் பரந்த மனப்பான்மை பலருக்கு இருக்காது.
ஒரு மலையாளப் படத்தைப் பார்த்துவிட்டு "இவனைப் போல் சிறந்த இளம் கலைஞன் இன்று எவன் இருக்கிறான்?'' என்று கேட்டார் வசனகர்த்தா ஏ.எல். நாராயணன்.
அப்படி வளருகின்ற காலத்திலேயே சிவாஜி போல் நடிப்பாற்றலுடன் வளர்ந்தவர் கமல்.
அந்த "விருமாண்டி' படத்திற்குப் பாட்டெழுதும்போது "மண் என்றால் என்ன மணல் என்றால் என்ன?'' என்று கேட்டார் இளையராஜா. "மண் என்றால் மண்தான்; மணல் என்றால் மணல்தான்'' என்றேன் நான். "அது எங்களுக்கும் தெரியும்; மண்ணுக்கும் மணலுக்கும் என்ன வித்தியாசம்'' என்றார். "ஓ அதுவா? மண் என்றால் இரண்டெழுத்து; மணல் என்றால் மூன்றெழுத்து'' என்றேன்.
"என்னய்யா சின்னப் பையன் மாதிரி பேசுகிறாய். சரி எழுத்து என்றால் என்ன? எழுதப்படுவது எழுத்து என்று சொல்லக்கூடாது. உங்கள் புலவர்கள் பாணியில் எழுத்து என்றால் என்ன சொல்வீர்கள்?'' என்றார். " ஒலிவடிவில் கேட்கப்படுகின்ற சொல்லோசைக்கு வரிவடிவம் கொடுப்பதற்குப் பெயர் எழுத்து'' என்றேன் நான். "அதுபோல் மண் என்றால் என்ன?'' என்றார். உண்மையில் எனக்குத் தெரியவில்லை. எதுவும் தெரியவில்லையென்றால் தெரியவில்லையென்று சொல்லித் தெரிந்து கொள்ள முயற்படுவேனே தவிர தெரிந்ததைப் போல் பாவனை செய்ய மாட்டேன். அதனால் ""தெரியவில்லை'' யென்றேன்.
"சரி. மண் என்றால் என்ன அர்த்தம்?'' என்றார். "மண் என்றால் மண், உலகம், வயல், திருமகள், செல்வம், வைணவர்கள் நெற்றிக்கிடும் திருமண் என்று பல அர்த்தங்கள் உண்டென்றேன்''. "வேறொன்றும் தெரியவில்லையா?'' என்றார். "தெரியவில்லை'' என்றேன்.
"புழுதிமண், செம்மண் போன்ற மண்ணில் உட்கார்ந்தால் என்ன ஆகும்?'' என்றார். ""வேட்டியில் ஒட்டிக்கொள்ளும். தட்டினாலும் அந்தச் செந்நிறம் போகாது'' என்றேன்.
"ஆற்றங்கரை மணல், குளக்கால் மணல், கடற்கரை மணல் இவற்றில் உட்கார்ந்தால் அந்த மணல் ஒட்டுமா?'' என்றார். "ஒட்டாது. அப்படியே ஒட்டினாலும் தட்டினால் போய் விடும்'' என்றேன்.
"ஆக மண் என்பது ஒட்டும் தன்மை உற்றது. மணல் என்பது ஒட்டும் தன்மை அற்றது. ஒட்டும் தன்மை அல்லாதது என்பதால்தான் மண்+அல்=மணல் என்று ஆனது. இது காரணப் பெயர்'' என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். மண், மரம், கல், மணல் எல்லாம் இடுகுறிப் பெயர் என்றுதான் படித்திருக்கிறோம். மணல் என்பது காரணப் பெயர் என்பது இவர் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
இதைப் பல இடங்களில் நான் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறேன். பல பேராசிரியர்களும் இளையராஜாவைப் பாராட்டியிருக்கிறார்கள். மண், மணலுக்கு இவர் சொன்ன விளக்கத்தை முதன்முதல் எழுத்தாளர் தோழர் ஜெயகாந்தனிடம்தான் சொன்னேன். அவர் மகிழ்ந்து, "இப்படியெல்லாம் கூடச் சிந்திக்கிறாரா!'' என்று வியந்து உடனே தொலைபேசியிலேயே இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
அதுபோல "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்ற குறளுக்கு இதுவரை என்ன பொருள் சொல்லி வருகிறோம்? எந்த நன்றியை ஒருவர் மறந்துவிட்டாலும் அவருக்கு உய்வுண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்துவிட்டால் அவருக்கு உய்வில்லை. இப்படித்தான் நாம் பொருள் கொண்டு வருகிறோம். பரிமேலழகரில் இருந்து மு.வ. வரைக்கும் இப்படித்தான் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
"எந்த நன்றியை என்றாலும் அதுவும் ஒருவன் செய்த நன்றியைத்தான் குறிக்கும். உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பதில் வரக்கூடிய செய்ந்நன்றியும் ஒருவர் செய்த நன்றியைத்தான் குறிக்கும். ஆக, இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடு?
ஒருவர் செய்த நன்றி எத்தகையதாக இருந்தாலும் அதை மறந்துவிட்டால் கூட அவனுக்கு உய்வுண்டு. ஆனால் பெற்றெடுத்து வளர்த்து, ஆளாக்கி உணவு தந்து, உடை தந்து, கல்வி தந்து சமுதாயத்தில் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக நம்மை நன்றாகத் தயார் செய்தார்களே தாய் தந்தையர்கள்... அவர்கள் செய்த நன்றியை அந்த மகன் மறந்துவிட்டால் அவனுக்கு உய்வில்லை. "உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்று வருகின்ற "மகற்கு' என்று சொல்லுக்கு உலக மக்கள் என்று பொதுப் பெயரில் அர்த்தம் கொள்ளக்கூடாது. புதல்வர்கள் என்ற சிறப்புப் பெயரில்தான் அர்த்தம் கொள்ள வேண்டும்'' என்றார். இப்படிச் சிந்திக்கக் கூடிய இசையமைப்பாளர்கள் இன்று யார் இருக்கிறார்கள்?
இதைப் பதினைந்து ஆண்டிற்கு முன் மதுரையில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டு இளையராஜா சொன்னது சரியா என்று மேடைக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த பேராசிரியர் இரா. மோகனிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியும் வியப்பும் கலந்த முறையில், "இப்படியும் சொல்லலாம். இதுதான் சிறப்பாக இருக்கிறது'' என்று கூறினார். அப்படிப் பேராசிரியர்களாலே பாராட்டப்பெற்ற தமிழ்ப்புலமை உடையவர் இளையராஜா.
நான் அவரைப் பற்றிப் பேசும்போது தவறாது இப்படிக் குறிப்பிடுவேன். "தமிழ்ஞானி என்றால் வாரியார் போன்றவர்களைக் குறிக்கும். அருள்ஞானி என்றால் வள்ளலார் போன்றவர்களைக் குறிக்கும். அரசியல் ஞானி யென்றால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களைக் குறிக்கம். இசைஞானியென்றால் இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும்.'' 
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளால் தலைகுனிந்திருந்த பாரதத் தாயின் திருமுகத்தைத் தன் சிம்பொனி இசையால் நிமிரவைத்த பெருமை இளையராஜா ஒருவரையே சாரும். அவரைப் பற்றி வைகோ நாடாளுமன்றத்திலே பேசியிருக்கிறார்.
அண்மையில் பத்ம விபூஷண் விருது கொடுத்து இளையராஜாவை மத்திய அரசு சிறப்பித்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கொடுத்திருக்க வேண்டிய விருது. இருந்தாலும் இப்போதாவது மத்திய அரசு கொடுத்ததே. அதற்காக மத்திய அரசுக்கு நமது வாழ்த்துக்கள்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com