சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 18: ஒன்பது அதிசயங்களில் ஒன்று!

டமர... டமர... டம் என்ற இசைக்கு ஏற்றாற்போல, பேண்ட் வாத்தியக்குழு நடைபயின்று சென்றுகொண்டிருந்தது.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 18: ஒன்பது அதிசயங்களில் ஒன்று!

டமர... டமர... டம் என்ற இசைக்கு ஏற்றாற்போல, பேண்ட் வாத்தியக்குழு நடைபயின்று சென்றுகொண்டிருந்தது. பின்னால் அணிவகுத்து வந்த குதிரைகளின் மீது கண்களைக் கவரும் வண்ணங்களில் உடையணிந்திருந்த வீரர்கள் அமர்ந்திருந்தனர். இப்படி வந்த பல குதிரைகள் தங்களுடைய கழிவுகளை வெளியேற்றிய வண்ணம் இருந்தது. அட, அது என்ன பசுமாட்டைப் போன்ற முக அமைப்பு முன்புறம், பின்புறம் மாட்டின் வாலைப்போன்ற தோற்றத்தை உடைய குப்பை அள்ளும் வண்டிகள், அவைகளின் அடிப்பாகத்தில் குப்பைகளை உறிஞ்சும் பெரிய, பெரிய வட்ட பிரஷ்கள், சுழன்றபடி வந்த அந்தக் கழிவுகளை உடனே சுத்தம் செய்துவிட்டன. எப்போது எல்லாம் குதிரைகள் வந்தனவோ, கழிவுகளை வெளியேற்றினவோ அப்போது எல்லாம் இந்த வண்டிகள் வந்தன அல்லது ஆட்கள் வந்து உடனே சுத்தம் செய்தனர். 

"தூய்மை தெய்வீகத்திற்கு அடுத்தது' என்பதின் முழு அர்த்தத்தை அங்கு உணர்ந்தேன்.

ஸ்டாம்பிட்டின் தொடக்கநாள் அணிவகுப்பு, நெஞ்சை அள்ளும் அந்த இனிய நினைவுகளோடு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம். எங்களுடைய மிக நெருங்கிய குடும்ப நண்பர் சிராஜ் என்ற முகமதிய பெண்மணி. அவரின் மகன் சலீம் தன் மனைவியுடன் கால்கிரியில் வாழ்கிறார். எங்களை அவருடைய இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார், பிறகு சொன்னார், ""இவ்வளவு தூரம் பயணித்து கால்கிரிக்கு வந்திருக்கிறீர்கள், நாளை காலையில் ஒன்பது மணிக்கு தயாராகி இருந்தீர்கள் என்றால் கால்கிரியின் ஒன்பது அதிசயங்களில் ஒன்று என்று சி.பி.சி. ரேடியோ பேனல் தேர்வு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியைக் கண்டு 
மகிழலாம்'' என்றார்.


""ஓ அப்படியா! இது என்ன?'' என்று ஆவலை அடக்கமுடியாமல் கேட்டேன்.

""இலவச பேன் கேக் (Pan cake) காலை உணவு, வகைகளை விநியோகிப்பது'' என்று முடித்துக்கொண்டார்.

கால்கிரி வாழ் மக்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். வெனிஸýலா (Venezuela) மற்றும் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக கனடாவில் பெட்ரோலியம் கிடைக்கிறது. மண், களிமண், தண்ணீர் இவைகளோடு கூடிய பெட்ரோலிய எண்ணெய் மண்ணாகவோ அல்லது கல்லாகவோ கிடைக்கிறது. இந்த மண்ணிலிருந்து பெட்ரோலியத்தைப் பிரித்தெடுக்கும் பல தொழிற்சாலைகள் ஆல்பர்ட்டாவில் உள்ளன. ஏனெனில் இந்த கனிமம் அதிக அளவில் காணப்படுவது ஆல்பர்ட்டாவில்தான் என்றால் மிகையாகாது.

இப்போது புரிந்திருக்கும் ஏன் கால்கிரி செல்வந்தர்களால் நிறைந்திருக்கிறது என்று! இந்த கால்கிரியின் மிகப்பெரிய திருவிழா 1988-இல், குளிர்கால ஒலிம்பிக்காக அரங்கேறியது. அடுத்த மாபெரும் விழா ஆண்டுதோறும், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும் ஸ்டாம்பிட் திருவிழாவாக இருப்பதினால், தண்ணீர்போல் பணத்தைச் செலவழித்து அதை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். இந்தத் திருவிழா நடக்கின்ற பத்து நாட்களுக்கும் காலைச் சிற்றுண்டியை யாரும் வீட்டில் தயாரிக்க மாட்டார்கள். ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பகுதியில் இருப்பவர்களோடு சேர்ந்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இடம் ஒரு தேவாலயம் அல்லது மசூதியின் வெளிப்புறமாக இருக்கலாம். ஒரு பெரிய மைதானமாகவும் இருக்கும் பட்சத்தில் பெரிய பெரிய அடுப்புகள் மீது பேன்கேக் சுட்டெடுக்கும் கல்களை வைத்து ஆயிரக்கணக்கில் அந்த கேக்குகளைத் தயாரிப்பார்கள். பிறகு பேக்கன் (Bacon) என்கின்ற பன்றிக் கறிகளின் துண்டுகளையும், ஸாஸ்úஸஜ்களையும் (Sausages), வறுத்தெடுக்கும் கடாய்களை வரிசையாக அமைத்து அவைகளை வறுத்துக் கொடுப்பார்கள். இதைத் தவிர பழசரம், பலவிதமான சிரப்புகள் (Syrup), முட்டை வறுவல்கள், காபி, உருளைக்கிழங்கு துண்டுகள் என்று சலீம் சொல்லச் சொல்ல அந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.


மறுநாள் காலையில் ஹோட்டல் வழங்கிய காலை உணவைப் புறக்கணித்துவிட்டு சலீமோடு புறப்பட்டோம், எங்கே என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். இலவச பேன்கேக் காலைச் சிற்றுண்டியை சாப்பிடு
வதற்காகத்தான்!

இலவசமாக சிற்றுண்டியை வழங்கும் பாரம்பரியம் எப்படி ஏற்பட்டது? எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது போல இந்தப் பழக்கம் தொடங்கியது 1923-ஆம் ஆண்டு என்கிறார்கள். (Chuckwagon) சக்வேகன் என்கின்ற குதிரைகள் இழுக்கின்ற பாரவண்டி ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகவும் பிரபலம். இந்த இடம் மரமற்ற பரந்த புல்வெளிகளைக் கொண்டது. இங்கே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கு சக்வேகன் வண்டிகளை இன்றளவும் உபயோகிக்கிறார்கள். இந்த கூடு வண்டிகளில் சமையல் அறையும் இருக்கும், உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கும் இடமும், அவைகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த வண்டிகள் 
உபயோகப்படுகின்றன. 

இப்படிப்பட்ட வண்டி ஒன்றில் அமர்ந்துகொண்டு ஜாக் மார்டன் என்கின்ற ஓட்டுநர், ஸ்டாம்பிட்டுக்காக வந்தவர்களை தன்னோடு காலை உணவை சாப்பிட அழைத்துள்ளார். அவருடைய இந்த விருந்தோம்பல் இன்று சமுதாய நிகழ்வாக மாறிவிட்டது.

ஸ்டாம்பிட் சக்வேகன் காலை உணவுக்குழு, ஒரு நாளைக்கு 150 காலன் பேன்கேக் மாவுக்கரைசல் என்ற கணக்கில் ஸ்டாம்பிட் முடியும் வரையில் 1500 காலன் பேன்கேக் மாவையும், 500 பவுண்டு பன்றி கறி என்று 5000 பவுண்டு பன்றிக்கறியை சமைக்கிறார்கள் என்று அறிந்து வாய் பிளந்தேன். 

சலீம், கால்கிரியின் ஒரு புகழ்மிக்க மாலின், வெளிப்புற மைதானத்திற்கு எங்களை இட்டுச் சென்றார். 60 ஆயிரம் மக்கள் அங்கே கூடியிருந்தனர். மொத்தம் 400 தொண்டர்கள் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தனர். அந்த மிகப்பெரிய இடத்தில் வரிசையாக காட்சிஅளித்த அடுப்புகளையும், கிரில் அடுப்புகளையும் கண்டமாத்திரத்தில் சன்னமான குரலில் கூவினேன், ""நெஜமாகவே இது கால்கிரியின் ஒன்பது அற்புதங்களில் ஒன்று'' என்று!

நாசியின் வழியாக நுழைந்த பலவிதமான உணவின் வாசனைகள் எங்களைத் திக்குமுக்காட வைத்தது. கைகளில் பிளேட்டுகளை ஏந்தியபடி ஏழை, பணக்காரன் என்ற எல்லைக்கோடுகளைக் கடந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது ""ஹேய்.. கைஸ்'' என்று யாரோ என் முதுகில் தட்ட திடுக்கிட்டுத் திரும்பினேன். அங்கே...

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com