சுடச்சுட

  
  KUPPAIKKAARAN_TEAM

  தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் தொடங்கி கிராமங்கள் வரை குப்பைகளின் ஆக்கிரமிப்பு பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. சுற்றுப்புறச் சூழலுக்கு அச்சுறுத்தலாகவும், சுவாசிக்கும் காற்றில் மாசுகளை பரப்பும் முக்கிய காரணியாக விசுவரூபம் எடுத்திருக்கும் குப்பைகளைக் கையாளமுடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையில் அரசுகள் திணறுகின்றன. பல தருணங்களில் குப்பை குவிப்புகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு போகச் செய்யும் அளவுக்கு துர்நாற்றம் வீசி, ஈக்கள் கொசுக்கள் நோய்க்கு கிருமிகளை உற்பத்தி செய்யும் நிலையங்களாகவும் குப்பைகள் மாறிவிடுகின்றன. கோடிகள் செலவழித்து குப்பைகளை அகற்றினாலும் மீண்டும் புதிய குப்பைகள் சேர்ந்து சுகாதார சவால்களாக நிற்கின்றன. காக்கைகளை கழிவுகளை அகற்றும் ஊதியம் வாங்கா பறவை என்று சொல்வதுண்டு. சேலம் நகருக்கு குப்பையிலிருந்து ஆறுதல், ஆசுவாசம் தரும் "குப்பைக்காரன்' சேலம் நகரைத் தூய்மைப் படுத்தும் காகங்களாக மாறியுள்ளது.
  குப்பைகளைக் கையாளுவதில் சாதனை படைத்துவரும் சேலம் "குப்பைக்காரன்" அமைப்பை உருவாக்கியவர்கள் ஆறு படித்த இளைஞர்கள். சைதன்யன், கெüதமுகன், பரணீதரன், அப்துல் கனி, சைதன்யனின் மனைவி ஹரிணி, பிரஷாந்த். "குப்பையை நேசியுங்கள்'. அதுதான் "குப்பைக்காரனின்' தாரக மந்திரம்.
  சைதன்யன் விளக்குகிறார்:
  "நமக்குத் தேவையில்லை என்று எதைக் களைகிறோமோ அதுதான் குப்பை. குப்பைகள் பலவகைப் படும். உணவு மிச்சங்கள், காய்கறி கழிவுகள், பழையதுணிமணிகள் செருப்புகள், கெட்டுப் போன கம்ப்யூட்டர் மொபைல், பிளாஸ்டிக் பைகள் இப்படி பல குப்பைகளில் சேரும். ஒருவர் தனக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிடும் பொருள்கள் இன்னொருவருக்குப் பயன்படும். எடுத்துக் காட்டாக வாழைப்பழம் தின்றுவிட்டு கீழே போடும் தோல் மாட்டுக்கு உணவு. உலர்ந்த இலைகளை நாம் தீயிட்டு எரிக்கிறோம். இலைகள் மக்கினால் மண்புழுவுக்கு உணவாகிறது. உலகில் எதுவுமே பயன்படாமல் போகாது. ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தலாம். இந்த சிந்தனையில் பயணிப்பதுதான் "குப்பைக்காரன்'. 
  "குப்பைக்காரன்' அமைப்பை முறையாகத் தொடங்கி எட்டு மாதம் ஆகிறது. குப்பையைக் கண்டால் பொதுவாக அனைவருக்கும் வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால், குப்பைகளை உருவாக்குவது நாம்தான் என்பதை மறந்துவிடுகிறோம். தொழிற்சாலைகள், ஆலைகள், திருமணம், வரவேற்பு, உணவு விடுதிகள் போன்றவற்றில் உணவுக் கழிவுகள் அதிகம் உருவாகும். மீதமான உணவு, இலைகளில் மிச்சம் வைக்கப்பட்ட உணவினை குப்பை மேடுகளில் களைவதால் நீர், நிலம், காற்று, சுற்றுப்புறம் அனைத்துமே பாதிக்கப்படுகிறது. அவற்றை மக்கவைத்து பயோ கேஸ் தயாரிக்கலாம். இயற்கை உரம் உற்பத்தி செய்யலாம். குப்பைக்காரன் இந்த முயற்சியிலும் ஈடுபட்டுள்ளான். விருப்பப்படுபவர்களுக்கு "பயோ-கேஸ்' தயாரிக்கும் அமைப்பினை வீடுகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், ஆலைகளில் அமைத்துத் தருகிறோம். இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் சொல்லித் தருகிறோம். இப்போது பலரும் இயற்கை விவசாயம் நோக்கி திரும்பியுள்ளார்கள். அதனால் இயற்கை உரத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. குப்பைகளை சரியான முறையில் கையாண்டால் நல்ல வருமானம் கிடைக்கும். அத்துடன் குப்பைகளும் இல்லாது போகும். 
  "போகிப் பண்டிகையின் போது பழையனவற்றை எரிப்பது நமது பழக்கமாக இருக்கிறது. எரிவதால் ஏற்படும் புகை சுவாசப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. "புகையில்லா போகிப் பண்டிகை'க்காக சேலம் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன், சேலம் நகரின் பல பகுதிகளில் சுமார் நூறு கூடைகளை வைத்து பழையன என்று மக்கள் தீர்மானிக்கும் பொருள்களை அதில் போடுமாறு கேட்டுக் கொண்டோம். பழைய துணிமணிகள், பயன்படுத்தப்பட்ட செருப்புகள், ஷூக்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாமான்கள் என்று குவிந்தன. அவற்றை இனம் பிரித்து மீண்டும் பயன்படுத்தத் தகுதி வாய்ந்த பொருள்களைப் பிரித்து தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கினோம். சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும் . மீண்டும் உடுத்தத் தகுந்த இருபதாயிரம் உடைகள் கிடைத்தன. ஏனைய தேவையற்றப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தோம்.
  எங்களது அடுத்த திட்டம் "கழிவுகளே இல்லாத திருமணங்கள்... விழாக்கள்'. இந்த நிகழ்ச்சிகளில் உருவாகும் எல்லாவித கழிவுகளையும் குப்பைமேடுகளில் போய்க் கொட்டாமல் நேரடியாக மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு போய் கொடுப்பதுதான் "ஸீரோ வேஸ்ட்' முறை. "கழிவுகளே இல்லாத' நிகழ்ச்சிகளை நாங்கள் யதார்த்தம் ஆக்கியிருக்கிறோம். 
  சேலம் மாநகராட்சியின் சில வார்டுகளில் உருவாகும் கழிவுகளை விலைக்கு வாங்குகிறோம். இவற்றை தரம் பிரித்து மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கிறோம். தேங்காய் சிரட்டைகளைக் கூட நாங்கள் விலைக்கு வாங்குகிறோம். குப்பைகளை பிரிப்பதில் கால விரயம் ஏற்படுகிறது.
  வீடுகளில் எல்லாவகை குப்பைகளையும் ஒன்றாக போட்டு கலந்துவிடுகிறார்கள். அதனால் வீட்டில் உணவு கழிவுகள், சானிடரி நாப்கின்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்க மூன்று பைகளை வழங்க உள்ளோம். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்தத் திட்டமும் வெற்றி பெறும். 
  பெரிய அளவில் கழிவுகளை உருவாக்கும் தொழில் கூடங்கள், உணவு விடுதிகளுக்கு அந்த கழிவுகளை எப்படி கையாளலாம் என்று யோசனைகளையும் வழங்குகிறோம். இயற்கை வாயு தயாரிக்கும் கருவிகளை சேலத்தில் நாற்பது இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் இரண்டு பள்ளிகளும் சில மருத்துவமனைகளும் அடக்கம். சேலம் நகரை எங்கள் வசதிக்காக சில பகுதிகளாக பிரித்து நாங்களே குப்பைகளை காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை சேகரித்து மாநகராட்சி எங்களுக்கு ஒதுக்கித் தந்திருக்கும் இடத்தில் கொட்டி பிரிப்போம். எங்கள் ஆறுபேருக்கு உதவ ஏழு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு டன் குப்பை சேகரிப்பில் தொடங்கி இப்போது மாதம் சுமார் ஆறு டன் குப்பைகளை சேகரித்து வாரம் ஒரு முறை மறு சுழற்சிக்காக அனுப்பி வைக்கிறோம். 
  கல்லூரியில் படிக்கும் போது ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக "கிரீன் கனெக்ட்' என்று, உணவு, காய்கறி கழிவுகளைக் கொண்டு இயற்கை வாயு உற்பத்தி செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தோம். பிறகு வேலை காரணமாக நாங்கள் பல திசைகளில் திசை மாறிய பறவைகள் ஆனோம். வேலைகளில் மன நிறைவு கிடைக்கவில்லை. வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஒன்றாகச் சேர்ந்துள்ளோம். குப்பைகளை நேசிக்க, "குப்பைக்காரன்' அமைப்பை உருவாக்கினோம். கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறோம். இங்கும் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு இந்த குப்பை சேகரித்துக் கையாளும் வேலை தேவைதானா என்ற கேள்வி இன்றைக்கும் தொடருகிறது. 
  சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம் . ஆனால் சுத்தம் செய்யும் வேலையை வேறு ஒருவர் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல், பிறர் சொல்லாமல் நாங்கள் முன்வந்து குப்பைகளை சேகரிக்கிறோம். எங்களுக்கு சொந்த ஊரான சேலத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்று தூய்மைப் பணியில் நிறைவு காண்கிறோம்'' என்கிறார்கள் "குப்பைக்கார' வைரங்கள்...! 
  -சுதந்திரன்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai