Enable Javscript for better performance
ஜெயலலிதா ரசித்து கேட்ட பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்- Dinamani

சுடச்சுட

  
  MUTHULINGAM

  'கவிதை உறவு' பத்திரிகை ஆண்டு விழாவில் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் காந்தி, நல்லி குப்புசாமி செட்டியார், ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர்.

  ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 66
  சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் நம்நாடு எப்படி இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு எப்படி இருக்கிறது என்பதை 1949-ஆம் ஆண்டு வெளிவந்த "நல்லதம்பி' என்ற படத்தில் கலைவாணர் பாடியிருப்பார். அந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
   "அந்நியர்கள் நமைஆண்டது அந்தக் காலம்
   நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
   பேசுவதற்கும் உரிமையற்றது அந்தக் காலம்
   பிரச்சாரப் பெருமையுற்றது இந்தக் காலம்'
   என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல்.
   அரசியல் மேடைகளில் உண்மையைப் பிரச்சாரம் செய்தால் கூட அதற்கும் வழக்குப் போடுவது இந்தக் காலம் என்பது கலைவாணருக்கும், நாராயணகவிக்கும் அன்று தெரியாமல் போய்விட்டது.
   ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்று இடைவெளி அதிகமாகிவிட்டது. மக்கள் விரும்பாத எதையும் ஆட்சியாளர்கள் வலிந்து திணிக்கக் கூடாது.
   அப்படித் திணித்தால் அதற்கான பதில் தேர்தல் முடிவில்தான் அவர்களுக்குத் தெரியக் கூடும். எல்லாத் தொகுதியிலும் பணத்தைக் காட்டி வெற்றி பெற முடியாது.
   அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோருடன் ஆளுமைத்தன்மை மிக்க, மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களின் சகாப்தம் தமிழ்நாட்டில் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட தலைவர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த வரை யாருமிலர். திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக வைகோ வந்திருக்க வேண்டும். எங்கோ சறுக்கல் ஏற்பட்டு அவரைத் தடுமாற வைத்து விட்டது.
   இன்றைய அரசியல் சுயநலத்தின் காரணமாகப் பொதுமக்களைச் சுரண்டுகின்ற அரசியல் ஆகிவிட்டது. பேராசிரியர் பழனித்துரை தினமணி கட்டுரையொன்றில் குறிப்பிட்டதைப் போல அறம் பிறழ்ந்த அரசியலாகப் பொய்ம்மை நிறைந்த அரசியலாக இன்றைய அரசியல் மாறிவிட்டது ஆட்சியில் இருப்போர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதுபற்றிப் பல்லாண்டுகளுக்கு முன்பு நானே ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். இதைச் சில கவியரங்கங்களிலும் பாடியிருக்கிறேன்.
   "உழைப்பதற்குத் தெரிந்தவர்கள் வெயிலில் வாடி
   உறுதொழில்கள் புரிகையிலே இந்த நாட்டில்
   பிழைப்பதற்குத் தெரிந்தவர்கள் கற்றுக் கொண்ட
   பெரிய தொழில் அரசியல்தான்! மேடை கட்டி
   அழைப்பதற்குத் தெரிந்தவர்கள் இருப்பதாலே
   அளப்பதற்குத் தெரிந்தவர்கள் பெருகிவிட்டார்
   குழைப்பதற்குத் தெரிந்தவர்கள் மக்களுக்குக்
   குழைக்காமலே நாமம் போட லானார்'
   இதைப்போல் இன்னும் சில எண் சீர் விருத்தங்கள் இருக்கும். சரி, "நல்லதம்பி' படத்தில் என்.எஸ்.கே. பாடிய பாடலை மேலும் பார்ப்போம்.
   "நெனச்சதையெல்லாம் எழுசி வச்சது
   அந்தக் காலம் - எதையும்
   நேரில் பார்த்தே நிச்சயிப்பது
   இந்தக் காலம்
   மழைவரும் என்றே மந்திரம் ஜெபிச்சது
   அந்தக் காலம் - மழையைப்
   பொழிய வைக்கவே இயந்திரம் வந்தது
   இந்தக் காலம்
   இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது
   அந்தக் காலம் - மக்களை
   இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவது
   இந்தக் காலம்
   துரோபதை தன்னைத் துகில் உரிஞ்சது
   அந்தக் காலம் - பெண்ணைத்
   தொட்டுப் பார்த்தா சுட்டுப் புடுவாள்
   இந்தக் காலம்
   சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம்
   சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
   கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம்
   குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம்
   பக்தி முக்கியம் அந்தக் காலம்
   படிப்பு முக்கியம் இந்தக் காலம்
   கத்தி தீட்டுவது அந்தக் காலம்
   புத்தி தீட்டுவது இந்தக் காலம்
   பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது
   அந்தக் காலம் - வாழ்வின்
   கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது
   இந்தக் காலம்'
   அறிவு வளர்ச்சி இன்று எப்படி இருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று. ஆனால் அறிவியல் வளர்ந்திருக்கிற அளவிற்கு சமுதாயத்தில் பண்பாடு வளர்த்திருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.கொலை, களவு, பாலியல் வன்முறை இவை அன்றாட நிகழ்ச்சிகளாக இந்தியா முழுதும் பரவிவிட்டது.
   இதைத் தடுப்பதற்கு அரபிய நாட்டுச் சட்டங்களைக் கொண்டு வந்தால் கூடப் பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவு நாடு சீர்கேடு அடைந்து விட்டது.
   அப்படிப்பட்ட இந்த நாட்டிலே மக்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை 1954-ஆம் ஆண்டு வெளிவந்த "ரத்தபாசம்' படத்தில் எம்.கே.ஆத்மநாதன் ஒரு பாடலில் விளக்கியிருப்பார். இந்தப் படத்திற்கு இசையும் இவர்தான். திருச்சி லோகநாதன் பாடிய பாடலிது.
   "டல்லு டல்லு டல்லு - வெரி
   டல்லு டல்லு டல்லு - வெரி வெரி
   டல்லு டல்லு டல்லு
   நல்ல முறையில் நடந்த பிசினசு
   எல்லாம் சீர்கெட்டு - நம்ம
   நாட்டிலே இப்போ பார்க்கப் போனா
   மணி மார்க்கெட்டு - வெரி
   டல்லு டல்லு டல்லு'
   500 ரூபாய் நோட்டு ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்த காலத்தில் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
   "பரம்பரைப் பண முதலாளி முகத்தைப்
   பார்த்தா தெரியுது டல்லு - அவுங்க
   பாங்க் பேலன்ஸ் நில்லு - சொந்தப்
   பங்களா கடனுக்குச் செல்லு - வெள்ளிப்
   பாத்திரம் பண்டம் பட்டுப் புடவை
   பவுனு வயிரக் கல்லு - சேட்டு
   பனியாக் கடையின் பில்லு - உருவில்
   பறந்து வந்து பாழாய்ப் போகுது
   பகட்டு எங்கே சொல்லு
   முகத்துக்குப் பவுடர் உதட்டுக்குச் சாயம்
   மூக்குக் கண்ணாடி மாட்டி
   முடிசூ டாத மகா ராணிபோல்
   நடக்குறா சீமாட்டி
   சீமாட்டி கையிலே ராட்டின மாடும்
   சிங்காரப் பையி பிளாஸ்டிக்கு - அதைத்
   திறந்து பார்த்தா பணங்காசில்லே
   சீப்புக் கண்ணாடி லிப்ஸ்டிக்கு'
   - என்று பாடல் தொடர்ந்து போகும். அந்த நாளிலும் இந்த நாளிலும் இப்பாடலின் கருத்துப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
   ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்ட பிறகு கறுப்புப்பணம் ஒழிந்துவிட்டதா என்ன? அது ஒழியாது என்பதற்கு அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த வருமான வரித்துறை
   சோதனையே அதற்குச் சான்று.
   சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான கவிஞர் ஜீவ பாரதியைப் பற்றி ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் இவர் பாடலைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
   இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். "முதல் வசந்தம்', "இங்கேயும் ஒரு கங்கை', "பாலைவன ரோஜாக்கள்', "24 மணிநேரம்', "விடிஞ்சாக் கல்யாணம்', "அன்பின் முகவரி', "சின்னத்தம்பி பெரியதம்பி' உட்படப் பதினொன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இதில் பல படங்களில் நானும் பாடல் எழுதியிருக்கிறேன்.
   மணிவண்ணன் இயக்கிய "இனி ஒரு சுதந்திரம்', "சந்தனக் காற்று' ஆகிய இரு படங்களில் இவர் பாடல் எழுதியிருக்கிறார். சந்தனக் காற்று படத்தில் இவர் எழுதிய ஒரு பாடல்,
   "சந்தனக் காற்றில் புன்னகைப் பூக்கள்
   ஆடுது நாட்டியமே
   வெண்பனி தூவ புன்னகை யோடு
   பூத்தது பூவினமே'
   - என்று தொடங்கும். இதற்கு இசையமைத்தவர் சங்கர்
   கணேஷ். பாடியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
   "வானத்தின் மேலே மேகப் பறவை
   ஊர்வலம் போகின்றது
   வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்
   ஓவியம் வரைகின்றது
   மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்குள்
   தூக்கம் கலைகின்றது
   மூலை முடுக்கில் ஓலை இடுக்கில் சூரியன் நுழைகின்றது'
   என்று கவித்துவத்தோடு சரணத்தை எழுதியிருப்பார்.
   இவரைப் போன்றவர்கள் படங்களுக்கு அதிகம் எழுதவில்லை. அதற்காக இவர் யாரையும் அணுகியதும் இல்லை. ஆனாலும் இவர் எழுத்துக்கள் வாடாத முல்லை. சினிமாவுக்கு எழுதினால்தான் கவிஞன் என்று அர்த்தமா என்ன?
   கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதா
   கிருஷ்ணனும் இரண்டு படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் மோகன் காந்திராமன் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த "ஆனந்த பைரவி' என்ற படமும் ஒன்று. அதில்
   "உமையவளே மாரியம்மா
   வரம் தருவாய் மாரியம்மா
   விழிமலர்க் கண்ணை உந்தன்
   பதமலர் தன்னில் வைத்து உன் சந்நிதி சரணடைந்தேன்'
   என்ற பாடல் இவர் எழுதிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் பாடி நடித்தவர் பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி. இதற்கு இசை இராமானுஜம்.
   இதுபோல் மலையாளப் பட இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் "தாகம் தீராத மேகம்' என்ற படத்தில் சங்கீத ராஜன் இசையில் நான்கு பாடல்கள் எழுதினார் ஏர்வாடி. படம் வெளிவரவில்லை.
   இவர் வங்கி அதிகாரியாக இருந்த காரணத்தால் படத்துறையில் இவரால் கவனம் செலுத்த இயலவில்லை. அதே நேரத்தில் வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறார்.
   2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப்
   பதவியேற்றபோது அரசின் சார்பில் குழந்தைகள் பாடி வரவேற்பதைப் போல் ஒரு பாடல் எழுதவேண்டும் என்று அன்றைய தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறைச் செயலாளர் ராஜாராம். ஏர்வாடி ராதாகிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டபோது,
   "அம்மா அம்மா அன்புள்ள அம்மா
   ஆயிரம் நன்மைகள் செய்தாயே அம்மா'
   என்று தொடங்குகின்ற பாடலை எழுதினார். இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்தார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா நடைபெற்றது. குழந்தைகள் பாடி வரவேற்பதுபோல் அமைந்த இப்பாடலை, ஜெயலலிதா மிகவும் ரசித்துக் கேட்டார். பாடல் எழுதியவர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். இவர் வங்கி அதிகாரி என்பதும் அம்மாவுக்கு நன்கு தெரியும். அத்தகைய சிறப்புக்குரியவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்.
   (இன்னும் தவழும்)
   படங்கள் உதவி: ஞானம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai