களைப்பில்லாத கலைப்பயணம்

'ஆபத்துக்கொரு ஆனந்தி', "தில்லானா ஆனந்தி' என்றெல்லாம் அடைமொழிகளுடன் அழைக்கப்படும் டி எஸ் ஆனந்தி, சுமார் 50 வருடங்களாக தமிழ்ப் பொது மேடைகளில் பிரபலமாக இருக்கிறார்.
களைப்பில்லாத கலைப்பயணம்

'ஆபத்துக்கொரு ஆனந்தி', "தில்லானா ஆனந்தி' என்றெல்லாம் அடைமொழிகளுடன் அழைக்கப்படும் டி எஸ் ஆனந்தி, சுமார் 50 வருடங்களாக தமிழ்ப் பொது மேடைகளில் பிரபலமாக இருக்கிறார். முதல் பத்து ஆண்டுகள், அவர் பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இந்தியாவெங்கும் பல்வேறு மேடைகளில் நடனமாடி வந்தார். 1977-இல் முதல் மேடை நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதைப் பயன்படுத்திக் கொண்டு "லட்சுமி கடாக்ஷம்' என்ற நாடகத்தில் அறிமுகமானார். விரைவிலேயே தம் நுட்பமான நினைவாற்றல், நடிப்புத் திறமை மூலம் படிப்படியாக முன்னேறி பல்வேறு முக்கிய பாத்திரங்களில் பிரபலமானார்.
 "ஈஸ்வர் அல்லா தேரே நாம்', "மணல் கயிறு' (பின்னர் திரைப்படமாகவும் வந்தது), "பாலவாக்கத்தில் கிரேசி திருடர்கள்', "கண்ணாமூச்சி', "டைரக்டர் சார் ஒரு யு.கே.ஜி', "அந்த ஏழு நாட்கள்', "தண்ணீர் தண்ணீர்', "வாஷிங்டனில் திருமணம்', "நம்மவர்கள்', "ஞான பீடம்' என்று பல பிரபல நாடகங்களில் ஓய்.ஜி.மகேந்திரா, விசு, வெங்கட், குடந்தை மாலி, கோவை ஸ்வாமிநாதன், கோவை அனுராதா, எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்காக நடித்திருக்கிறார்.
 இதுவரை அவர் 200-க்கும் மேற்பட்ட நாடகங்களில் 5,000-க்கும் மேற்பட்ட தடவை அரங்கேறியிருக்கிறார். பழம்பெரும் நாடகக் கம்பெனிகளிலிருந்து சமீப கால புது குழுக்கள் வரை அனைத்திலும் அதே ஈடுபாட்டுடன் நடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று விளங்குகிறார்.
 தான் எடுத்துக்கொண்ட பாத்திரங்களில் மட்டும் சோபிக்காமல் திடீரென்று யாராவது நடிகை மேடையேற முடியாவிட்டாலும், அவரது பாத்திரத்தை அவசர அவசரமாக ஏற்பதில் அவர் காட்டாத தயக்கம் தான் "ஆபத்திற்கு ஒரு ஆனந்தி' என்று மேடை நாடக தயாரிப்பாளர்களிடையே பெயர் வாங்கிக் கொடுத்தது. நடனமாடிய நாட்களில் "தில்லானா மோகனாம்பாள்' புகழ் கொத்தமங்கலம் சுப்புவிடம் "தில்லானா ஆனந்தி' என்று பெயர் வாங்கினார்.
 "கீழ்வானம் சிவக்கும்' நாடகத்திற்காக (பின்னர் அது சிவாஜி கணேசன் நடித்த திரைப்படமாகவும் வெளி வந்தது. அதிலும், ஒரு சிறிய பாத்திரத்தில் ஆனந்தி நடித்தார்) மயிலாப்பூர் அகாதெமியின் சிறந்த நடிகை விருது, கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் குணச்சித்திர நடிகை விருது, ரோட்டரி க்ளப், இன்னர்வீல் கிளப் விருது, கிருஷ்ண கான சபாவின் மேடை நடிகை விருது, விஸ்டம் பத்திரிகை விருது என்று பலவும் பெற்றவருக்கு சமீபத்தில் "நாடகக் கலா நிபுணர்' விருதும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் மூலம் கிடைத்தது. விருதை டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வழங்க, திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் அவருக்குப் பொன்னாடை போர்த்தினார்.
 சினிமாத் துறையிலும் இவர் கால்பதிப்பு இருந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் 30-க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகைகளுக்கு டப்பிங் குரலும் திரைப்படங்களில் கொடுத்திருக்கிறார். "நிம்மதி உங்கள் சாய்ஸ்', "காதல் பகடை', "அண்ணாமலை' போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். உயரிய கிரேடு பி நடிகையாக அகில இந்திய வானொலியிலும் அந்தஸ்து பெற்றிருக்கிறார்.
 தாம் கலைப் பணியாற்றிய போது மறக்க முடியாத கணங்களாக அவர் சொல்வது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமைச் சந்தித்தபோது "நம்மவர்கள்', "ஞான பீடம்' இரண்டு நாடகங்களையும் அவர் நேரில் கண்டு களித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததும் தான். சிவாஜி கணேசன், நாகேஷ்,கமல்,ரஜினிகாந்த் ஆகியோருடன் நடித்ததும் தம்மால் மறக்க இயலாது என்று சொல்லும் ஆனந்தி, சாவியின் "வாஷிங்டனில் திருமணம்' நாடகத்தில் தாம் மிஸஸ் ராக்பெல்லர் ஆக நடித்ததை இனிய சம்பவமாக நினைவில் வைத்திருக்கிறார்.
 - ஸ்ரீதர் சாமா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com