இந்தியாவின்   ஒரே ஒரு பறக்கும் மனிதன்!

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்,  ஹீ மேன்,  பேட் மேன் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அமானுஷ்ய  சக்தி கொண்ட இந்த கேரக்டர்களை கடந்து வராத குழந்தைகள், இளைஞர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியாவின்   ஒரே ஒரு பறக்கும் மனிதன்!

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்,  ஹீ மேன்,  பேட் மேன் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அமானுஷ்ய  சக்தி கொண்ட இந்த கேரக்டர்களை கடந்து வராத குழந்தைகள், இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். இந்த  கேரக்டர்கள் அம்பு மாதிரி பறப்பார்கள். தாவுவார்கள். தண்ணீரில்  நடக்கிறேன்  என்று  நடந்து காட்டியவர்கள் உண்டு. தரையிலிருந்து  சில அடிகள் அந்தரத்தில்  நின்று அதிசயிக்க வைக்கிறவர்களும் உண்டு.   இவை  மாஜிக் எனப்படும் மாயாஜால நிகழ்ச்சியில் நடக்கும். கோவை இளைஞர் ஒருவர்,  திறந்தவெளியில் 168  அடி  உயரம் பறந்திருக்கிறார் என்றால்  நம்ப முடிகிறதா..?

விக்னேஷ் பிரபு, இருபத்திநான்கு வயது இளைஞர். கணினி தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு படித்திருக்கும் விக்னேஷ்,  இந்தியாவின் முன்னணி மாயாஜாலக்காரர். மாயாஜாலத்தில் எட்டு தேசிய விருதுகளும்  மூன்று சர்வதேச  விருதுகள் பெற்றிருப்பவர்.  தனது "ஜீபூம்பா' அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

""சிறுவயதிலிருந்தே மாஜிக் என்னைக் கவர்ந்து விட்டது. தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்  மாஜிக் நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்த்து மாஜிக் பழகிக் கொண்டேன். வீட்டில், பள்ளியில், அதைச் செய்து காட்டத்  தொடங்கினேன். மேஜிக்  பைத்தியமாகிப் போனேன் என்று சொல்லலாம்.  வீட்டில் தொடக்கத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும்,   எனது ஆர்வத்தைக் கண்டு போகப் போக   அனுமதித்தார்கள். நான் யாரிடமும்  சிஷ்யனாக இருந்து மேஜிக் பழகவில்லை. எல்லாம் நானே  கற்றுக் கொண்டவை. எனது மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்  இருப்பதால் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பரில் "தாய்லாந்து மேஜிக் எக்ஸ்டராவேகான்சா' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும்  இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உலகில் புகழ்பெற்ற மாயாஜால  வித்தகர்கள் கலந்து கொள்கிறார்கள்.    

மேஜிக் தொழிலிலும் பல பிரிவுகள் உண்டு. தொடக்கத்தில், பூவை புறாவாக்குவது... தொப்பியில் இருந்து புறாவை வரவழைப்பது, தொண்டைக்குள் கத்தியை செலுத்துவது போன்ற  வழக்கமான மேஜிக் செய்து வந்த நான், பிறகு  அந்தரத்தில் பறக்க  முயற்சி செய்தேன்.  "மெண்ட்டலிசம்' எனப்படும்  பிரிவிற்கு மாறினேன். சிந்தனையால் சித்து வேலை செய்வது என்று சொல்லலாம். மாஜிக் என்பது பொருள்களை வைத்து செய்வது. மெண்ட்டலிசத்தில் பார்வையாளர்களின்  மனதை தந்திரம் மூலம் கட்டுப்படுத்தலாம். அவர்கள் மனதை  சில நிமிடம் உறைய வைத்துவிட்டு, நான் மட்டும் இயங்குவதுதான் "மெண்ட்டலிசம்'. எனக்கு கொஞ்சம் சைக்காலஜியும் ஹிப்னாட்டிசமும் வரும். அதை சீட்டுக்கட்டுகள், புத்தகங்களைக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். எதிரில் இருப்பவரின் மனதை அவர் மன ஓட்டத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஒருவர் தேர்ந்தெடுக்கும் புத்தகத்தில், அவர் தேர்ந்தெடுக்கும் பக்கத்தில் (page) இருக்கும் முதல்  அல்லது கடைசி வரி  அல்லது வார்த்தையை புத்தகத்தைப் பார்க்காமலேயே என்னால் சொல்ல முடியும். புத்தகம்  எதிரே இருப்பவரின் கையில் இருக்கும்போதே, அவர் தேர்ந்தெடுக்கும் பக்கத்தின் ஒரு பகுதியை  எனது   திறமையால்  கிழித்து அவருக்குத் தர முடியும். அவர் தேர்ந்தெடுக்கும்  சீட்டை அவர்  இரண்டு கைகளுக்குள்  பாதுகாப்பாக  வைத்திருக்கும்போதே என் சீட்டை அவர் கைக்குள் மாற்றி வைத்து, அவர் கைக்குள் இருக்கும் சீட்டை எனது  கைக்கு கொண்டு வர முடியும். "மெண்ட்டலிசம்' பிரிவில்  இன்னும் நான்  பயிற்சி  செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.

வானில் பறந்தது, என்னை "இந்தியாவின் பறக்கும் மனிதன்' என்று சொல்ல வைத்திருக்கிறது. இதற்காக நான் பத்தாண்டுகள் பயிற்சி செய்திருக்கிறேன். பொதுவாக  அந்தரத்தில்  நிற்பது.. மேல போவது போன்ற நிகழ்ச்சிகளை அரங்கு மேடையில் பல யுக்திகள் கொண்டு செய்வார்கள். நான் இந்த வழக்கத்திலிருந்து வித்தியாசப்பட்டு, கோவையில் ஒரு வணிக வளாகத்தில் மாடியில் வைத்து நிகழ்த்தினேன். இதில் நான் எந்தக் கருவியையும் பயன்படுத்தவில்லை. உள்மனதை உயிர்ப்பித்து செய்த அமானுஷ்ய செயல். நான் வானில் 168 அடி உயரம் பறந்ததை 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்திருக்கிறேன். நான் பறந்ததைப் பார்த்தவர்களும் அவர்களின் செல்போனில் என்னைப் பதிவு செய்திருக்கிறார்கள். நான்  கயிறையோ, வேறு எந்த கருவியையோ பயன்படுத்தவில்லை என்பதை வீடியோ உறுதிப்படுத்தும். அந்தரத்தில் எங்கே கயிறைக் கட்டி வைப்பது? அந்தரத்தில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே போவது நடக்கக் கூடிய விஷயமல்ல மாயம்,  மந்திரத்திற்கும் அப்பாற்பட்டது. மெண்ட்டலிசம்   மூலம்  வானில் பறந்த பிறகு  எனது  ரத்த அழுத்தம் வெகுவாக  குறைந்து விட்டது. மருத்துவமனைக்கு  போய்  அனுமதிக்க வேண்டி வந்தது.  ஆழ்மனதை ஒருமுகப்படுத்துவதால் பல உடல் உபாதைகள் வரும். எனக்கு ரத்த அழுத்த குறைவு வந்தது. சிலருக்கு வேறுவிதமான உடல் உபாதை வரும். பாசிட்டிவ் எனர்ஜியை என்னுள்  உருவாக்குவதன் மூலம் பறக்கலாம். வா என்றால் வந்துவிடாது  அந்த சக்தி. அதற்குப் பலமான  பயிற்சிகள் வேண்டும். 

இன்னொரு  வித்தையும் என்னிடம் உண்டு. நூறு கி.மீ  வேகத்தில்  என்னை நோக்கிப் பறந்து வரும்  கார்  என்னை மோத வரும் போது  கார்  என்னைத் தொடும் முன் நான் மாயமாகி பூட்டியிருக்கும் அந்தக் காருக்குள் வந்துவிடுவேன்... இப்படி பல  விஷயங்கள் இன்னும் நிகழ்த்த வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். பார்வையாளர்களை அதிசயப்படுத்த  ஆனந்தப்படுத்த  இந்த விதம் விதமான   தந்திர மாயாஜாலங்களை  செய்து வருகிறேன். எனக்கு உதவியாக பதினொரு உதவியாளர்கள் இருக்கின்றனர்.  என்னைவிட மூத்தவர்களும்   எனக்கு உதவியாளராக இருக்கிறார்கள். பயிற்சி ஒருவரை முழுமையாக்கும். பார்வையாளர்களுக்கு புதிது புதிதாக  அதிசயங்களை நிகழ்த்துவதற்காக நான் பயிற்சியைத் தொடர்கிறேன்'' என்கிறார் "பறக்கும் மனிதர்' விக்னேஷ் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com