கண்கண்ட சாமி!
By | Published On : 09th December 2018 10:00 AM | Last Updated : 09th December 2018 10:00 AM | அ+அ அ- |

எல்லா ஆட்சியரும் தங்கள் பொறுப்புகளை செய்து வந்தாலும் சில ஆட்சியர்கள் மட்டுமே அரசு விதிகள் ஒருபுறம் இருக்க, சமூக நீதியின்படி பொறுப்பாகச் செயல்பட்டு அந்த மாவட்ட மக்களுக்கு ஆட்சியராக இல்லாமல் ஒரு பாதுகாவலராக மாறுகிறார்கள். மக்களின் மனங்களிலும் இடம் பிடிக்கிறார்கள். செய்தி ஊடகங்களாலும் சமூக வலைத்தளங்களாலும் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி, சென்ற வாரம் பரபரப்பு செய்தியானார். பெற்ற மகன்களால் கொடுமைக்கு ஆளான ஏழை விவசாயிக்கும், அவரது மனைவிக்கும் சொத்தினை மீட்டுக் கொடுத்துள்ளார். "ஒரு வாரத்திற்குள் நீதி கிடைக்க ஆவன செய்யும் ஆட்சியர்' என்று தமிழகம் வியந்து போனது.
கண்ணன் (வயது 75). விவசாயி. கண்ணனின் மனைவி பூங்காவனம் (வயது 63). இவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில், வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். பழனி (வயது 40). இரண்டாவது மகன் செல்வம் (வயது 37). மகன்கள் இருவருக்கும் திருமணமாகி தனிகுடித்தனம் நடத்தி வருகின்றனர். வயோதிகம் காரணமாக, கண்ணன் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ஏழு ஆண்டுகளுக்கு முன் இரண்டு மகன்களுக்கும் சரி பாதியாக இரண்டரை ஏக்கர் வீதம் "தானமாக செட்டில்மெண்ட் பத்திரப் பதிவு மூலம் வழங்கினார்.
பதிலுக்கு பெற்றோருக்கு செலவுக்கு மாதாமாதம் பணம் தருவது என்று இரண்டு மகன்களும் ஒத்துக் கொண்டனர். நிலம் சொந்தமானதும், மகன்கள் பெற்றோரைக் கவனிக்கவில்லை. உதவிப் பணமும் தரவில்லை. அதனால் தினமும் பசிக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதில் இரண்டாவது மகன் செல்வம், தந்தையைத் திட்டி அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உண்ண உணவு இல்லாமல் கலங்கி நின்ற கண்ணன், "எங்களுக்கு கொஞ்சம் நிலத்தையாவது கொடுங்கள். விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று கெஞ்சினார். ஆனால் மகன்கள் மனம் இறங்கவில்லை. "கையளவு நிலம் கூட தர முடியாது..' என்று மகன்கள் பெற்றோரை விரட்டி விட்டனர். வேறு வழியில்லாமல், கண்ணன் - பூங்காவனம் இருவரும் சென்ற வாரம் நடந்த "மக்கள் குறைதீர்வு' கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தங்கள் நிலைமையை விளக்கிப் புகார் கொடுத்தனர்.
விவசாயி தம்பதிகளின் வேதனையைப் புரிந்து கொண்ட கந்தசாமி கலங்கிப் போனார். வருவாய் பிரிவு அதிகாரி உமா மகேஸ்வரியிடம், "இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துங்கள்' என்று கேட்டுக் கொண்டார். உமா மகேஸ்வரி மகன்கள் இருவரையும் அழைத்து விசாரித்தார். விசாரணையின் போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு மாதா மாதம் உதவித் தொகையுடன் அறுபது சென்ட் நிலத்தை திரும்பத் தருவதாகவும் ஒத்துக் கொண்டார். ஆனால் இரண்டாம் மகன் செல்வம் "தந்தை தந்த நிலத்தில் ஓர் அங்குலம் கூட தர முடியாது' என்று மறுத்துவிட்டார். உமா மகேஸ்வரி விசாரணை அறிக்கையை கந்தசாமியிடம் சேர்த்தார்.
"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு' சட்டத்தின் படி , மகன்களுக்கு தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கந்தசாமி ஆணையிட்டார். இந்த ஆணை காரணமாக தான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. கந்தசாமியின் ஆணையின்படி, மீண்டும் கண்ணன் பூங்காவனம் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இழந்த நிலம் மீண்டும் தம்பதிகளிடம் வந்து சேர்ந்தது. தானம் கொடுத்த நிலத்தின் உரிமத்தை மீண்டும் பெறுவது நீதிமன்றம் சென்றாலும் எளிதில் முடிகிற விஷயமல்ல. புகார் கொடுத்த ஒரு வாரத்தில் மகன்களிடம் இழந்த நிலத்தை பெற்றோருக்கு மீட்டுக் கொடுத்த கந்தசாமி அந்த ஏழை தம்பதிக்குக் கடவுளாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
இன்னொரு நெகிழ்ச்சியான சம்பவம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் உள்ள லோட்டஸ் ஷூ தொழிற்சாலை சார்பாக, அரசு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் அழைப்பின் பேரில், கந்தசாமி கலந்துகொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விழாவில், செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஷா, பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் பெற்றதற்காக, கந்தசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அந்த தருணத்தில், ""நானும் உங்களைப் போல் ஆட்சியர் ஆக வேண்டும். இதுவே என் லட்சியம், என மாணவி மோனிஷா கந்தசாமியிடம்'' கூறினார். நிகழ்ச்சி நிறைவானதும் கந்தசாமி மாணவி மோனிஷாவை தன்னுடைய சிவப்பு சைரன் பொருந்திய அரசு காரில், தான் அமரும் இருக்கையில் அமர வைத்து தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அலுவலகத்தில் தனது இருக்கையில் மோனிஷாவை அமர வைத்து அருகில் கந்தசாமி நின்று புகைப்படம் எடுத்து மோனிஷாவிடம் கொடுத்தார். ""இந்த புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற எண்ணம் மோனிஷாவின் மனதில் தோன்ற வேண்டும். நானும் அரசு பள்ளியில் படித்துதான் ஆட்சியர் ஆனேன். உன்னாலும் முடியும்'' என்று ஊக்கப்படுத்தினார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் கந்தசாமி மனு கொடுக்க வந்திருப்பவர்கள் வரிசையைப் பார்க்கிறார். நிற்பவர்களில் வயதுக்கு வந்தப் பெண்ணின் முகத்தில் ஏழ்மைக் கோலம் போட்டதினால், குழி விழுந்த கண்களில் குடிகொண்டிருந்த சோகத்தை கந்தசாமி அடையாளம் கண்டு, ""என்னம்மா உன் பிரச்னை'' என விசாரித்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஆனந்தி. தனது சோகக் கதையை அழுகையுடன் சொல்லத் தொடங்கினார், ""திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனி கிலுப்பை என்பதுதான் எனது சொந்த ஊர். அப்பா வெங்கடேசன் கூலி தொழிலாளி, தாய் அனிதா சத்துணவு சமைப்பவர். ஆனந்திக்கு ஒரு தங்கை அமுதா. ஒரு தம்பி மோகன். பாட்டி ராணி. அப்பா இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தாயின் ஊதியத்தில் அரை வயிறு சோறு கிடைத்தது. திடீரென்று அம்மாவும் காலமாகிவிட்டார். சில நாட்களில் பாட்டியும் காலமானார். நாங்கள் மூவரும் அநாதையாகிவிட்டோம். ஒரு வேளை உணவு கூட கிடைக்க வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள். நான் பிளஸ் டூ முடித்திருக்கிறேன். பத்தொன்பது வயதாகிறது. நானும் தங்கை அமுதாவும் விவசாயக் கூலி வேலைக்குப் போகிறோம். அந்த வருமானத்தை வைத்து தம்பியைப் படிக்க வைக்கிறோம். தினமும் இரண்டு வேலை பட்டினிதான்.
அம்மா பார்த்துவந்த வேலை எனக்குக் கிடைத்தால் பசி பட்டினி இல்லாமல் பிழைத்துக் கொள்வோம்'' என்று கெஞ்சினார்.
அரசாங்க விதிகளின் படி , 21 வயது நிறைவானால்தான் அரசு வேலையில் சேர முடியும். கந்தசாமி ஆனந்தியின் மனுவை வாங்கிக் கொண்டு "நல்லது நடக்கும். போய் வாம்மா' என்று அனுப்பி வைத்தார்.
சில நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ஆனந்தியின் குடிசை முன்பு வாசலில் கந்தசாமியின் கார் வந்து நின்றது. கந்தசாமியின் கைகளில் தின்பண்டங்கள். வீட்டில் இருக்கும் மூன்று பேருக்கும் தின்பண்டங்களை வழங்குகிறார். ""இன்று என்னம்மா சமையல்'' என்று கேட்டார். ஆனந்தியிடமிருந்து பதில் வரவில்லை.
"" ஓ .. . வாங்க ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்'' என்று தரையில் அமருகிறார். சாப்பிட்டு முடிந்ததும் கந்தசாமி தன் பையிலிருந்து தமிழக அரசு முத்திரையிட்ட ஒரு கடிதத்தை ஆனந்தியின் கையில் கொடுத்து "என்ன எழுதியிருக்குன்னு படித்துப் பாரும்மா'' என்கிறார்.
படித்து முடித்ததும், கண்களில் நீர் வழிய கந்தசாமியின் கால்களில் விழுகிறார் ஆனந்தி. பெயரில் இருக்கும் ஆனந்தத்தை வாழ்வில் முதல் முதலாக உணர்ந்த ஆனந்தி தங்கையை தம்பியை ஒரு சேர அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். தாய் பார்த்து வந்த வேலையில் சேரும்படி ஆனந்தியை அரசு அனுமதித்து வந்த அரசு ஆணையை தபாலில் அனுப்பாமல், ஆட்சியராக இருந்த தானே நேரில் வந்து இனிப்புடன் வழங்கிய கந்தசாமியின் பெரிய மனதை எதனுடன் ஒப்பிடுவது?
ஆனந்தியிடமிருந்து மனு பெற்றுக் கொண்டதும் ஆட்சியரின் சிறப்பு அதிகாரத்தின் கீழ், அரசு விதிகள், சட்டத்தின் நியதிகள் படி சத்துணவு உதவியாளர் பதவிக்கு ஆனந்தியை நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து முடித்தார். ஆனந்தி பணியில் சேர்ந்ததும் தொலைதூர கல்வி வழியாக பட்டப்படிப்பு படிக்க ஆவண செய்து செலவுகளையும் கந்தசாமி ஏற்றுக் கொண்டார். ஆனந்தியின் தங்கை கல்லூரி கட்டணம் இன்றி படிக்கவும் வழிவகை செய்தார். ஆனந்தியின் குட்டித்தம்பி மோகனுக்கு புதிய சைக்கிள் ஒன்றினைப் பரிசாகத் தந்து பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றுவர உதவியிருக்கிறார். "நான் உங்களுக்கு அண்ணன்... அவ்வப்போது வீட்டிற்கு வருவேன்... கவலைப்படாதீர்கள்'' என்று நம்பிக்கை வார்த்தைகளையும் சொல்லி விடை பெற்றிருக்கிறார்.
அதுபோன்று, தனியார் பெண்கள் காப்பகத்தில் பாலினக் கொடுமைகளுக்கு ஆளாகி வருவதை அறிந்ததும், வயதிற்கு வந்த 50 சிறுமிகளை அரசு காப்பகத்திற்கு மாற்றி, அந்த தனியார் பெண்கள் காப்பகத்தை நடத்தி வந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் செய்திருக்கிறார்.
வாழ்க்கையில் அவலங்களுக்கு உள்ளாகி அல்லல் படுபவர்களுக்கு கண்கண்ட சாமியாக நிற்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி..!