சுடச்சுட

  
  sri_magesh

  இந்த தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்துவிட்ட நாட்டில் பொதுமக்களுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும், அநீதிகளும் பெருகிவிட்ட சமூகத்தில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும், அலட்சியங்களும் பெருகிவிட்ட சமூகம். 30 ஆண்டு கால ஈழ போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்... இந்த தலைமுறையின் வரலாற்றை, எங்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டு இருக்கின்றன. காலங்காலமாக பேசி பேசி, எங்களை தெருவில் இறக்கிவிட்டு, தலைவர்கள் எல்லாம் மாளிகைகளை உள்பக்கமாக சாத்திக் கொண்டு விட்டார்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் குற்ற உணர்வை கொடுக்கும் விதமாக ஒரு களம் உருவாக்கியிருக்கிறோம். கதையின் கருப்பொருளை முன் வைத்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஸ்ரீ மகேஷ். "சத்ரபதி' படத்துக்குப் பின் தெலுங்கு, கன்னட சினிமாக்களில் பரபரப்பாக இயங்கி வந்தவர். பெரும் இடைவெளிக்குப் பின் "அகம்பாவம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
   மீண்டும் ஒரு அரசியல் விமர்சன படம்...
   எப்படியிருக்கும் இதன் உள்ளடக்கம்...
   எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தைக் கொண்டே இதை எழுதியிருக்கிறேன். இளைஞனுக்கு பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் இளைஞர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளை கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் இளைஞர்கள் எத்தனை பேர். வேலையை சந்தோஷமாகவும், காதலாகவும் அனுபவிக்கும் இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் போனதும் இங்கே துரதிருஷ்டம். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் இளைஞர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஓர் உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.
   யாரை குறை சொல்ல வருகிறீர்கள்...
   இந்த கட்டமைப்புதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜாதிய கட்டமைப்புக்குள் வாழும் நாடு இந்தியாதான். ஆனால் உலகத்திலேயே தலை சிறந்த ஜனநாயக நாடு என மெச்சிக் கொள்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது ஜனநாயகம். நவ யுகத்துக்குள் நுழைந்து விட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் அதே நேரத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆவணப் படுகொலைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகின்றன. இதை எதன் அடிப்படையில் இங்கே பேசுவது. ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட இளவரசனும்... கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜும்... சங்கரும்... சோனாலியும், ஃப்ரானிசிகாவும், சுவாதி... இப்படி எத்தனை கொலைகள் நமக்கு தெரிந்தே... இதன் பின்னால் உள்ள கதைகள் கூடும்போது, இன்னும் அதிர்ச்சிகள். ஏன் இத்தனை கொலைகளும்... தற்கொலைகளும்...? ஒரே காரணம்தான்... "மனிதமாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன. இந்த காரணத்துக்குப் பின்னால் சாதி, மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம்... நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித் தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் ஜாதியச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் என்னை மனிதனாக உணர்ந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதனால் எந்த சமரசமும் இதில் இல்லை.
   வேறு என்ன இருக்கும் இந்த கதையில்....
   இது நேர்மையான குற்ற உணர்ச்சி என யாரிடமும் சொல்வதற்கு இல்லை. சாதி பூதம் தமிழகம் முழுக்க காதலர்கள் மத்தியில் உண்டாக்கும் பேரச்சத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றக் கோரி கதறுகிறது காதல். இதுதான் இப்போதைய நிலை. இதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். விவசாயம், கிராமம், தமிழர்களின் முகம், காதல் அனுபவங்கள்தான் படம். அன்பும் பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் என்பதை காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஏமாற்றி பிழைக்காதவர்கள், சுய நலமாக சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், இந்த உலகம் கொடுத்த காதலை அதன் வழியாக நின்று தரிசிக்கிற காதல் ஜோடி. அவர்களின் பயணத்தில் வருகிற காதல் அவர்களை உன்னதமாக்குகிறது.
   திருமணத்துக்குப் பின் நமீதா வந்திருக்கிறார்...
   என்ன சிறப்பு....
   தயாரிப்பு, நடிப்பு என எப்போதும் ஆர்வமாக இருக்கும் வாராகிதான் எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு சினிமா மீது எப்போதும் தீரா காதல் உண்டு. தயாரிப்பு, நடிப்பு என பெரிய அழுத்தம் இருந்தாலும், கதைகளுக்கான சமரசங்களை எங்கேயும் விட்டுத் தராதவர். எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்கப் போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வருவார். சம்பாதிப்பதை நல்லப் படியாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை. அப்போதெல்லாம் மனசுக்கு பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளிவிழா படங்களை எடுத்தால், சமூகத்தை கெடுக்கிறீங்களே என்று கேட்கலாம். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து அவரும் நானும் வைக்கிற ஒரு கதை இது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு நமீதா இருந்தால், எப்படியிருக்கும் என யோசனை தந்தார். வழக்கமாக கமர்ஷியல், கவர்ச்சி என பார்த்து விட்ட நாம், நமீதாவை வேறு இடத்தில் வைத்து பார்க்கலாம். அது போல மாரிமுத்து, மனோபாலா, அப்புக்குட்டி என இதர இடங்களுக்கு நம்பிக்கையான கலைஞர்கள். மலையாள சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் வி.விஸ்வம் கேமிரா. அவரின் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.
   - ஜி.அசோக்
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai