டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி வென்ற மாணவர்!

அரக்கோணத்தை சேர்ந்த 9 -ஆம் வகுப்பு மாணவர் ஆர்.சந்தோஷ் சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச "டேக்வாண்டோ' போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்து திரும்பியுள்ளார்.
டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி வென்ற மாணவர்!

அரக்கோணத்தை சேர்ந்த 9 -ஆம் வகுப்பு மாணவர் ஆர்.சந்தோஷ் சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச "டேக்வாண்டோ' போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்து திரும்பியுள்ளார்.
 அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் ஆர்.சந்தோஷ்(14). அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். காந்திநகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக இலவசமாக டேக்வாண்டோ பயிற்சி அளித்து வரும் யுவராஜ் என்ற இளைஞர் ஏற்படுத்தியுள்ள "கலாம் யூ வி டேக்வாண்டோ அகாதெமி'யில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். கடந்த ஜூனில் போடிநாயக்கனூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் ஆர்.சந்தோஷ் 3 பிரிவுகளில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். மேலும் கடந்த மாதம் ஒரிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளிலும் பங்கேற்று திரும்பியுள்ளார்.
 டிசம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஆர்.சந்தோஷ் பங்கேற்றார். அதில், வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இவருக்கு பயிற்சி அளித்துவரும் யுவராஜ், கடந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். தினமும் அரக்கோணம் காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு மாணவ மாணவிகளை வரவழைக்கும் யுவராஜ் அங்கு அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் டேக்வாண்டோ பயிற்சி அளிக்கிறார். மேலும் வார விடுமுறை நாட்களில் அரக்கோணத்தில் உள்ள தொழில்முறை டேக்வாண்டோ பயிற்சியாளர் கோதண்டன் மூலம் இம்மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்காக யுவராஜ் இந்த மாணவ மாணவிகளிடம் கட்டணம் பெறாமல் இலவசமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
 ஆர்.சந்தோஷின் தந்தை ராஜா, கட்டட தொழிலாளி எனும் நிலையில் அவரால் மகனை சிங்கப்பூருக்கு அனுப்ப பொருளாதார சூழ்நிலை இடம் தராத நிலையில் அரக்கோணம் வாழ் இளைஞர்கள் தங்களது சொந்த நிதியை அளித்து அம்மாணவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்.சந்தோஷ் தெரிவிக்கையில், ""மாஸ்டர் யுவராஜ் தினமும் பயிற்சி அளித்து வருகிறார். இருந்தும் பல்வேறு நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அதிக செலவாகிறது. எனது தந்தையால் இதை தர இயலவில்லை. அரசோ, தனியார் நிறுவனங்களோ நிதிஉதவி அளித்தால் பல்வேறு மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு, இந்தியாவிற்கு பெருமை தேடித் தருவேன்'' என்றார் சந்தோஷ்.
 - எஸ். சபேஷ்
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com