தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

கி.ரா. என இலக்கிய வாசகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ண ராஜ பெருமாள் ராயங்குல நாயக்கர் 1922-ஆம் ஆண்டில் கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் என்னும் சிற்றூரில் பிறந்தார்.
தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

சென்ற வார தொடர்ச்சி...
கி.ராஜநாராயணன் (பிறப்பு 1922)
கி.ரா. என இலக்கிய வாசகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ண ராஜ பெருமாள் ராயங்குல நாயக்கர் 1922-ஆம் ஆண்டில் கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் என்னும் சிற்றூரில் பிறந்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தமிழகம் வந்த தெலுங்கு பேசும் குடும்பத்தின் பரம்பரையில் வந்தவர். அதிகம் படிப்பு கிடையாது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். நாட்டுப்புற கலைகள், இசை ஆகியவற்றின் மீது ஈடுபாடு கொண்டவர். கரிசல் பகுதி மக்கள் பேசும் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறுகதைகள், நாவல்கள் எழுதியவர். இவர் எழுதிய "கரிசல் காட்டு கடுதாசி' மிகவும் பிரபலமானது. முதல் நாவல் "கோபல்ல கிராமம்.' அதை ஏழாண்டுகள் வரை எவரும் பிரசுரம் செய்யவில்லை. நாவலை செம்மைப்படுத்தி கொடுத்த பின் 1976-ஆம் ஆண்டு "கோபல்ல கிராமம்' வெளிவந்தது. அப்போது அவரது வயது 54. கி.ரா. எழுதிய "கோபல்ல கிராமத்து மக்கள்' எனும் நாவல் 1991-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமியின் விருதைப் பெற்றது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகை பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றிய கி.ரா., தற்போது புதுச்சேரியில் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்திரா பார்த்தசாரதி (1930)
சென்னையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் டெல்லியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் மனைவியின் பெயர் இந்திரா. எனவே இந்திரா பார்த்தசாரதி என்ற பெயரில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதி வருகிறார். போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திலும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் நாடகத்துறை இயக்குநராகவும் இருந்தார். 16 நாவல்கள், 10 நாடகங்கள் வெளியாகியுள்ளது. இவரது "குருதிப்புனல்' நாவல் 1977 -ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றது. "ராமானுஜர்', "நந்தன் கதை', "ஒளரங்க சீப்' - அவர் நாடகத்தில் சில. சங்கீத நாடக அகாதெமி பரிசும் பெற்றுள்ளார். இவருடைய முதல் நாவல் "காலவெள்ளம்', கோவையிலிருந்து வெளிவந்த "வான்மதி'யில் தொடராக வெளிவந்தது. இடையில் பத்திரிகை நின்று போனது. பிறகு, "காலவெள்ளம்' நாவலை இ.பா. எழுதி முடித்தார். இவரது முதல் நாவல் 1965 -ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவரது வயது 35. தற்போது சென்னையில் வசிக்கிறார்.
நீல. பத்மநாபன் ( 1938)
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் எழுதக் கூடியவர். தொழில் எஞ்சினியர். பத்திற்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று கூட தமிழ்ப் பத்திரிகைகளில் தொடராக வந்ததில்லை. சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள், மொழி பெயர்ப்பு என்று பலதுறைகளிலும் எழுதி வருபவர். நீல. பத்மநாபனின் முதல் நாவல் "தலைமுறைகள்'. அது 1968-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது இவரது வயது 30. "தலைமுறைகள்' நாவலுக்கு மலையாளம், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் பத்து சிறந்த நாவல்களில் "தலைமுறைகள்' ஒன்று என க.நா.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். "பள்ளி கொண்டபுரம்', "உறவுகள்' இவரின் பிறநாவல்களில் சில. 2007-ஆம் ஆண்டில் "இலை உதிர் காலம்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 
சா.கந்தசாமி (1940)
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தவர். இவரின் முதல் நாவல் "சாயா வனம்' அதை எழுதியபோது வயது 25. "கசடதபற' என்ற இலக்கியச் சிற்றேட்டின் தொடக்கத்திலும், செயற்பாட்டிலும் நண்பர்களோடு சேர்ந்து உழைத்தார். இலக்கியச் சங்கம் மூலமாக நா. கிருஷ்ணமூர்த்தி, ம. இராஜாராம், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைகளோடு இவரின் சிறுகதைகளும் சேர்ந்து 1968-ஆம் ஆண்டில் "கோணல்கள்' தொகுப்பு வெளிவந்தது. "சாயாவனம்' நாவல் 1968-ஆம் ஆண்டு வாசகர் வட்ட வெளியீடாக வந்தது. தனது நாவல்களிலும், சிறுகதைகளிலும் கதைகளே கிடையாது என்று சொல்லும் சா.கந்தசாமிக்கு 10 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள், 2 பயணநூல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. 1998 -ஆம் ஆண்டு இவரது "விசாரணைக் கமிஷன்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். குறும்பட இயக்குநர். தயாரிப்பாளர். இவரின் "தமிழ்நாடு காவல் தெய்வங்கள்' என்ற குறும்படம் சர்வதேச விருது பெற்றது. அறுபதாண்டுகளாக சென்னையில் அடையாற்றின் கரையில் மனைவியுடன் வசித்து வருகிறார். 
தோப்பில் முகமது மீரான் ( 1942)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கடைசி கிராமமாகிய தேங்காப்பட்டினத்தில் பிறந்தவர். தமிழ் பேசும் இஸ்லாமியர். மலையாளம் அறிந்திருந்தார். இளம் பருவத்தில் மலையாள மொழியில்தான் எழுதினார். ஆனால் அவை, அச்சேறவில்லை. தாய்மொழியான தமிழில்தான் இனி நாவல், சிறுகதைகளை எழுதுவது எனத் தீர்மானித்து தமிழில் எழுத ஆரம்பித்தார். இவருடைய முதல் நாவல் "ஒரு கடலோர கிராமத்தின் கதை'. 1988-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவர் வயது 46. 1997- ஆம் ஆண்டு "சாய்வு நாற்காலி' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது "ஒரு கடலோரக் கிராமத்தின் கதை'யும், "சாய்வு நாற்காலி'யும் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளன.
சிவசங்கரி ( 1942)
சென்னையில் பிறந்து, வளர்ந்து, வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியபோது எழுத வந்தவர். கல்கி, ஆனந்தவிகடன் இவர் சிறுகதைகள், நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. வாசகர்கள் படிக்கும் வெகுஜன எழுத்தாளராக இருந்தார். அதோடு சமூக செயற்பாட்டாளராகவும், அரசியல் பிரமுகர்களைப் பேட்டி கண்டு எழுதக் கூடியவராகவும் இருந்தார். தமிழில் அதிகமாக தொடர்கள் எழுதியவர்களுள் ஒருவர். இலக்கியம் மூலமாக இந்திய இணைப்பு என பல இந்தியமொழி சிறுகதைகள், நேர்காணல் கொண்ட பெரும் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். இவரின் முதல் நாவலான "எதற்காக' 1970-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது இவர் வயது 28.
பிரபஞ்சன் ( 1945)
சாரங்கபாணி கிராமணி வைத்தியலிங்கம் என்ற இயர்பெயர் கொண்ட பிரபஞ்சன் 1945-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். தமிழ் புலவருக்குப் படித்தார். "பிரபஞ்ச கவி' என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். பின்னர் உரைநடையில் சிறுகதைகள், நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் நாவல் "ஆண்களும் பெண்களும்'. ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட "கல்பனா' மாத இதழில் முழுநாவலாக 1980-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது வயது 35. துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய "நாட்குறிப்பை' அடிப்படையாக கொண்டு எழுதிய "வானம் வசப்படும்' என்ற நாவல் 1995-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. பாரதிய பாஷா விருதுகள் பெற்றவர். ஐம்பதற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். புதுச்சேரியிலும், சென்னையிலுமாக வாழ்ந்து வருகிறார். 
பூமணி (1947)
மாணிக்க வாசகம் என்ற இயற்பெயரைக் கொண்ட பூமணி தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கோவில்பட்டியை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். பூமணியின் முதல் நாவல் "பிறகு' 1979-ஆம் ஆண்டில் எழுதினார். அப்போது அவரது வயது 32. கல்லூரி நாட்களிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய பூமணி, சிறுகதைகளும் எழுதியுள்ளார். நாவலாசிரியராக அறியப்படும் பூமணி எழுதியுள்ள ஆறு நாவல்களும் நேரிடையாக புத்தகங்களாகவே வெளிவந்துள்ளன. 2012 -ஆம் ஆண்டில் "அஞ்ஞாடி' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர். தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பூமணி தற்போது கோவில்பட்டியில் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
சு.வெங்கடேசன் (1970)
மதுரையில் பிறந்தவர். தாய்மொழி தெலுங்கு. மாணவர் பருவத்திலேயே கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர், கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் கட்சி உறுப்பினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர். இவரின் முதல் நாவல் "காவல் கோட்டம்' மதுரையின் அறுநூறு ஆண்டு வரலாற்றையும், மக்கள் வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்லும் நாவல். 2008-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது இவரது வயது 38. 2011-ஆம் ஆண்டில் "காவல் கோட்டம்' சாகித்ய அகாதெமி விருது பெற்றது. தனது முதல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் சு. வெங்கடேசன். 
- அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com