பரவசமூட்டிய பாரதி விழா!

தமிழின் கவிஞன் என அடையாளப்படுத்தப்பட்ட மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா ஆரவாரமாகவும், கோலாகலமாகவும் ,கொண்டாட்டமாகவும் ஒரு சேர அரங்கேறி பாரதி நேசர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
பரவசமூட்டிய பாரதி விழா!

பாரதியார் விருது

தமிழின் கவிஞன் என அடையாளப்படுத்தப்பட்ட மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா ஆரவாரமாகவும், கோலாகலமாகவும் ,கொண்டாட்டமாகவும் ஒரு சேர அரங்கேறி பாரதி நேசர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
தவழும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை எல்லோரும் பார்த்து, ரசித்து, ருசித்து மகிழும் வகையில் ஒரு விழா நடந்தேறியது இங்குதான் என்றால் அது மிகையில்லை. அப்படி ஒரு விழா எங்கு நடந்தது என்றால், அது வேறு எங்குமில்லை. பாரதி அவதரித்த அந்த புண்ணிய பூமியில்தான் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இதனால், எட்டயபுரமே அன்று விழாக் கோலம் பூண்டது.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த எட்டயபுரத்து மகாகவியின் 137- ஆவது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் ஒரு பிரமாண்ட விழாவை தினமணி டிச. 11- ஆம் தேதி கொண்டாடியது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைத்து தரப்பினரின் மனங்களும் மகிழ்ச்சியால் ததும்பி வழியும் வகையில் நடந்தேறிய இந்த விழாவில், காலை முதல் இரவு வரை இடைவிடாது நடந்தேறிய பல்சுவை நிகழ்ச்சிகளால் மக்கள் மனமெங்கும் பாரதியார் நிறைந்திருந்தார் என்றால் மிகையில்லை.
பாரதி தரிசனம்

பாரதி குறித்து இளைய தலைமுறையினர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மணிமண்டப வளாகத்தில் பாரதி தரிசனம் -ஒரு பன்முகப் பார்வை என்ற நிகழ்ச்சி இளசை மணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாலன், முனைவர் ம.ராசேந்திரன்,டெல்லி கணேஷ், து.இரவிக்குமார்,பேரா.ஹாஜாகனி ஆகியோர் கலந்து கொண்டு பாரதி அன்பர்களின் செவிகளுக்கும் மனதுக்கும் விருந்தளித்தனர்.
பாரதியார் விருது
தினமணி சார்பில் மகா கவி பாரதியார் விருதையும், ரூ. 1 லட்சம் பொற்கிழியையும், மூத்த பாரதி அறிஞர் சீனி.விசுவநாதனுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கிய போது நற்றமிழ் அன்பர்கள் எல்லோருடைய கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விருதினைப் பெற்றுக் கொண்ட விசுவநாதன், "1928- ஆம் ஆண்டு செப்.11- ஆம் தேதி, பாரதியின் பாடல்களை அப்போதைய சென்னை மாகாண அரசு பறிமுதல் செய்தது. அதைக் கண்டித்து ஆங்கிலத்தில் கட்டுரை எழுதிய ராம்நாத்கோயங்கா, பாரதியின் பாடல்கள் தடை செய்திருப்பதை பார்த்துவிட்டு பேசாமல் இருக்க முடியாது. பாரதியாரின் பாடல்களை பாட மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்று எழுதியிருந்தார். அப்படிப்பட்ட பாரதி நேசனின் பத்திரிகை குழுமம் எனக்கு இந்த விருதை வழங்கியிருப்பது பெருமையாக உள்ளது. இந்த விருதை ராம்நாத் கோயங்காவிற்கு அர்ப்பணிக்கிறேன்'' என்றார்.

பாரதி பிறந்த மண்ணில் நடைபெற்ற விழா என்பதாலோ என்னவோ, விருது வழங்கிய ஆளுநர் "அனைவருக்கும் வணக்கம், எப்படி இருக்கீங்க? செüக்கியமா?'' எனக் கூடியிருந்த ஜனத்திரளைப் பார்த்து தமிழில் கேட்ட பொழுது, மக்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது. ""பாரதியின் கவிதைகள் உலக மக்களுக்கானது. அவை அனைத்தும் எக்காலத்துக்கும் பொருந்தும் கவிதைகள்'' என புகழாரம் சூட்டினார் ஆளுநர்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்று மகிழ்ந்த தினமணி ஆசிரியர், ""பாரதியின் புகழ் பாடவே தினமணி தொடங்கப்பட்டது என முதல்நாள் தலையங்கத்தில் எழுதப்பட்ட பகுதிகளை வாசித்து, பாரதியாருக்கு விழா எடுப்பதற்கான தகுதியும், பாரதியார் பெயரில் விருது வழங்கும் தகுதியும் தினமணிக்கு உண்டு'' என அடுக்கடுக்காய் காரணங்களைத் தந்தபோது பாரதி வாழ்ந்த மண்ணில் குழுமியிருந்த தமிழ் சொந்தங்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது அரங்கையே அதிர வைத்தது.
நல்லி குப்புசாமி செட்டியாரின், விருதாளர் குறித்த அறிமுகவுரை சிறப்பாக இருந்தது.


ஒன்றரை வயது ஹரிணி

காலை முதலே பாரதியின் இல்லத்தில் கூட்டம் அலைமோதியது என்றே சொல்லலாம். குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள்,பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி நூற்றுக்கணக்கானோர் பாரதி இல்லத்தைப் பார்வையிட்டனர். அவரின் சிலையின் முன் நின்று செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அவரின் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள் என அனைத்தையும் பார்த்த மாணவிகள் அனைவரும் கூட்டம், கூட்டமாக கைபேசி மூலம் படங்களை எடுத்து தள்ளியதால், இல்லத்தின் வெளியே மக்கள் கூட்டம் காத்திருக்க வேண்டியிருந்தது. பாரதி நேசர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே கடந்த காலங்களில் வந்து சென்ற இடத்தில், நிரம்பியிருந்த இளம் தலைமுறையின் கூட்டத்தைப் பார்த்து, எழுத்தாளர்களே வியந்தனர்.
அந்த இல்லத்திலிருந்து, பாரதியின் மணிமண்டபத்தை நோக்கி நடைபெற்ற ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். அதிலும் பாரதியின் வேடம் தரித்து வந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை ஊர்வலத்தில் பங்கேற்ற பெரியவர்கள் வாழ்த்தி வரவேற்றதுடன் மட்டுமல்ல, அவர்களுடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் பாரதி வேடத்தில் வந்ததைப் பார்த்த பாரதி நேசர்களின் உற்சாகத்தை சொல்லி மாளாது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஒன்றரை வயதே நிரம்பிய ஹரிணி, பாரதி வேடம் தரித்து ஊர்வலத்தில் கலந்து கொண்டது பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொண்டது. ஊர்வலம் சென்ற பாதை நெடுகிலும் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் கம்பீரமாக காட்சியளித்த பாரதியார் ஊர்வலத்தைப் பார்த்து பிரமித்திருப்பார்.
ஊர்வலம் பாரதியின் மணிமண்டபத்தில் நிறைவடைந்த பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து பாரதி நேசர்கள் மாலை அணிவித்து பாரதியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
நாடு கடந்து... பாரதி உலக மக்களுக்கு பொதுவானவன், உலகத் தமிழர்களுக்கானவன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பாரதியை வணங்கி போற்றி மகிழ்ந்தனர். பாரதியை பாடங்களில் மட்டுமே படித்து வந்த மாணவர், மாணவிகள் இந்த மணிமண்டபத்தில் உள்ள சிலைகள், அவரின் நூல்கள், அவரின் புகைப்படங்கள் என அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கவியரங்கம்
மாலையில் தூத்துக்குடியில் பிரமாண்ட அரங்கில் கவியரங்கமும் நடைபெற்றது. பாரதியின் பெயர் தாங்கிய பல கவிஞர்கள் பாரதியை கவிதைகளால் கொண்டாடி மகிழ்ந்தனர். கவிஞர்கள் யுகபாரதி, அமுதபாரதி, பாரதி பத்மாவதி, ரவி சுப்பிரமணியன், கிருங்கை சேதுபதி ஆகியோர் கவி பாடி தானும் மகிழ்ந்து, கூடியிருந்த இளம் தலைமுறையினரை பரவசத்தில் ஆழ்த்தினர்.
தினமணி ஆசிரியர், பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எழுதப்பட்ட பாரதி குறித்த கவிதையை வாசித்து பாரதி நேசர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர், ஜி.ஆர்.சுவாமிநாதன், "பாரதிக்கு விழா எடுக்கும் தகுதியுள்ள தினமணியின் தலையங்கங்கள் மிக சிறப்பானவை. "நெகிழி'(பிளாஸ்டிக்) குறித்து தினமணியில் வெளிவந்த தலையங்கத்தைப் பார்த்துதான் நீதிமன்றம் மூலம் தடைகொடுத்தோம்' என்ற போது, பாரதி புகழ் பாட தொடங்கப்பட்ட நாளிதழ் மூலம் மிகப்பெரும் சமூக மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை அங்கு குழுமியிருந்த இளைஞர் கூட்டம் உணர்ந்து ஆரவாரம் செய்தது.

சொல்லரங்கம்
கவியரங்கம் முடிந்தவுடன், அனைத்து தரப்பு மக்களாலும் அறியப்பட்ட ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணனின் சொல்லரங்கம் தொடங்கியது. "கவியுள்ளம்' என்கிற தலைப்பில் தன்னுடைய வசீகர குரலால் அரங்கையே கட்டிப்போட்டார். "நீதிமன்றங்களில் சத்திய பிரமாணம் பெறுவதற்கு வேதப் புத்தகங்களுக்கு பதிலாக பாரதியின் அக்னிக்குஞ்சுகளை பயன்படுத்தலாம்'' என்று அவர் கூறிய போது, அரங்கே சிலிர்ப்புடன் பாரதியை பார்த்தது. ""பாரதியை முழுமையாக உணருங்கள். பாரதி அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறான். செந்தமிழ், நற்றமிழன் என சொல்லிப் பழகுங்கள். பாரதி உடன் வருவான்'' என்று அவர் கூறியதுடன், "இனி அனைவரும் தங்களது பெயரின் இறுதியில் "பாரதி" என்ற பெயரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்'' என்று அறிவுறுத்தியபோது கேட்ட பலரின் கண்களின் கண்ணீர் என்றால் மிகையில்லை. "ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் குழந்தை கருவில் இருக்கையில் பாரதியின் "புதிய ஆத்திச்சூடி'யை வாசிக்க வேண்டும். அப்படி வாசித்து வந்தால், அவருக்குப் பிறக்கும் குழந்தை வீரனாக, மோதி மிதித்துவிடு பாப்பாவாக உருவாவான்'' என்றார்.
கலையரங்கம்
விழாவின் நிறைவாக ஜாகீர் உசேன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அது வரை காதுகளுக்கு மட்டுமே விருந்துகிடைத்து வந்த நிலையில், கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து பார்ப்போரை பரவசப்படுத்தினர்.
அடுத்த ஆண்டும் பாரதிக்காக நாட்டிய நிகழ்ச்சிக்கு வர வேண்டும்'' என்ற ஆவலை ஜாகீர் உசேன் வெளிப்படுத்த, "அடுத்த ஆண்டு இரண்டு நாள்கள் விழா நடக்கும். அதில் உங்களின் பாஞ்சாலி சபதம் நாட்டியமும் இடம்பெறும்'' என்று தினமணி ஆசிரியர் தெரிவித்தபோது அரங்கத்தில் எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது.
மொத்தத்தில் தினமணி நடத்திய இந்த விழாவால் பாரதி நிச்சயம் மகிழ்ந்திருப்பான். எங்கும் நிறைந்தவனுக்கு பாரதி அன்பர்கள் நிகழ்த்திக் காட்டிய நிகழ்வுகளால் பாரதி பிறந்த புண்ணிய பூமி தலையாய பண்டிகையாக மாறியது என்று சொன்னால் அது மிகையாகாது.


- சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்
படங்கள்:
ப.இராதாகிருஷ்ணன்,
விஜயகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com