பிடித்த: பத்து - மிருதங்கத்திற்கு இணை வேறில்லை!

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ (1988) பத்ம பூஷண் (2003), பத்ம விபூஷண் (2010) ஆகிய விருதுகளைப் பெற்ற மிருதங்க வித்வான்.
பிடித்த: பத்து - மிருதங்கத்திற்கு இணை வேறில்லை!

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ (1988) பத்ம பூஷண் (2003), பத்ம விபூஷண் (2010) ஆகிய விருதுகளைப் பெற்ற மிருதங்க வித்வான்.
பல்வேறு புகழ் பெற்ற பாடகர்களுக்கு மிருதங்கம் வாசித்தவர். சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி சங்கர மடம் ஆகிய இரு மடங்களிலும் ஆஸ்தான வித்வானாக கெளரவிக்கப்பட்டவர். சங்கீத நாடக அகாதெமி fellowship விருதும், மியூசிக் அகாதெமி வழங்கிய "சங்கீத கலாநிதி' விருதும் பெற்றவர் டாக்டர். உமையாள்புரம் சிவராமன். அவர், தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்: 

மனிதர்கள்
குணத்தோட, நல்ல எண்ணத்தோட, உதவி செய்யும் மனத்தோட, இருப்பவர்கள் கண்டிப்பாக நல்ல முறையில் வாழ்வார்கள். அதீதமான கோபம் இல்லாமல் இசையை ரசிக்க தெரிந்த புத்திசாலிகள் என்றும் மக்களால் மதிக்கப்படுவார்கள். பணிவு, தன்னடக்கம், கலை உணர்வு, ரசிக்கும் பண்பு, அதாவது அன்னப்பட்சி தண்ணீரை விட்டு பாலை குடிப்பதை போன்று, இந்த இசை வாழ்வில் இப்படி நல்ல விஷயங்களை மட்டும் பார்த்து, கேட்டு, பேசி வாழ்ந்தால் அதுவே சிறப்பான மனிதர்களுக்கு அழகு. இப்படி பட்டவர்களை நான் மிகவும் நேசிப்பேன். 

சங்கீதம்
சங்கீதம் சாஸ்வதமானது. ஒளிமயமான எதிர்காலம் இதற்கு உண்டு. சங்கீதம் எல்லா காலங்களிலும் மக்களை மயக்கும் தன்மை உடையது. அரசாங்கம், கலை அன்பர்கள், சங்கீத சபாக்கள், தொடர்ந்து ஆதரவு தருவதால் இசை உலகம் பிரகாசமாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. 

ரசிகர்கள்
நான் பல்வேறு ஊர்களுக்கெல்லாம் சென்று வாசித்திருக்கிறேன். எல்லா இடத்திலும் விஷயம் அறிந்த ரசிகர்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும் நம் ஊரில் வாசிக்கும்போது ஏதோ ஒரு சிறப்பான எண்ணம் ஏற்படுகிறது. மஹாகவி காளிதாசன் கூறியது போன்று அறிஞர்களுடன் இருப்பது போன்ற எண்ணம் எனக்கு இங்கு இருக்கும்போது ஏற்படுகிறது. நம் ரசிகர்கள் என்றுமே விபரம் அறிந்தவர்கள், இசை தெரிந்தவர்கள் என்பதனால் போலும். 

குடும்பம்
நாங்கள் தியாகராஜ ஸ்வாமிகளின் நேரிடையான சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 
Famous for culture and agriculture என்று சொல்லலாம். எங்களோடது பெரிய குடும்பம். எனது தகப்பனார் ஈழ்.பி. காசி விஸ்வநாத ஐயர், தாயார் கமலாம்பாள். எனது தந்தையார் மருத்துவராக இருந்தாலும் இசையில் பாண்டித்தியம் உள்ளவர். நான் நான்கு குருமார்களிடம் இசையை கற்றுக் கொண்டேன். அவர்கள் ஆறுபாதி நடேச ஐயர், தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், கும்பகோணம் (சாக்கோட்டை) ரங்கு ஐயங்கார். இவரிடம் சுமார் 15 வருடம் குருகுல வாசம் செய்து இந்த கலையைக் கற்றுக் கொண்டேன். கர்நாடக இசையில் என்னை திருப்பியவர்கள் என்றால் என் பாட்டி சாவித்திரி அம்மாள் எனக்கு 3 வயதாகும்போது முதன்முதலில் கஞ்சிரா வாங்கிக் கொடுத்தவர்கள். எனக்கு பக்க பலமாக இன்றுவரை இருப்பவர் எனது துணைவியார் அபிராமி சிவராமன்தான். எனது பிள்ளைகள் சுவாமிநாதன், சிவகுமார். பேரப்பிள்ளைகள் எஸ். விக்னேஷ், எஸ்.ஆதித்யா, எஸ். அபர்ணா, இவர்கள் எல்லாருக்கும் இசை பயிற்சி உண்டு. 

மிருதங்கம்
நான் பணிவுடன் சொல்வது ஒன்று தான். வாத்தியத்தில் சிறந்தது மிருதங்கம்தான் என்று எந்த மேடையிலும் தைரியமாக கூறுவேன். நாதவாத்தியத்திலும், தாள வாத்தியத்திலும், இந்த மிருதங்கத்திற்கு இணையான இசை கருவி வேறு இல்லை. ஆங்கிலத்தில் சொல்வதானால் queen of melody and king of percussion என்று கூறலாம். இன்னும் சொல்லப் போனால் நானும் இந்த மிருதங்கமும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன். 

இடம் 
அறிவாளிகளின் கூட்டம், சிறந்த ரசிகர்கள் இருக்கும் அரங்கம், படித்த பண்டிதர்கள் உள்ள இடம், எனது சிஷ்யர்களுடன் நான் செலவிடும் நேரம், ராமர் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல், இவர்கள் அனைவரும் இருக்கும் இடம் கண்டிப்பாக நல்ல இடமாகவும், மன நிறைவை தரும் இடமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

பாணி 
குருமார்களிடம் கற்றுக் கொண்ட வித்தையை நன்றாக உணர்ந்து, நம் மூத்தவர்களின் பாரம்பரிய இசையில் புது உத்திகளை உள்ளடக்கி, பண்டிதரும், பாமரரும் ரசிக்கக் கூடிய பாணியை உருவாக்கி, அதை இளைய தலைமுறை கலைஞர்கள் பின்பற்றக் கூடிய அளவில் இருந்தால், அந்த கலைஞரின் பாணி நிலைத்து நிற்கும். அந்த முறையில், ஆண்டவன் கிருபையினால், நான் ஏற்படுத்திய பாணி உமையாள்புரம் சிவராமன் மிருதங்க பாணி. இன்று இந்த பாணி எல்லாராலும் கையாளப்பட்டு வருகிறது.

சிஷ்யர்கள்
என்னை பொருத்தவரை என்னிடம் சிஷ்யராக சேர ஆண் பெண் பேதமில்லை. உலகம் முழுவதும் எனக்கு சிஷ்யர்கள் உள்ளனர். நான் வாசித்து வெளியான "மிருதங்க சிந்தாமணி' என்ற DVD level 1, a beginners guide என்ற பெயரில் வெளிவந்து, மிருதங்கத்தின் மேல் பலருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு பல ரசிகர்கள் என் சிஷ்யர்களாக மாறி உள்ளனர். இது போல் பல்வேறு பெயர்களில் சுமார் 11 டிவிடிகள் (DVDs) 33- மணிநேரத்திற்கான டிவிடிகள் இந்த லய உலகத்திற்கு அளித்துள்ளேன். பலருக்கும் மிருதங்கம் கற்க இது மிகவும் உபயோகமாகி உள்ளது. சென்னையில் உள்ள CLRI, IIT யுடன் இணைந்து தாள ஆராய்ச்சியும் செய்து உள்ளோம். 

கலைஞர்கள் 
எல்லாம் வல்ல இறைவன் அருளால், 73 - ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு கலைஞர்களுடன் மேடையில் நான் வாசித்திருக்கிறேன். என்னை பொருத்தவரை எல்லாருமே உயர்வானவர்கள்தான், உசத்திதான். பழையவர்கள், புதியவர்கள் என்று நான் என்றுமே பேதம் பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் பாண்டித்யம் உள்ளவர்கள், வித்வத் நிறைந்தவர்கள். அவர்களுடன் இணைந்து மேடை ஏறியது எனக்கு சந்தோஷமான ஒன்று. 

சாப்பாடு
காரம் அதிகம் இல்லாமல் இருக்கக் கூடிய சைவ உணவை நான் விரும்பி சாப்பிடுவேன். அதுவும் ஒரு 60 சதவிகிதம் மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டால் நலம் பயக்கும். வாழவேண்டும் என்பதற்காக சாப்பாடு இருக்கவேண்டும். சாப்பாட்டிற்காக வாழ்க்கை இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com