பிரெஞ்சு நாடோடிக் கதை: செருப்புத் தைப்பவனும் பணக்காரனும்!

செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன், நகரின் ஓர் ஓரப் பகுதியில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எந்தக் கவலையும் கிடையாது செருப்புத் தைக்கும்போது, சந்தோஷமாகப் பாடிக் கொண்டே வேலை செய்வான்.
பிரெஞ்சு நாடோடிக் கதை: செருப்புத் தைப்பவனும் பணக்காரனும்!

செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன், நகரின் ஓர் ஓரப் பகுதியில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எந்தக் கவலையும் கிடையாது செருப்புத் தைக்கும்போது, சந்தோஷமாகப் பாடிக் கொண்டே வேலை செய்வான். அதிகாலை முதல் மாலை வரை இப்படி வேலை செய்வது அவனுடைய வழக்கம்.
 அவன் வீட்டுப் பக்கத்தில் ஒரு மாளிகை. அதில் ஒரு பெரும் பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர்வான். அந்தச் சமயம் பார்த்துச் செருப்புத் தைப்பவன் பாட ஆரம்பித்துவிடுவான். பணக்காரனின் தூக்கம் கலைந்துவிடும். இது அவனுக்கு மன உளைச்சலாக இருந்தது.
 இப்படிப் பல நாட்கள் நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவனைத் தன் மாளிகைக்கு வரவழைத்தான். "நீ எப்போதும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே வேலை செய்கிறாயே, உனக்கு எந்த கவலையும் கிடையாதா?'' என்று கேட்டான்.
 "ஐயா, இரண்டு பிள்ளைகள் குடும்பத்தை மனைவி நன்றாகக் கவனித்துக் கொள்வாள். என்னுடைய மனதிற்குத் தக்க அவளும், என் பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள். என் தொழிலுக்கும் ஒத்துழைப்பார்கள். கிடைத்த வருமானத்தைக் கொண்டு திருப்தியாக வாழ்கிறோம். பேராசை எங்களுக்குக் கிடையாது. அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்றான்.
 இதைக் கேட்ட பணக்காரன் பொறாமைப்பட்டான்... "உனக்கு வருஷத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று'' கேட்டான்.
 ""நான் வருஷக் கணக்கெல்லாம் பார்ப்பது கிடையாது. அன்றாட வருமானம்தான் எனக்குத் தெரியும். அதுவும் சில நாள் கிடைக்கும். சிலநாள் கிடைக்காமலும் போகும். அதைப் பற்றியும் நாங்கள் கவலைப் படுவதில்லை'' என்றான்.
 "நீ எனது மாளிகைக்குப் பக்கத்தில் குடிசையில் வாழ்கிறாய். உன்னை நான் பணக்காரனாக்க விரும்புகிறேன். இதோ நூறு தங்க நாணயங்கள். இதைப் பத்திரமாக வைத்துக் கொண்டு அவசியம் ஏற்படும்போது செலவு செய்துகொள்'' என்று சொல்லிப் பணக்காரன் நாணயங்களைக் கொடுத்தான்.
 செருப்புத் தைப்பவன் கரை காணாத மகிழ்ச்சி அடைந்தான். தங்க நாணயத்தைப் பெற்றுக் கொண்டவன், தனது குடிசைக்கு வந்தான். இது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் சந்தோஷப்படுவார்கள் என்று பத்திரமான ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து வைத்தான். அன்று முதல் அவன் பாடுவதை நிறுத்திவிட்டான். அவனுக்கு எப்போதும் தங்க நாணயங்களைப் பற்றிய ஞாபகம். அவற்றைக் காவல் செய்வதைத் தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியவில்லை. எவனும் வந்து திருடிவிடக் கூடாது என்று இரவிலும் அவன் கண் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். ஒரு சிறு சலசலப்புக் கேட்டாலும் ஓடிப்போய் நாணயங்கள் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு வருவான்.
 இப்படி மன நிம்மதி இழந்து கவலையிலும், பயத்திலுமே காலம் தள்ள அவனால் முடியவில்லை. ஒருநாள் தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பணக்காரனுடைய மாளிகைக்கு ஓடினான்.
 "ஐயா ! நீங்கள் கொடுத்த இந்த நூறு தங்க நாணயங்களையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பாட்டையும் என்னுடைய நித்திரையையும் எனக்குத் திரும்பக் கொடுங்கள்'' என்றான்.
 எவன் ஒருவன் தன் உழைப்பால் வந்த பொருளைக் கொண்டு திருப்திப்படுகிறானோ அவன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வான்.
 - ஆதினமிளகி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com