முறம்புகள் நிறைந்த நாடு! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

முறப்பநாடு படித்துறைக்கு இட்டுச் செல்லும் சாலையில், அதை அடைவதற்கு 2 கி.மீ. தொலைவிலேயே கார்கள் நிறுத்தப் படுகின்றன என்றும், குளிப்பது என்றால் 1 1/2 கி.மீ நீளம் கியூவில் நிற்க வேண்டும் என்றனர்.
 முறம்புகள் நிறைந்த நாடு! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 48
"வாழ்க்கையும், மரணமும் ஒன்றாக இருப்பதுபோல, ஆறும், கடலும் ஒன்றாக இருக்கிறது.'
 - கலீல் ஜிப்ரான் (Khalil Gibran)
 முறப்பநாடு படித்துறைக்கு இட்டுச் செல்லும் சாலையில், அதை அடைவதற்கு 2 கி.மீ. தொலைவிலேயே கார்கள் நிறுத்தப் படுகின்றன என்றும், குளிப்பது என்றால் 1 1/2 கி.மீ நீளம் கியூவில் நிற்க வேண்டும் என்றனர். அது மட்டுமா கைலாசநாதரை தரிசிக்க மீண்டும் கால்கள் கடுக்க நிற்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்பதினால் கூட்டம் அதிகம் என்றதுமே செய்வது அறியாது திகைத்து நின்றோம்.
 குடும்ப நண்பர் காமராஜின் ஆலோசனைப்படி, முறப்பநாடு குடிமகன் ஒருவரின் துணைகொண்டு தாமிரபரணி ஆற்றை நோக்கி பயணித்தோம். குறுக்கு வழி ஒன்றின் மூலம் சென்று, மக்கள் குளித்துக் கொண்டிருக்கும் படித்துறைக்கு எதிர் திசைக்கு சென்றோம். எதிர் கரையில் குளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கள் நெருக்கி அடித்து ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்தில் கூட்டமே இல்லை. எங்களை அழைத்து வந்தவரின் மதிநுட்பத்தைப் பாராட்டியபடி ஆனந்த குளியல் போட்டோம்.
 கொஞ்சம், கொஞ்சமாக என்னைத் தழுவிக் கொண்ட தாமிரபரணி அன்னையின் அன்புப் பிடியில் கட்டுண்டு கிடந்தேன். உடல் சிலிர்த்து, உள்ளம் மலர்ந்து, தலை முழுகி எழுந்தேன். என் கணவரின் கைகளைப் பற்றிக் கொண்டு மூன்று முழுக்குகள் போட்டேன். என் மனம் நான் படித்த "ஜடக பாரிஜாதா' என்ற புராண ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளில் ஒன்றை நினைத்துப் பார்த்தது. அதன்படி பிராமணன் ஒருவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து மிக மேன்மையான வரம் ஒன்றைப் பெற்றார்.
 அதன்பலனாக நீரில் வாழ்ந்து, புனித நதிகளை எல்லாம் சுத்தப்படுத்தும் வல்லமையைப் பெற்றார். அன்று முதல் "புஷ்கரா' அதாவது உலகத்திற்கு ஊட்டம் அளிப்பவன் என்று அழைக்கப்பட்டார். பிரம்ம தேவருக்கு, படைப்பு தொழிலுக்காக தண்ணீர் தேவைப்பட்ட பொழுது, அவர் சிவனிடம் தன்னுடைய கமண்டலத்தில் புஷ்கரா தங்கி இருக்க வேண்டினார்.
 சில காலத்திற்குப் பிறகு தெய்வங்களுக்கு எல்லாம் ஆசானான குருபகவான் புஷ்கராவை தன்னுடன் சேர்ந்து இருக்க அழைத்தார், ஏனெனில் புஷ்கரனால் மட்டும்தானே புனித ஆறுகளை சுத்திகரிக்க முடியும். முதலில் பிரம்மாவை விட்டு வர மறுத்த புஷ்கரா, பிறகு பிரம்மாவுடனும், மற்ற தெய்வங்களுடனும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்பொழுது அந்தந்த ராசிக்கு உரிய ஆறுகள் பன்னிரெண்டில், குருபகவான் செல்லும் ராசிக்கு உரிய ஆற்றிற்கு அவருடன் செல்ல சம்மதித்தார்.
 புஷ்கரம் என்பது ஒவ்வொரு ஆற்றிலும் ஒரு வருட காலம் இருந்தாலும், குரு நுழையும் ஒரு ராசியான முதல் பன்னிரெண்டு நாட்களும், அவர் வெளியேறும் கடைசி பன்னிரெண்டு நாட்களும் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் அந்தந்த நதிகளில் மூழ்கி எழுவது ஒருவருடைய பாவங்களை எல்லாம் களைந்து விடும் என்று நம்பப்படுகிறது. மறைந்து போன முன்னோர்களை நினைத்து அவர்களை பூஜித்து அவர்களுடைய ஆசியை பெறுவதற்கு இந்த புஷ்கரம் வழி வகுக்கின்றது. இதைத் தவிர மூழ்கி எழும் புனித நீரில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களின் நல்லாசியும், அருளும் கிட்டுகின்றது.
 பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் புஷ்கரத்திற்கே இவ்வளவு மகிமை என்றால் 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாபுஷ்கரத்தின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா.
 தாமிரபரணியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து எதிர் திசையில் மெல்ல நடந்து படித்துறையை அடைந்து அங்கேயும் ஒரு முழுக்குப் போட்டு, கரையேறி கைலாசநாதர் கோயிலை நோக்கி நடந்தோம்.
 "முறப்பநாடு' என்று ஏன் பெயர் வந்தது என்பதற்கான விளக்கமும் குருக்கள் ஒருவர் மூலம் கிடைக்கப்பெற்றோம். சூரபத்மன் என்ற அரக்கனின் தலைமையில் அசுரர்கள், முனிவர்களுக்கு இன்னல் விளைவிக்க, அவர்களின் கொடுமைகளில் இருந்து தங்களை விடுவிக்கும்படி ஈசனை முறைப்படி வேண்டினராம். முறை + படி + நின்ற நாடு "முறப்பநாடு'. அதாவது முறைப்படி ஈஷ்வரரை நாடி நின்ற ஊர் என்று அழைக்கப்பட்டு பிறகு முறப்ப நாடாகிவிட்டது. இந்த நிகழ்வுக்கு சாட்சியாக முறப்பேஸ்வரர் கோயில் இங்கே உள்ளதாம்.
 வீரத் தமிழ் பெண்மணி ஒருத்தி முறம் கொண்டு புலியை விரட்ட முறப்ப நாடாயிற்று என்று கூறுவதும் உண்டு. "முறம்பு' என்கின்ற பெரிய பாறைகள் நிறைந்த இடம் என்பதால் முறம்புகள் நிறைந்த நாடு முறப்ப நாடாயிற்று போன்ற தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினோம்.
 ஒருவழியாக கைலாசநாதரின் தரிசனம் கிட்டியது. சிவகாமி அம்மையாக சக்தி காட்சி அளித்தாள். சிவலிங்கத்தின் முன் இருந்த நந்தியைக் கண்டதும் என் புருவங்கள் விரிந்தன. அட, "என்ன இது, நந்தியின் முகம் குதிரையின் முகம் போல இருக்கிறதே'' என்றேன். இதற்கான விளக்கத்தையும் பெற்றேன்.
 சோழ ராஜா ஒருவருக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. கடவுளை வேண்டி ஒரு பெண் மகளைப் பெற்றனர். ஆனால் அந்தப் பெண் குழந்தைக்கு குதிரை முகம் வாய்த்திருந்தது. மனம் கலங்கிய மன்னர் சிவனை நோக்கி கடும் தவம் புரிய, சிவனும் தோன்றி வேண்டிய வரம் தர வாக்கு தந்தார். மன்னர் தன் மகளின் நிலையைக் கூறி, அவளுக்கு அழகான முகத்தைத் தர வேண்டினார். சிவபெருமான் கூறினார், "நீ உன் பெண்ணை தட்சிண கங்கை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வைத்து அங்கே குடிகொண்டிருக்கும் பெருமானை வேண்டினால் உன்னுடைய ஆசை நிறைவேறும்' என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். அவ்விதமே அரசரும் செய்ய, அவருடைய மகளுக்கு குதிரை முகம் மறைந்து, வெகு அழகான முகம் வாய்த்தது. ஈசுவரனின் வாகனமான நந்தி அன்போடு அந்த பெண்ணின் குதிரை முகத்தை ஏற்றுக் கொண்டது. அன்பே சிவம், என்றால் நந்தியும் அன்பின் வடிவம்தானே என்று எண்ணி மகிழ்ந்தேன்.
 குரு, தட்சிணாமூர்த்திக்கு இங்கே தனி சந்நிதி உள்ளது. அங்கே அர்ச்சனை செய்தோம். முறப்ப நாட்டில் சற்று தள்ளி தாமிரபணி கரையில் இருந்த காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களுக்கும் சென்று வழிபட்டோம்.
 லட்சோப லட்சம் மக்கள் கூடியிருந்த முறப்ப நாட்டில் ஒருவிதமான இடையூறும் இல்லாமல் தாமிரபரணி மகாபுஷ்கரத்தில் குளித்து, கோயில்களுக்குச் சென்று வழிபட்டது மனதிற்கு மிகுந்த நிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.
 மனதில் ஒரு சிறு உறுத்தல், நம் நாட்டில் புனித நதிகளை தெய்வத்தாயின் வடிவமாக வணங்கி மகிழ்கிறோம், ஆனால் அந்த நதிகளை மாசுபடுத்துகிறோம், பிறநாடுகளில் நதிகளை வணங்குவதில்லை, ஆனால் அந்த நதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை அசுத்தப்படுத்துவது இல்லை. நாமும் இதைப் பின்பற்றினால் மீண்டும் 144 வருடங்கள் கழித்து வரும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவின்பொழுது நமது வருங்கால சந்ததிகளின் உடல்களை மட்டும் கழுவி செல்லமாட்டாள் அந்த தாமிரபரணி தாய், அவர்களின் ஆன்மாக்களையும் தொட்டுச் செல்வாள், ஜீவ நதியாக!
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com