ஈரானிய நாட்டு நாடோடிக் கதை: தந்தை என்ன செய்தார்?

ஒரு சமயம் கலீல் என்பவர் தம் நண்பரைக் காண குதிரைமீது ஏறி அஜுபா என்னும் கிராமத்துக்குச் சென்றார்
ஈரானிய நாட்டு நாடோடிக் கதை: தந்தை என்ன செய்தார்?

ஒரு சமயம் கலீல் என்பவர் தம் நண்பரைக் காண குதிரைமீது ஏறி அஜுபா என்னும் கிராமத்துக்குச் சென்றார். இரவாகிவிட்டதால் கலீல் அங்கேயே தூங்குவது என்று முடிவு செய்தார். குதிரையைத் தொழுவத்தில் கட்டிவிட்டுத் தூங்கச் சென்றார்.
 மறுநாள் காலையில் கலீலின் நண்பர்கள் முதலில் விழித்துக் கொண்டனர். தொழுவத்தில் குதிரையைக் காணவில்லை. யாரோ திருடிக் கொண்டு போய்விட்டனர்.
 நண்பர்கள் கலீலை எழுப்பி விஷயத்தைக் கூறினர். கலீலுக்குக் கோபம் வந்துவிட்டது. கூச்சலிடத் தொடங்கினார்.
 "எனக்கு எந்தவிதச் சமாதானமும் தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் என் குதிரைதான். திருடர்கள் உடனே எனது குதிரையைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அப்படி அவர்கள் கொடுக்காவிட்டால் என் தகப்பனார் செய்ததை நானும் செய்வேன். இத்திருடர்களின் தகப்பனார்களை ( அதாவது இவர்களுக்கு முன்பு திருடனாக இருந்தவர்களை) என் தந்தை எப்படி நடத்தினாரோ அப்படி இப்பொழுது என் குதிரையைத் திருடினவர்களின் மகன்களை நான் நடத்தப்போகிறேன்''. கலீல் இவ்வாறு கூச்சல் போட்டு அவ்வூர் மக்களை மிரட்டினார்.
 அவ்வூர் மக்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கலீலின் தந்தை என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாது.
 "இங்கே பாருங்கள், கலீல்! உங்கள் தந்தை என்ன செய்தார்? திருடர்களின் தந்தையார்களை எப்படி நடத்தினார்?'' என்று அவ்வூர் மக்கள், கலீலைக் கேட்டனர்.
 "அதைப் பற்றி அறிய வேண்டியது அவசியமில்லை. குதிரையைத் திருடிய திருடர்கள் மட்டும் அல்ல. நீங்களூம்தான் அப்படி நடத்தப்படுவீர்கள் என்பது உங்கள் மரமண்டைகளுக்குப் புரிந்ததா?'' என்றார் கலீல்.
 அவ்வூர் மக்களுக்கு ஒரே வியப்பு! என்ன ஆனாலும் சரி, தொலைந்த குதிரையை எப்படியாவது கண்டு பிடித்துவிடுவது என அவர்கள் முடிவு செய்தனர். அவர்கள் விரும்பியதெல்லாம் கலீலின் தந்தை அவ்வூரில் செய்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதுதான்.
 களவுபோன குதிரை மாலையில் கொண்டு வரப்பட்டது. காட்டில் ஒரு முட்புதரின் கீழ் புல் மேய்ந்து கொண்டு இருந்ததாகக் கூறினார்கள்.
 பிறகு அவ்வூர் வாசிகள் அனைவரும் ஒன்று கூடி, "இப்பொழுது கூறுங்கள். இவ்வூரில் உங்கள் தந்தை என்ன செய்தார்?'' என்று கலீலைக் கேட்டனர்.
 கலீலின் தந்தை ஒரு பெயர் போன முட்டாள் என்பதும் முழுச் சோம்பேறி என்பதும் பலருக்குத் தெரியாது.
 "என் அப்பா என்ன செய்தார் என்று கேட்கிறீர்கள்? இதுதான் அவர் செய்தது. ஒருநாள் என் தந்தை இவ்வூருக்குக் குதிரையில் வந்தார். அவருடைய குதிரை களவு போய்விட்டது. பிறகு குதிரையின் சேனத்தைத் தம் முதுகின் மீது போட்டுக் கொண்டு கால்நடையாகவே வீடுபோய்ச் சேர்ந்தார். அதே போலத்தான் நானும் செய்ய நினைத்தேன்'' என்றார் கலீல்.
 அனைவரும் இதனைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.
 - தங்க. சங்கர பாண்டியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com