குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு!

"போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி. அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது
குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு!

"போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி. அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது என்பதுதான் மெரீனா புரட்சி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு சொல்லி சென்ற செய்தி. இளைஞர்கள், மாணவர்கள் வைத்து எழுப்பிய நெருப்பு, அநீதிக்கு எதிராக ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மௌனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்துக் கொண்டதுதான் இந்த போராட்டங்களின் வெற்றி. அது போன்ற ஒரு போராட்டத்தின் முழு வடிவம்தான் இந்தப் படம்''. படத்தின் டிரெய்லர் ஓட விட்டப்படி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். பல சீனியர் இயக்குநர்களோடு பயணித்த அனுபவம் கொண்டவர். இவர் இயக்கும் முதல் படம் "பெட்டிக்கடை'.
 "பெட்டிக்கடை'.... தலைப்பே வசீகரமாக இருக்கிறது...
 ஆமாம், அதை சரி வர புரிந்து வந்திருக்கிறேன். தலைப்புதான் படம். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியது வெறும் ஜல்லிக்கட்டுக்காகத்தான் என நினைத்தால், அதை விட மடத்தனம் எதுவும் கிடையாது. உண்மையில் இன்றைய தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை கலைத்து பார்ப்பதற்கான ஒரு களமாக அந்த மெரீனா போராட்டக் களத்தைப் நான் பார்த்தேன். அதை விட அதிகாரமும், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் மீது நிகழ்த்திய அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருந்தது என்பதுதான் நிஜம். அதைத்தான் போராட்ட களம் வெளிப்படுத்தியது. மெரீனா மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்கவே கோலா கம்பெனிகளுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டதே, அதற்கு சாட்சி. கூடவே கருகும் பயிர்களுக்காக உயிர் விடும் விவசாயிகளுக்காகவும் அவர்களுடைய குரல் ஒலிக்கத் தவறவில்லை. மண்ணைக் காப்பது தொடங்கி அத்தனை பேரும் சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடினார்கள். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்த குரல்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பதற்கான குரல்களாகவே இருந்தன. நம்முடைய விளையாட்டிலும் குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு என்ற கல்வியை போராட்டக் களத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் இதன் வெற்றி. அது மாதிரிதான் இதுவும்.
 எப்படி இருக்கும் திரைக்கதை வடிவம்...
 முதல் படத்தில் எல்லாரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் சினிமா என்பது பெரும்பாலும், நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்றுதான் இருக்கும். என் சொந்த ஊர் திருநெல்வேலி. குமராபுரம் கிராமம். அதுதான் எல்லாம். ஐந்து மைல் சுற்றளவு வரையிலான பயண வாழ்க்கை மட்டும்தான். அதன் பின் பிழைப்புக்காக மும்பை, சினிமாவுக்காக சென்னை என பயணங்கள் நீண்டன. பிழைப்பு, சினிமா என எல்லாம் முடிந்து ஊருக்கு போனால், ஊரின் முகமே மாறியிருந்தது. சித்திரம் போல் இருந்த அந்த கிராமம், மக்கள் எல்லாவற்றிலுமே மாற்றங்கள். குறிப்பாக, மருத்துவமனைகள் வந்திருந்தன. அதிகபட்சம் ஒரு பெட்டிக்கடை இருந்த ஊர் அது. உணவு சங்கிலி முறைகள் அறுந்துபோனதன் விளைவுதான் அது என்று தெரிந்து கொண்டேன்.
 குமராபுரம் சோடா, கலர், பன்னீர் சோடா என்றால், சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம்... ஒருகாலத்தில்.. திருநெல்வேலி, கன்னியாகுமரி, குற்றாலம் வரைக்கும் வியாபாரம் அள்ளும். கோயில் கோபுரம் போட்டு பக்கத்தில் ஒரு ரோஜாப் பூ வரைந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பன்னீர் சோடா கிடைக்காத கடை இருக்காது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, "நீ இந்த சோடாவ எங்கயும் குடிக்க முடியாது... தாமிரபரணி தண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட்டு இருக்கு... கோரையாத்து தண்ணின்னா இன்னும் விசேஷம்... அதானே நம்ம பெசல்...'' என்பார் பெட்டிக்கடை அண்ணாச்சி. இப்போது அந்த கம்பெனியே இல்லை. அழுக்கு வேட்டியும் துண்டுமாக அய்யாவைப் பார்க்கவே மனசுக்கு ஒருமாதிரி இருந்தது. உள்நாட்டின் தொழில்கள் நசிந்து போவது ஒரு முதலாளித்துவத்தின் ஆதாரவிதி அந்த சின்ன தொழில்களோடும் அவர்களின் வாழ்க்கை முறைகளோடும் நமக்கும் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கி இருக்கிறார்கள். அவர்களது அழிவு என்பது தவிர்க்க முடியாதது மொத்தமாக முதலாளித்துவம் ஒழியும் போதுதான் போட்டா போட்டி நொருங்கும். வாழ்க்கையை அதன் எதார்த்த நோக்கில் மனிதன் வாழ ஆரம்பிப்பான். இதை சினிமாவாக எடுத்து உணர்த்த வேண்டும் என்பதுதான் கனவு. அதுதான் இது.
 படத்தில் நிறைய நடிகர்கள்.... என்ன விசேஷம்...
 சமுத்திரக்கனி, "மொசக்குட்டி' வீரா, "நான் கடவுள்' ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன்... நிறைய பேர். அவர்களின் அனுபவங்கள் பயன்பட்டு இருக்கிறது. ஒரு நாளுக்கும், இரண்டு நாளும் கால்ஷீட் தருகிற சமுத்திரக்கனி அண்ணன் எனக்காக கேட்கிற நாள்களில் வந்து நடித்து தந்தார். அது போல் சாந்தினி, வர்ஷா, அஸ்மிதா என மூன்று ஹீரோயின்கள். அத்தனை பேரும் அப்படி பொருந்தி வந்திருக்கிறார்கள். மரியா மனோகர் இசை. மறைந்த நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் அத்தனை பலம். இது என் முதல் படம். சும்மா கலகலவென படத்தை கொண்டு போவதுதான் தெளிவு. வாழ்க்கையின் எந்தப் பக்கத்தை திறந்து பார்த்தாலும், அதில் ஆச்சரியங்கள் நிறைந்து இறைந்து கிடக்கிறது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கும். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் உத்திரவாதம் உண்டு. முழு படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுகிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துத்தான் சொல்கிறேன். சமூகம் சார்ந்த படம் இப்படித்தான் இருக்கும்.
 ஒரு குறும்படம்.... அடுத்தது சினிமா.. என்று மாறியிருக்கிற சூழலில், இயக்குநராக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் போல...
 சூழல் மாறியிருக்கலாம்.. ஆனால் இன்னும் ஏக கதைகளை சுமந்து திரியும் நண்பர்களை நான் அறிவேன். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்த முதல் தலைமுறை இளைஞர்கள் முட்டி முளைத்து எழுவதற்குள் ஒவ்வொரு தினமும் யுகம். அப்பாவின் கனவு, அம்மாவின் பரிவு, தம்பியின் அடுத்தக் கட்டம், சகோதரிகளின் திருமணம் என ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஆயிரம் பிரச்னைகள். அதெல்லாம் கடந்து ஒரு கதை முடித்து, தயாரிப்பாளர் தேடி, படப்பிடிப்பை நடத்துவதற்குள் போதும்... போதும்... என்றாகி விடும். என்னை மாதிரி கனவுக்கும், எதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினமும் அலைந்து திரியும் நண்பர்கள் எத்தனையோ பேர். உழைப்பையும், மனசையும் மட்டுமே சுமந்து பெரு நகரம் வரும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கனவுகளில் உதிராமல் கிடப்பவை எத்தனை.. நினைத்தாலே மனம் எங்கெங்கோ அலைகிறது.
 - ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com