யானைகளின் உல்லாசப் பயணம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரை. அங்கே புதிய விருந்தாளிகள் வந்திருக்கின்றனர்.
யானைகளின் உல்லாசப் பயணம்

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் உற்சாகத்தில் கோயில் யானைகள்
 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரை. அங்கே புதிய விருந்தாளிகள் வந்திருக்கின்றனர். சென்ற ஆண்டும் இதேபோன்று வந்தவர்களும் அவர்களில் அடக்கம். ஆம், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் அங்கே நடைபெற்று வருகிறது.
 தற்போது இந்த முகாமில் 28 கோயில்களின் யானைகள் பங்கேற்றுள்ளன.
 இங்கு வருவதற்கு முன்பு கோயில்களில் நடையைத் திறக்க இந்த யானைகளை தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுப்பி விடுவது வழக்கம்.
 அதன் பின் தொடர்ந்து பக்தர்களுக்கு இரவு வரை அருளாசி வழங்குவதுதான் இந்த யானைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வேலைகள். இந்த அன்றாட நடைமுறையிலிருந்து முற்றிலும் விலகி, இந்த யானைகள் இங்கே நிம்மதியாக உண்டு, உறங்கி ஓய்வெடுத்து வருகின்றன.
 முகாமில் நிம்மதியான தூக்கம், நேரத்துக்கு உணவு என 48 நாள்கள் சொகுசு வாழ்க்கைதான்.
 யானைகளுக்குத் தினமும் காலை 7 மணியில் இருந்து 8.30 மணி வரை இங்கு நடைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின் தென்னை மட்டை, கூந்தல் பனை, சோளத்தட்டு, கரும்பு, பசும்புல் என யானைகளின் தேவைக்கு ஏற்ப அவற்றிற்கு என்ன பிடிக்குமோ அதை உண்ணும்விதமாக உணவு வழங்கப்படுகிறது.
 அதன்பின் யானைகளுக்குச் சமையல் தயாராகிறது. ஒரு யானைக்கு 1 கிலோ முதல் 2 கிலோ வரைஅரிசி சாதம், கொள்ளு அரை கிலோ, பாசிப் பயறு 1 கிலோ என எல்லாவற்றையும் வேக வைத்து இதனுடன் வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்ஸ், புரோட்டின் பவுடர், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, அச்சு வெல்லம், லீவ் 52, பயோபூஸ்ட், சியாவண பிராஷ் லேகியம் 500 கிராம், அஷ்ட சூரணம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து உருண்டையாக்குகிறார்கள். யானைகளக்கான உணவு இப்போது தயார்.
 பாகன்கள் இந்த உணவை யானைகளுக்கு வழங்குகிறார்கள்.
 உண்ட மயக்கம் தீர கொஞ்சநேரம் தூங்கி எழுகின்றன யானைகள். அதன்பின் உல்லாச குளியல் மேடை என அழைக்கப்படும் ஷவர் பாத் தளத்துக்கு யானைகளைஅழைத்துச் செல்கிறார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் இந்த யானைகளைக் குளிக்க வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
 பின்னர் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மீண்டும் நடைப்பயிற்சி. குறைந்தது 3 கி.மீ. நடக்க வேண்டும். அதற்குப் பிறகு இரவு உணவு. யானைகள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விடுகின்றன. இப்படியாக தேக்கம்பட்டி யானைகள் முகாமில் யானைகள் 48 நாள்கள் உற்சாகமாக பொழுதைக் கழிக்கும். இவைகளின் உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பரிசோதிக்கப்படுகின்றன. இதற்கான மருத்துவர்கள் வருகின்றனர். யானையாகப் பிறக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
 - கே.பாபு
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com