செஸ் இமயங்களுடன் விளையாடணும்...

சென்னை புறநகர் பகுதியான பாடி. அங்கே ஒரு நடுத்தரக் குடும்பம். தனக்கு மூன்று வயதாகும்போதே அக்காவைப் பார்த்து செஸ் காய்களை நகர்த்த ஆரம்பித்த ஒரு சிறுவன் இப்போது, பதின்மூன்று வயது நிறைவாகும் முன்பே
செஸ் இமயங்களுடன் விளையாடணும்...

சென்னை புறநகர் பகுதியான பாடி. அங்கே ஒரு நடுத்தரக் குடும்பம். 
தனக்கு மூன்று வயதாகும்போதே அக்காவைப் பார்த்து செஸ் காய்களை நகர்த்த ஆரம்பித்த ஒரு சிறுவன் இப்போது, பதின்மூன்று வயது நிறைவாகும் முன்பே, செஸ் விளையாட்டின் பிரமிப்பு எனப்படும் "கிராண்ட் மாஸ்டர்' குழுவில் இடம் பிடித்துக் கொடுத்திருக்கிறது. இந்த சாதனைக்குப் பிறகு, அந்த லட்சியச் சுடர் தணிந்ததாகத் தெரியவில்லை. 
ஆம்...! அந்தச் சிறுவன் தான் பிரக்ஞானந்தா. உலகில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர்களில் இரண்டாம் இடத்தை அலங்கரிப்பவர் பிரக்ஞானந்தா. 
ரமேஷ் பாபு-நாகலட்சுமி தம்பதியினரின் வாரிசுகளான மூத்த மகள் வைஷாலி. இளைய மகன் பிரக்ஞானந்தா. இருவருமே சர்வதேச செஸ் ஆட்டத்தில் பல ஆண்டுகளாக வெற்றி வாகை சூடி வருபவர்கள். பிரக்ஞானந்தா, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்க, தமக்கை வைஷாலி படிப்பதோ பிளஸ் டூ வகுப்பில். 
தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை செஸ் ஆட்டத்துக்காகச் செலவிடும் பிரக்ஞானந்தாவுக்கு நண்பர்கள் வெகு குறைவு. அந்த நண்பர்களும் செஸ் ஆட்டத்துடன் தொடர்புடையவராக இருப்பார்கள். வைஷாலி கதையும் அதுதான். 
வைஷாலி-பிரக்ஞானந்தா வெற்றிப் பயணத்தின் இயக்கும் சக்தியாக இருப்பவர்கள் போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை ரமேஷ்பாபு, தாய் நாகலட்சுமி மற்றும் இப்போதைய பயிற்சியாளரும் சென்னையைச் சேர்ந்தவருமான இந்திய "கிராண்ட் மாஸ்டர்' ரமேஷ். 
உக்ரைனைச் சேர்ந்த செர்ஜே கர்ஜாகின் என்ற 12 வயது 7 மாதங்கள் நிறைந்த சிறுவன் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை முதலில் பெற்றவர். பிரக்ஞானந்தாவின் வெற்றியை அறிந்தவுடன் "கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்த், "கிராண்ட் மாஸ்டர் கிளப்பிற்கு வரவேற்கிறேன்.... விரைவில் சந்திப்போம்" என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, விருந்திற்காக தனது இல்லத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.
இத்தாலி நாட்டின் சிறிய ஊரான "ஊர்டிஜெய்'-யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது "க்ரெடின் ஓபன் 2018 ‘ தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே பிரக்ஞானந்தா "கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்றிருப்பது இன்னொரு சாதனை.
தந்தை ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியின் கொரட்டூர் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாகலட்சுமி வீட்டை நிர்வாகம் செய்வதுடன், பிள்ளைகள் இருவருடன் போட்டிகள் நடக்கும் இடங்களுக்குப் பயணிக்கிறார். இதுவரை இருபத்தைந்து நாடுகளுக்கும் மேலாக சென்று வைஷாலியும், பிரக்ஞானந்தாவும் செஸ் விளையாடி வந்திருக்கிறார்கள். 
""எனக்கு செஸ் விளையாட்டு குறித்து ஒன்றும் தெரியாது. மகள் வைஷாலியைத் தொடந்து மகன் பிரக்ஞானந்தாவும் செஸ்ஸில் ஆர்வம் காட்டியதால் அவர்களுக்கு உற்சாகம் தந்து வந்தேன். தொடக்க காலத்தில் செஸ் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அடிக்கடி பயணம் செய்ய வேண்டும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு பொருளாதாரத் சிரமங்கள் வந்தன. செஸ் ஆட்டம் நமக்கு சரிப்பட்டு வராது.. பிள்ளைகள் ஆடுவதை நிறுத்திவிடலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து எனது முடிவை மாற்றிக் கொண்டேன். நான் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொலை தூரங்கள் என்னால் பயணிக்க முடியாது. அந்த பொறுப்பை மனைவி நாகலட்சுமி ஏற்றுக்கொண்டார். தமிழ் நாடு, இந்தியா பிறகு வெளிநாடுகள் என்று பயணங்கள் தொடர்கின்றன. வெற்றிகளும் தொடர்கின்றன. தொடக்கத்தில் கடன் வாங்கி, வெளிநாடுகள் செல்ல ஆகும் செலவுகளை சமாளித்தேன். பிறகு, குழந்தைகளின் திறமையைக் கண்ட "ராம்கோ' நிறுவனம் ஆதரவுக் கரம் நீட்டியது. அதனால் இப்போது கடன் எதுவுமில்லை. பிள்ளைகள் படிக்கும் பள்ளியும் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. வீடு நிறைய இருக்கும் பரிசுக் கோப்பைகள் எனக்கு மன நிறைவைத் தருகின்றன. சில கோப்பைகள் 2015 டிசம்பர் மாதம் சென்னைக்கு வந்த வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.. அது எனக்கும் மகனுக்கும் மன சஞ்சலத்தைக் கொடுத்தது. இப்போதைய வெற்றிகள் அதற்கு மருந்தாக அமைந்துள்ளது. 
எட்டு, பத்து வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே 2013 , 2015 ஆம் ஆண்டில் பிரக்ஞானந்தாதான் சாம்பியன். 2016-இல் உலகின் யங் இன்டர்னேஷனல் மாஸ்டர் பட்டமும் பிரக்ஞானந்தாவை வந்து சேர்ந்தது.. வைஷாலி பத்தாம் 
பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் காரணமாக, பிரக்ஞானந்தா பெற்ற தர மதிப்பெண்களை செஸ் ஆட்டத்தில் பெற முடியவில்லை. வைஷாலியின் ரேட்டிங் கூடி தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்'' என்கிறார் தந்தை ரமேஷ் பாபு. 
செஸ் போட்டியின் யுக்திகளை பிரக்ஞானந்தாவினுள் விதைத்து வளர்த்து அறுவடை செய்திருப்பவர் ஆர்.பி ரமேஷ். இவர் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமாவார். 
""பிரக்ஞானந்தா, வைஷாலி நான்கு ஆண்டுகளாக என்னிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். கிரிக்கெட் ஆட்டத்தில் எப்படி ஓபனிங், மிடில், இறுதிப் பகுதி முக்கியமோ அப்படி செஸ் ஆட்டத்திலும் இந்த மூன்று நிலைகள் முக்கியமானவை. பிரக்ஞானந்தாவின் பலம் மத்திய மற்றும் இறுதிப் பகுதியில் வெளிப்படும். தொடக்கத்தில் பிரக்ஞானந்தா சமாளித்து நிதானமாக விளையாடுவார். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் பிரக்ஞானந்தா புகுந்து விளையாடுவார். அவரை தடையிட்டு நிறுத்த எதிர் ஆட்டக்காரருக்கு இயலாமல் போகும். 
பிரக்ஞானந்தாவின் இந்த யுக்திதான் இம்முறை அரங்கேறியது.. அதனால்தான் சின்ன வயதில் பெரிய பெருமையை பிரக்ஞானந்தா அடைய முடிந்திருக்கிறது. கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தா வென்றிருப்பதால் அவருடன் விளையாடுவதற்கு உலகின் பல முன்னணி செஸ் வீரர்களும் போட்டி போடுவார்கள். பிரக்ஞானந்தா இதே திறமையுடன் விளையாடினால், உலகின் முன்னணி செஸ் வீரராக பிரக்ஞானந்தா உயர முடியும். செஸ் ஆடும் போது நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட, பிரக்ஞானந்தா மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார். அதற்கு அவரது குழந்தைப் பருவமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்""  என்கிறார் ரமேஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com