Enable Javscript for better performance
"கலித்தொகை'யை கற்றறிந்த எம்.ஜி.ஆர்! - கவிஞர் முத்துலிங்கம்- Dinamani

சுடச்சுட

    

    "கலித்தொகை'யை கற்றறிந்த எம்.ஜி.ஆர்! - கவிஞர் முத்துலிங்கம்  

    By DIN  |   Published on : 13th May 2018 12:00 AM  |   அ+அ அ-   |    |  

    sk9

    ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 52
    எம்.ஜி.ஆரிடம் பழகியவர்களில் அதிலும் கல்விக்கூடங்கள் நிறுவியவர்களில் ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஏ.சி. சண்முகம், வேலூர் ஜி. விசுவநாதன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் ஜேப்பியார் ஒருவர்தான் கவிஞர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வந்தார்.
    எனக்குத்தெரிந்து தமிழ் அறிஞர்கள் நூறு பேருக்கும், கலைத் துறையைச் சேர்ந்த சில கலைஞர்களுக்கும் இதை வழங்கி வந்தார். அப்படி உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன். பத்தாண்டுக் காலம் அந்த உதவியை நான் தொடர்ந்து பெற்று வந்தேன். என்னைப்போல் பல கவிஞர்களும் பெற்று வந்தார்கள். அதற்காக எங்களைப் பரிந்துரை செய்தவர் கவிஞர் இளந்தேவன்.
    இளந்தேவன்தான் எங்களைப் போன்றவர்களுக்குப் பரிந்துரை செய்தார் என்ற விவரமே சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. ஜேப்பியார் மறைந்த பிறகு அந்த உதவித்தொகை நின்றுவிட்டது. இளந்தேவனும் இன்று மறைந்துவிட்டார்.
    அவர் மறைந்தாலும் மறக்க முடியாத கவிதை வரிகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
    கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும் 
    என்ன அதன் பெயரென்றால் இலங்கையெனச் சொல்கின்றார்.
    "பார் அழுத கண்ணீர் பனிக்கடலாய்க் கிடக்க - அது
    ஆர் அழுத கண்ணீர் அலைநடுவே மிதக்கிறது?
    சீதை அழுததெனச் செப்பியது ராமகாதை - தமிழ்க்
    கோதை அமுததெனக் கூறவில்லை பூமியிதை'' 
    நம் நெஞ்சை விட்டு அகலாத நித்திலக் கவி வரிகள் இவை.இளந்தேவன் மறைந்தபோது நான் சென்னையில் இல்லை. வெளியூரில் இருந்தேன். அதனால் அவர் மறைவுக்கு நான் செல்ல முடியவில்லை.
    அதைப்போல் "புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசன் மறைந்தபோதும் நான் சென்னையில் இல்லை. வெளிநாட்டில் இருந்தேன். அதனால் அவர் மறைவுக்கும் நான் செல்ல இயலவில்லை.
    தமிழ்ப் பொங்கல் விழாவை தஞ்சாவூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். ஏழாண்டுக் காலம் தொடர்ந்து தஞ்சைப் பொங்கல் விழாக் கவியரங்கத்திற்கு என்னைத் தலைமை தாங்க வைத்துச் சிறப்பித்தவர் அவர். அத்தகைய மாமனிதனின் இறப்புக்குச் செல்ல முடியவில்லையே என்பது என் மனதுக்கு மிகவும் நெருடலாக இன்னும் இருக்கிறது. வாழ்க நடராசனின் திருப்புகழ். அவர்தான் என்னை ஜெயலலிதாவிடம் முதன் முதல் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, நான் தமிழக மேலவை உறுப்பினர். ஜெயலலிதா தில்லி மேலவை உறுப்பினர். நாங்கள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.
    ஜேப்பியார் பத்திரிகையாளராகவும், படத் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் முதன்முதல் தயாரித்த படம் "ரிக்ஷா ரங்கன்' என்ற படம். இதில் "துப்பறியப் போறோம் நாங்க - எங்களுக்குத் துணையாக நீங்களும் வாங்க' என்றொரு பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் நான் எழுதினேன். இதில்தான் நா. காமராசன் எழுதி, பலரும் பாராட்டிய-
    "உதடுகளில் உனதுபெயர் ஒட்டிக் கொண்டது - அதை
    உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது''
    என்ற பாடல் இடம்பெற்றது.
    அதன்பிறகு "பன்னீர் மலர்' என்றொரு படத்தைத் தயாரித்தார். அதற்கு இசையமைத்தவர் சங்கர்கணேஷ். அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல்தான் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.
    "பனியும் நானே மலரும் நீயே
    பருவ ராகம் பாடுவோம்
    தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
    செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்''
    என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல். ஜேப்பியாருக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல் இது. இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும், ஜென்சியும் பாடியிருப்பார்கள்.
    இப்படிப்பட்ட படங்களையெல்லாம் தயாரித்த பிறகுதான் அவர் கல்விக்கூடங்களை நிறுவினார். தனியார் கல்விக்கூடங்களில் ஜேப்பியாரின் சத்தியபாமா பல்கலைக்கழகம்தான் சிறந்தது என்று கற்றவர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 2013-ஆம் ஆண்டு "உங்களுக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப் போகிறோம் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்'' என்று என்னிடம் ஜேப்பியார் தொலைபேசியில் கேட்டார். ""டாக்டர் பட்டம் பெறக்கூடிய அளவுக்கு நான் தகுதியுடையவன் அல்லேன். எனக்கெதற்கு டாக்டர் பட்டம்?'' 
    என்றேன்.
    "தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா உங்களுக்குக் கபிலர் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். எத்தனையோ திரைப்பாடல்கள், புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள், எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர். காலத்திலேயே பாரதிதாசன் விருது பெற்றவர் நீங்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நாமெல்லாம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறோம். அதற்குப் மேலே அரசவைக் கவிஞராக எம்.ஜி.ஆர். உங்களை அமர்த்தியிருக்கிறார். ஆகவே இதைவிட உங்களுக்கு என்ன தகுதி வேண்டும்? உங்களுக்குக் கொடுப்பதால் நாங்களும் தகுதி பெற்றவர்கள் ஆகிறோம்'' என்றார். அதன்பிறகு நான் அந்த டாக்டர் பட்டத்தை ஏற்றுக் கொண்டேன்.
    முசிறிப் புத்தன் "மன்ற முரசு' என்ற பத்திரிகையை நடத்தியதைப் போலே "நீரோட்டம்' என்ற பத்திரிகையை ஜேப்பியர் நடத்தினார். அதன் ஆசிரியர் பொறுப்பேற்று அதைச் சிறப்பாக நடத்தியவர் "முரசொலி' அடியார். ஒரு அடையாளத்திற்காக "முரசொலி' அடியார் என்று சொல்கிறேனே தவிர "முரசொலி'யை விட்டு வெளியேறியதும் அவர் "முரசொலி' என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டதில்லை.
    நான் "முரசொலி'-யில் இருக்கும் போது "முரசொலி' முத்துலிங்கம் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்பார்கள். நான் போட்டதில்லை. ஏனென்றால் அதைவிட்டு விலகிவிட்டால் அந்த அடைமொழியைப் போட்டுக்கொள்ள முடியாதல்லவா? அதனால் எதையும் முன்யோசனை செய்தே செயல்பட்டேன். 
    "நீரோட்டம்' பத்திரிகைக்கு ஒரு நாள் ஒரு கட்டுரை கொடுப்பதற்காக நான் சென்றபோது, "தமிழ்ப் பண்பு தமிழ்ப் பண்பு என்று சொல்கிறார்களே அது என்ன அடியார் தமிழ்ப் பண்பு? அது மாதிரி தெலுங்குப் பண்பு, கேரளப் பண்பு, இந்திப்பண்பு, கன்னடப் பண்பு என்று சொல்கிறார்களா? இங்கு மட்டும் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?'' என்று ஜேப்பியர் அடியாரிடம் கேட்டார். 
    "அதை முத்துலிங்கத்திடமே கேளுங்கள். 
    "அன்புக்கு நானடிமை - தமிழ்ப் 
    பண்புக்கு நானடிமை'' 
    என்று தலைவர் படத்திற்கு அவர்தான் பாட்டெழுதினார். அதனால் அவரிடமே கேளுங்கள்'' என்று அண்ணன் அடியார் சொன்னார்.
    ஒரு கட்சிப் பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும்? அதற்குப் பெட்டிச் செய்தி எப்படி எழுத வேண்டும்? தலையங்கம் எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை நான் அடியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் எனக்கு அவர் ஆசானைப் போன்றவர். அதனால் அடியார் அப்படிச் சொன்னவுடன் நானே ஜேப்பியாரிடம் சொன்னேன்.
    "தமிழ்ப்பண்பு என்றால் மிகச்சிறந்த பண்பு என்று பொருள். தமிழ் என்றால் அழகு, அன்பு, அறிவு, இனிமை என்று பல பொருள்கள் அச்சொல்லுக்கு உண்டு. பெண்களைப் பற்றிச் சொல்லும்போது "தமிழ் தழீஇய சாயலவர்' என்று கம்பர் சொல்லுவார். சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கத் தேவரும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். "தமிழ் தழீஇய சாயலவர்' என்று தமிழ்ப் புலவர்கள் பெண்களை வர்ணித்தது போல் தெலுங்கு தழுவிய சாயலவர், இந்தி தழுவிய சாயலவர், கன்னடம் தழுவிய சாயலவர் என்று எந்த மொழிப் புலவனும் இதுவரை சொன்னதில்லை. ஆகவே தமிழ்ப் பண்பு என்பது மிகச் சிறந்த அழகியல் பண்பு, இது தெய்வீகப் பண்பு'' என்று சொல்லிவிட்டு, சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு காட்சியை விளக்கிச் சொன்னேன்.
    "ஒரு காட்டிலே ஆண் குரங்கும் பெண் குரங்கும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தன. அந்த ஆண் குரங்கிற்கு இன்னொரு காட்டிலுள்ள பெண் குரங்கோடு தொடர்பு இருந்திருக்கிறது. ஒருநாள் அந்தப் பெண் குரங்கோடு சேர்ந்திருந்து விட்டுத் தன் காட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு நீர்நிலையைக் கடந்து தான் செல்ல வேண்டும். அந்த நீர்நிலையில் ஒரு கரையில் ஒரு வேங்கை மரம் வளர்ந்து மறுகரையில் அதன் கிளை அந்தக் கரையைத் தொட்டு நின்றது.
    அந்த வேங்கை மரத்தில் ஏறித்தான் மறுகரைக்கு அப்பால் உள்ள தன் காட்டிற்கு அந்த ஆண் குரங்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது அந்த நீர்நிலையில் தன் முகத்தை ஆண் குரங்கு பார்த்தது. பெண் குரங்கோடு சேர்ந்திருந்ததால் அதன் உடலிலுள்ள உரோமங்கள் கலைந்திருந்தன. இப்படியே சென்றால் தன் களவொழுக்கம் தன் மனைவிக் குரங்குக்குத் தெரிந்துவிடும் அது நமக்குப் பழியை உண்டாக்கும் என்றெண்ணி கலைந்திருந்த தன் உரோமங்களையெல்லாம் கண்ணாடி போன்ற அந்த நீர்நிலையைப் பார்த்து அந்த ஆண் குரங்கு சரிசெய்து கொண்டதாம்.
    அதாவது தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழக எல்லைக்குள் வாழக் கூடிய விலங்குகள் கூட இத்தகைய பண்புகளைப் பெற்றிருந்தன என்று இலக்கியம் குறிப்பிடுகிறதே அதற்குப் பெயர் தான் தமிழ்ப் பண்பு'' என்றேன்.
    "இப்படி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது?'' என்று அடியாரும் ஜேப்பியாரும் கேட்டார்கள்.
    "எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளநாகனார் என்ற புலவர் அதைப் பாடியிருக்கிறார்'' என்று சொல்லி அந்தச் செய்யுளையும் சொன்னேன்.
    "நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்''
    என்று தொடங்கும் அச்செய்யுள்,
    "கறிவளர் அடுக்கத்திற் களவினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன்
    புன்தலைப் பாறுமயிர் திருத்தும்
    குன்ற நாடன் இரவி னானே''
    என்று முடியும்'' என்றேன்.
    "இதையே ஒரு கட்டுரையாக "நீரோட்டத்திற்கு' எழுது'' என்றார் அடியார். எழுதினேன். அன்றைய காலத்து அ.தி.மு.க.வில் இலக்கிய உணர்வுடையோர் ஏராளம் இருந்தனர். கலித்தொகை இலக்கியத்தை நன்கு கற்றறிந்தவர் எம்.ஜி.ஆர். என்பது இன்றைய அ.தி.மு.க. தலைவர் எவருக்காவது தெரியுமா?
    (இன்னும் தவழும்)
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp