பாடல்கள் சில பார்வைகள்!- கவிஞர் முத்துலிங்கம்

புரட்சிதாசன் எழுதிய நேரடித் தமிழ்ப் படங்களில் சிவாஜி, பத்மினி நடித்த "மங்கையர் திலகம்' என்ற படமும் ஒன்று.
 பாடல்கள் சில பார்வைகள்!- கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 76
புரட்சிதாசன் எழுதிய நேரடித் தமிழ்ப் படங்களில் சிவாஜி, பத்மினி நடித்த "மங்கையர் திலகம்' என்ற படமும் ஒன்று.
 "கண்டு கொண்டேன் - நான் கண்டுகொண்டேன்
 கல்யாணம் ஆகும் மாப்பிள்ளை பெண்ணை
 கண் முன்னாலே கண்டு கொண்டேன்'
 என்ற அவரது பாடல் அந்தப் படத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்று.
 ஆனால் அதில் மிகவும் பிரபலமான பாடல் அண்ணன் மருதகாசி எழுதிய
 "நீலவண்ணக் கண்ணா வாடா
 நீயொரு முத்தம் தாடா'
 என்ற பாடல்தான்.
 "ரோஜாவின் ராஜா' என்ற படத்தில் எம்.எஸ்.விசுவநாதன் இசையில், "அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்' என்ற பாடல். புரட்சிதாசன் எழுதிய பாடல்.
 மேலும் சிவாஜி, கே.ஆர். விஜயா நடித்த "தராசு' என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர் இவர். இதன் கதை வசனம் பாடல்களை இவர்தான் எழுதியிருந்தார். இதற்கு இசையமைத்தவர் எம்.எஸ். விசுவநாதன்.
 அதுபோன்று இளையராஜா இசையில் இவர் தயாரித்து இயக்கிய "நான் போட்ட சவால்' என்ற படத்தில் ரஜினிகாந்த் பாடுவது போல் இடம் பெற்ற
 "நெஞ்சே உன்னாசை என்ன - நீ
 நினைத்தால் ஆகாததென்ன
 இந்தப் பூமி அந்த வானம்
 இடி மின்னலைத் தாங்குவதென்ன'
 என்ற டி.எல். மகராஜன் பாடிய பாடல், இதெல்லாம் நம் சிந்தையில் நிற்கும் புரட்சிதாசன் பாடல்தான். இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் பெயரை "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்று முதன்முதல் போட்டார்கள். இந்தப் பெருமை புரட்சிதாசனைத் தான் சாரும். இது 1980-இல் வெளிவந்த படம்.
 அன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களில் திருமண மண்டபம் கட்டி இறுதிவரை வசதியாக வாழ்ந்து மறைந்தவர் புரட்சிதாசன். புரட்சிதாசனைப் போன்று கவிஞர் குயிலனும் மொழி மாற்றுப் படங்களுக்குத்தான் அதிகப் பாடல்கள் எழுதியிருக்கிறார். 1953-இல் வெளிவந்த "உலகம்' என்ற படத்தில்தான் அவர் பாடலாசிரியராக அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்தியவர். கதை உரையாடல் ஆசிரியர் ஏ.எல். நாராயணன். அப்போது ஏ.எல். நாராயணன் "உலகம்' என்ற படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ராகவனுக்கு உதவியாளராக இருந்தவர்.
 இந்த ராகவன்தான் நடிகை மாலினியைப் பின்னாளில் திருமணம் செய்து கொண்டவர். சிவாஜி, மாலினி நடித்த "சபாஷ் மீனா' படத்தை தயாரித்து இயக்கியவர் இவர்தான். எம்.ஜி.ஆர். மாலினி நடித்த "சபாஷ் மாப்பிள்ளை' என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவரும் இவர்தான். பிறகு இவர் தயாரித்து இயக்கிய "நல்லவன்' என்ற படத்தின் மூலம்தான் ஏ.எல். நாராயணன் கதை உரையாடல் ஆசிரியர் ஆனார்.
 அதற்குப் பின்னர் டி.ஆர். மகாலிங்கம் நடித்த "விளையாட்டு பொம்மை' படத்திற்கு வசனம் எழுதினார். அது அவர் வசனம் எழுதிய இரண்டாவது படம்.
 பலமொழிகளில் எடுக்கப்பட்ட "உலகம்' படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு மூன்று நான்கு நேரடித் தமிழ்படங்களில் குயிலன் பாடல் எழுதியிருக்கிறார். அதில் கண்ணதாசன் கதை வசனத்தில் சிவாஜி, எஸ்.வி. சுப்பையா, எம்.கே. முஸ்தபா, நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்த "நானே ராஜா' என்ற படமும் ஒன்று. கல்பனா கலா மந்திர் சார்பில் ஆர்.ஆர். சந்திரன் தயாரித்து இயக்கிய முதல்படம் இது. இதற்கு இசையமைத்தவர் டி.ஆர். ராம்நாத் என்பவர்.
 "நானே ராஜா' படத்தில் "சிந்துபாடும் தென்றல் வந்து இன்பம் பொங்க வீசுதே' என்ற பாடல் குயிலன் எழுதியது. இந்தப் பாடலும் அந்தப் படத்தில் கே.பி. காமாட்சி சுந்தரம் எழுதிய "மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும் இந்த வேளையே இன்பமே' என்ற பாடலும் பிரபலமான பாடல்களாக அன்று விளங்கின.
 குயிலன் ஏறத்தாழ நானூறு பாடல்கள் எழுதியிருப்பார். அவை பெரும்பாலும் மொழி மாற்றுப் படப் பாடல்கள்தாம். அவர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்காவிட்டாலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் நன்கு அறிந்தவர். குயிலன் பதிப்பகம் என்று சென்னை பாண்டிபஜாரில் பதிப்பகமும் நடத்தி வந்தார். கம்யூனிசக் கருத்துக்களைக் கொண்டவர். குயிலனையும் புரட்சிதாசனையும் எனக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை ஒரு இக்கட்டான நேரத்தில் புரட்சிதாசன் எனக்கு முந்நூறு ரூபாய் கொடுத்து உதவினார். மறுவாரமே அவருக்கு நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
 குயிலன் வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற "பா' வகைகளையெல்லாம் நன்றாக எழுதுவார். "சந்தானம்' என்ற மொழி மாற்றுப் படத்தில் தட்சிணாமூர்த்தி இசையில் ஒரு கட்டளைக் கலித்துறை எழுதியிருக்கிறார். இது உதட்டசைவிற்கு தகுந்தாற்போல் எழுதியதா இல்லை, பின்னணியில் ஒலிக்கின்ற பாடலா என்பது தெரியாது. அவர் பாடல் தொகுப்பிலிருந்து இதை நான் தெரிந்து கொண்டேன். இதை டி.எம். செüந்தரராஜன் பாடியிருப்பார். அந்தக் கட்டளைக் கலித்துறை இதுதான்.
 "நாமே வருந்தி அழைத்தாலும் வாரான்
 நமன் வருங்கால்
 போமே எனவுரைத்தால்அவன் போவனோ
 பூதலத்தில்
 தாமே வரும் செயல் எல்லாம் அவன் செயல்
 சஞ்சலம்தான்
 ஆமோ மனமே வருந்திப் பயனென்
 அறிகுவையே'
 இதில் இலக்கணப் பிழை எதுவுமில்லை.
 இந்தத் தொடரில் கவிஞர் அறிவுமதி, சிநேகன், பா. விஜய், தாமரை, கபிலன் போன்றவர்களின் பாடல்களையும் விடுபட்டுப் போன பழைய கவிஞர்களின் பாடல்களையும் சொல்ல நினைந்திருந்தேன். இதில் சொல்ல வேண்டிய என் பாடல்களும் இருக்கின்றன. அதையெல்லாம் சொல்வதென்றால் இன்னும் பல வாரங்கள் ஆகும். நான் 76- ஆவது கட்டுரையில் தொடரை நிறைவு செய்வதாகச் சொல்லியிருக்கிறேன் என்பதால் இந்தத் தொடருடன் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். அதனால் என்னைப் பற்றிய சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன்.
 நான் பிறந்தது வளர்ந்தது கடம்பங்குடி என்ற சிற்றூர். இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. சிவகங்கையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. என் தந்தையார் பெயர் சுப்பையா சேர்வை - தாயார் பெயர் குஞ்சரம் அம்மாள். நான் சிவகங்கையில் பள்ளி இறுதி வகுப்புவரை (எஸ்.எஸ்.எல்.சி) படித்தவன். எங்கள் குடும்பத் தொழில் விவசாயம்.
 1966-இல் இருந்து 1972 வரை முரசொலி பத்திரிகையிலும் 1973-இல் இருந்து 1975 வரை "அலைஓசை' பத்திரிகையிலும் துணையாசிரியராகப் பணியாற்றி இருக்கிறேன்.
 நான் இதுவரை பத்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் முதலில் வெளிவந்த கவிதைப் புத்தகம் "வெண்ணிலா'. இது பாரதிதாசன் வாழ்த்துரையுடன் 1961-இல் வெளிவந்தது.
 அதன்பின் "எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்', "எம்.ஜி.ஆர். உலா', "எம்.ஜி.ஆர். அந்தாதி' என்று எம்.ஜி.ஆரைப் பற்றி மூன்று சிற்றிலக்கியங்கள் படைத்திருக்கிறேன். அவரைப் பற்றி மூவகைச் சிற்றிலக்கியங்கள் படைத்தவன் நான்
 ஒருவன்தான். "என் பாடல்கள் சில பார்வைகள்', "பாடல் பிறந்தகதை', "காற்றில் விதைத்த கருத்து' ஆகிய மூன்று உரைநடை நூல்கள் எழுதியிருக்கிறேன்.
 என் கவியரங்கக் கவிதைகளைத் தொகுத்து "உலாப் போகும் ஓடங்கள்' என்ற தலைப்பிலும், என் தனிக் கவிதைகளைத் தொகுத்து "பூகம்ப விதைகள்' என்ற தலைப்பிலும் புத்தகமாகப் பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
 தினத்தந்தி, ஆதித்தனார் விருது (1 லட்சம்) கவிக்கோ விருது (1 லட்சம்) சைதை துரைசாமி வழங்கிய எம்.ஜி.ஆர். உலகப்பேரவை விருது (1 லட்சம்), கண்ணதாசன் விருது (ரூ. 50ஆயிரம்), வாலி விருது (50 ஆயிரம்) ஊற்றங்கரை இலக்கிய அமைப்பு வழங்கிய சாதனையாளர் விருது (50 ஆயிரம்).
 ஆர்.எம்.விரப்பன் வழங்கிய எம்.ஜி.ஆர். கழக விருது (25 ஆயிரம்) சேலம் தமிழ்ச்சங்க விருது, நடிகர் சங்கம் வழங்கிய "கலைச் செல்வம்' விருது, சிறந்த பாடலாசிரியருக்காக "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகை வழங்கிய விருது மற்றும் பல தனியார் அமைப்புகள் வழங்கிய பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
 தமிழக அரசு வழங்கிய சிறந்த பாடலாசிரியருக்கான தங்கப் பதக்கம் விருது, கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது ஆகிய விருதுகளை எம்.ஜி.ஆர். ஆட்சிக்
 காலத்திலும், கலைவித்தகர் விருது, கபிலர் விருது (1 லட்சம்) ஆகிய விருதுகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் பெற்றிருக்கிறேன்.
 எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அரசவைக் கவிஞராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறேன்.
 ஒவ்வொரு வாரமும் தொடரைப் படித்துவிட்டு திருவில்லிப்புத்தூர்க் கண்ணன், திருப்பூர் பாலமுருகன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஆலந்தூர் மோகனரங்கன், புதுச்சேரி பாரதி வசந்தன், விருகம்பாக்கம் மணிமாறன், நீதிபதி புகழேந்தி, ஆரூர் புதியவன், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அ.பிச்சை ஆகியோர் தவறாமல் பாராட்டுவார்கள். சென்ற வாரம் தமிழருவி மணியன் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 பாரம்பரியம்மிக்க பத்திரிகையான தினமணியில் நெடுந்தொடர் எழுதுவதற்கு அனுமதியளித்த தினமணி ஆசிரியர் குழுவினருக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வாசக நண்பர்கள். வாழ்க தினமணி பத்திரிகை குழுவினர். மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி முடிப்பதற்கு முன் "ஒன்று எங்கள் ஜாதியே' என்ற படத்தில் கங்கை அமரன் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய நான் எழுதிய ஒரு பாடலின் பல்லவியை மட்டும் சொல்லி மங்களகரமாக முடிக்கிறேன்.
 "எண்ணிவரும் எண்ணமெல்லாம்
 கூடிவரும் வேளையிது
 இன்பம் பொங்கப் பாட்டுப் படிங்க - நெஞ்சில்
 மின்னிவரும் ஆசைக்கெல்லாம்
 மேடையொன்று போடும் காலம்
 வந்ததென்று துள்ளிக் குதிங்க
 நம்ம கூட்டத்துக்கு எதிர் காலமுண்டு
 நம்ம கொள்கையிலே புது வேகமுண்டு
 என்றும் உண்மையுண்டு நேர்மையுண்டு
 நீதியுண்டு'.
 (நிறைவு பெற்றது)
 படங்கள் உதவி: ஞானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com