சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 34: திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழா!

கருடன்' மஹாவிஷ்ணுவின் வாகனம். ஐந்து வயது சிறுமியாக என் பெரியம்மா ராணி அம்மையாரின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 34: திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழா!

'கருடன்' மஹாவிஷ்ணுவின் வாகனம். ஐந்து வயது சிறுமியாக என் பெரியம்மா ராணி அம்மையாரின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கருடன் அங்குதான் எனக்கு அறிமுகமானார். "முதலையின் வாயில் தன் கால் மாட்டிக் கொள்ள ஓங்கி குரல் கொடுத்து நாராயணா என்று பிளிறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் ஏறி விரைந்து வருகிறார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கருட பகவான் மின்னல் வேகத்தில் பறக்க, கஜேந்திரனின் மோட்சத்தைப் பார்க்க ஆசைப்பட்டு வந்த சிவன், இந்திரன், பிரம்மாவின் வாகனங்கள் கருடனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்க, கருடன் தன் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டான். தக்க நேரத்தில் கஜேந்திரன் மோட்சம் அடைந்தான். பிற தெய்வங்கள் அந்த அரிய காட்சியைக் கண்டு களித்தனர்'' என்று முடித்துக் கொண்டார் என் பெரியம்மா.
அந்த சிறு வயதில் கருடனின் உருவமும், வேகமும் என் மனதில் பசையாய் ஒட்டிக் கொண்டன. கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கதாகாலட்சேபம், எட்டு வயது சிறுமியாக, சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தேன். சுவாமிகள் கதை சொல்லத் தொடங்கினார். ""அமிர்தத்தைக் கடைந்தெடுக்கும் தருணம், அதற்கு மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த மலையைப் பெயர்த்து கொண்டுவர தேவர்களும், அசுரர்களும் முயன்றும் அதை அவர்களால் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் கருடன் விஷ்ணுவை சுமந்து பறந்து கொண்டிருந்த நிலையிலும், அந்த மலையை மிக எளிதாகப் பெயர்த்து அதை சமுத்திரத்தில் எறிந்தார். அதனால் அவர் சோர்வடையவில்லை. வீரியத்திற்கு அவர் ஒரு உதாரணம்'' என்றார்.
அவ்வளவுதான் என் மனதில் மேலும் பீடம் போட்டு கருட பகவான் அமர்ந்து கொண்டார். இராமாயணத்தில், இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கிறது, இந்திரஜித் விட்ட நாக அஸ்த்திரத்தின் பாதிப்பால், இராமனும் லஷ்மணனும் மயங்கி சாய, அங்கே வந்த கருடனின் பார்வை பட்டதுமே, நாகத்தின் பாதிப்பு விலக, அந்த புண்ணிய புருஷர்கள் காப்பாற்றப்பட்டனர். இப்படி கருடனைப் பற்றிய நிகழ்வுகளைக் கேட்டபின், கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனம் ஆனார் என்பதை என் பதினைந்தாவது வயதில் அறிந்துகொள்ளத் துடித்தேன்.
புராண ஏடுகளைப் புரட்டினேன். ஆகா இந்த கருடன் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென்கிழக்கு நாடுகளின் காவியங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறான். புராணங்களின் கூற்றுப்படி கருடன் காஷ்யப முனிவருக்கும் அவருடைய பத்தினி (Vinata) விநதாவுக்கும் மகனாக அவதரித்தார். விநதாவுக்கு (Kadru) கட்ரு என்றொரு சகோதரி இருந்தாள். அவளுடைய பிள்ளைகள் பாம்புகளாக இருந்தன. 
கருடனின் வலிமையை உணர்ந்த கட்ரு தன்னுடைய சகோதரியையே சிறை எடுத்தாள். அவளை விடுவிக்க வேண்டும் என்றால் கருடன் அமிர்த கலசத்தை சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரவேண்டும். அதைத் தன் பிள்ளைகள் குடித்து அழிவில்லாத நிலையையும், இணையில்லா பராக்கிரமத்தையும் அடையவேண்டும் என்று விரும்பினாள். தாயைக் காப்பாற்ற சுவர்க்கம் சென்று பெரும் போர்புரிந்து அமிர்த கலசத்தைக் கருடன் கைப்பற்றினான். அமிர்தத்தைக் குடிக்கவேண்டும் என்று கருடன் எண்ணவில்லை. அதைத் தன் அன்னையை விடுவிக்க மட்டுமே பயன்படுத்த எண்ணினான்.
இந்த நிகழ்ச்சி விஷ்ணுவின் கவனத்தைக் கவர்ந்தது. கருடனைப் பார்த்து சொன்னார், அமிர்தத்தைக் குடிக்காமலேயே நீ அமரத்துவம் அடைவாய். இந்த அமிர்தத்தைக் கொடுத்து உன் அன்னையை மீட்டு விடு, ஆனால் அதை அந்த பாம்புகள் குடிக்காமல் பார்த்துக்கொள் என்றார்.
கருடன் தன் அன்னையை விடுவித்தபின் விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அமுதத்தைக் குடிக்க வந்த பாம்புகளை, போய் உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டான். அந்த சமயம் பார்த்து இந்திரன் வந்து அமுத கலசத்தைக் கவர்ந்து செல்ல, அவனோடு கருடன் போர் புரிந்தான். அப்படியும் இந்திரன் அமுத கலசத்தோடு தப்பி ஓடிவிட்டான்.
கீழே சிந்திய சில அமுதத் துளிகளை நக்கி பாம்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொண்டன. அமுதத்தின் வீரியம் தாங்காமல் அவைகளுடைய நாக்குகள் பிளந்து, அன்று முதல் பிளவுபட்ட நாக்குகளோடு ஊர்கின்றன.
விஷ்ணுவின் நெஞ்சத்தைக் கருடனின் வீரமும், தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய பண்பும் கவர்ந்துவிட, கருடனை பட்சிகளின் தலைவனாக்கியதோடு, அவனைத் தன் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார்.
இளம் மங்கையாக திருமணம் புரிந்து என் கணவருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் அதாவது திருவரங்கத்துக்குள் ரங்கநாதரைப் பார்க்கச் செல்லும்பொழுது, கையில் அமிர்த கலசத்தோடு, உலகிலேயே பெரிய கருடனாகக் காட்சி கொடுத்த கருடாழ்வாரைக் கண்டு மதிமயங்கினேன். கருடன்தான் ரங்கவிமானத்தை சத்தியலோகத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வந்தார். ஸ்ரீராமர், ரங்கநாதரை வணங்கி, அவரைப் பூஜித்து வந்தார். பிறகு அந்தச் சிலையை விபீஷணருக்குப் பரிசாக அளித்தார்.
திருப்பதி பிரம்மோர்ச்சவத்தில் ஐந்தாவது நாளான கருடசேவைக்கு சென்றிருந்தேன். அந்த நாளில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு கருட ஆழ்வாரின் மீது மலையப்பசாமி பவனி வருவதைக் காண இப்படிப்பட்ட கூட்டமா என்று திகைத்தேன். மகர கண்டி, சாலிக்கிராம மாலை, லஷ்மி ஹாரம், வைரகிரீடம், உள்ளங்கை அளவு மரகதம் நெஞ்சை அலங்கரிக்க, பல ரத்தின ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் மீது மலையப்பசாமி அமர்ந்து மேல்நோக்கி நீண்டிருக்கும் அவருடைய உள்ளங்கைகளில் தன் திருப்பாதங்களைப் பதித்து உலாவரும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.
விஷ்ணுவின் திருப்பாதங்கள் மண்ணில்பட்டு புண்படக்கூடாது என்று கருடாழ்வார் எப்பொழுதும் அவற்றைத் தன் உள்ளங்கைகளில் தாங்குவாராம்.
இப்படி சிறுவயது முதல் இன்றுவரை கருடாழ்வாரின் மகிமைகளைக் கேட்டும், படித்தும், கண்டும் உள்ளம் நெகிழும் என்னை எப்படி திருநாங்கூர் 11 கருடசேவை ஈர்த்தது என்பதை அடுத்தவாரம் சொல்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com