Enable Javscript for better performance
சக்கைப்போடு போடும் நூத்துக்கு முட்டை!- Dinamani

சுடச்சுட

  
  sk6

  "நூத்துக்கு முட்டை'. இந்த சொலவடையை பள்ளியில் படிக்கும் போது அனைவருமே கேட்டிருப்போம். சிலர் நிஜமாகவே "நூத்துக்கு முட்டை' வாங்கி ஆசிரியரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்தப் பள்ளியின் "முட்டை' நாட்களை மறக்காமல், தொடங்கியிருக்கும் உணவு ஸ்டால்களுக்கு "நூத்துக்கு முட்டை" என்று நாமம் சூட்டுவார்களா..?
   கோவையில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் ஹரிஹரன், குமரேஷ் தங்களது உணவு ஸ்டால்களுக்கு "நூத்துக்கு முட்டை' என்ற பெயர் வைத்து அழகு பார்ப்பதுடன் வெற்றிகரமாகவும் நடத்திவருகிறார்கள். இத்தனைக்கும் இந்த இருவர் பொறியியல் பட்டதாரிகள். உணவு ஸ்டால்களை நடத்துவதில் எந்த தயக்கமும் இல்லை. பிறர் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமும் இல்லை. கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரியின் வளாகத்தில் "நூத்துக்கு முட்டை' என்று மூன்று ஸ்டால்கள் தொடங்கி காலை எட்டு முதல் இரவு ஒன்பது வரை செயல்படுகின்றன.
   கோழி முட்டையை அடிப்படையாக வைத்து நூறுக்கும் அதிகம் வெரைட்டி சிற்றுண்டிகளை சமைத்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளை இந்த "நூத்துக்கு முட்டை' வளைத்துப் போட்டிருப்பதில் "நூத்துக்கு நூறு' வாங்கியிருக்கிறது. பத்து முதல் ஐம்பது ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முட்டை அயிட்டங்கள் இந்தக் கல்லூரி மாணவர்களிடையே செம ஹிட்.
   மாணவிகளுக்கென்று தனி ஸ்டால். அங்கு மாணவர்கள் வர முடியாது. பிரியாணி, ஃபிரைட் ரைஸ் போன்ற வழக்கமான அயிட்டங்களும் உண்டு. "டேக் அவே' பாணியில் செயல் படுவதால், தட்டில் வாங்கி நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும். கடையின் பாலிசி "இன்று ரொக்கம்.. நாளையும் ரொக்கம்' என்பதுதான்.
   "வீட்டில் பொறியியல் படிக்கணும்னு யாரும் எங்களை கட்டாயப்படுத்தலை. நாங்களா விருப்பப்பட்டு படித்தோம். அதுமாதிரி விருப்பப்பட்டு "நூத்துக்கு முட்டை' யைத் தொடங்கினோம். அதில் எங்களுக்குத் திருப்திதான். இந்த முயற்சியால், வாழ்வாதாரம் உறுதியாகிவிட்டது. சொந்தக் காலில் நிற்கிறோம். நாலு பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறோம். இதைவிட திருப்தி வேணுமா என்ன?
   "படிக்கும் போதே பிறருக்காக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தித் தருவது, கேட்டரிங் வசதிகள் செய்து கொடுப்பது, விளம்பர போர்டுகள் வைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தோம். வருகிற வருமானம் கைச் செலவுகளுக்கு போதுமானதாக இருந்தது. சொந்தமாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கண் முன்னே "முட்டை' வந்து நின்றது. முட்டையை வச்சு முழுசா வாழ்க்கையைத் தொடங்குவோம் என்று முடிவு செய்தோம். பங்காளி குமரேஷுக்கு சமைக்க நன்றாகவே வரும். எனக்கு ஜுஸ் வகைகள் தயாரிக்க வரும். கல்லூரி மாணவர்கள் நடத்திய பொங்கல் விழாவில் குமரேஷ் உண்டாக்கிய "முட்டை மாஷ் அப்', எனது ஜூஸ்சுக்கு செம வரவேற்பு. அதுதான் சொந்தமா ஸ்டால் போட தைரியம் கொடுத்தது. நண்பர்களின் உதவியால் கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் ஸ்டால் போட்டோம். நட்பு வட்டம் பெரிதானது. நிரந்தரமாக ஸ்டால் போடலாம் என்று முடிவு செய்து ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டோம். பல முயற்சிகளுக்குப் பிறகு நிர்வாகத்தினர் அனுமதித்தார்கள். வீட்டில் பண உதவி பெற்று ஸ்டால் போட்டு ஒரு சுபதினத்தில் "நூத்துக்கு முட்டை' என்று ஸ்டாலுக்குப் பெயரை வைத்தோம்.''
   "ஆம்லெட் ரோல்' எனக்குத் தெரிந்து எங்கள் ஸ்டாலை விட்டா கோவைக்கு உள்ளேயும் வெளியேயும் வேறு எங்கேயும் கிடைக்காது. ஏன்னா அது எங்க சொந்த தயாரிப்பு.
   "முப்பது வகை மில்க் ஷேக்குகள் எங்கள் ஸ்டால்களில் கிடைக்கும். மில்க் ஷேக்குகளுக்கென்றே தனி ஸ்டால் போட உள்ளோம்'' என்கிறார் நூத்துக்கு முட்டை ஸ்டால்களின் உரிமையாளர்களில் ஒருவரான ஹரிஹரன்.
   - பிஸ்மி பரிணாமன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai