குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு!

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகுக்கு வந்துள்ளார்களே தவிர உங்களில் இருந்து அல்ல'' என்பது கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்
குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு!

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகுக்கு வந்துள்ளார்களே தவிர உங்களில் இருந்து அல்ல'' என்பது கலீல் கிப்ரானின் கவிதை வரிகள். இந்த வரிகள் என்னை, அலை பாய்ந்து திரிய வைத்தது. அப்படி எனக்குள் தோன்றியதை, நூல் பிடித்து எழுதி சேர்த்தேன். இன்னொரு பக்கம் இந்த வாழ்க்கையின் மீது குழந்தைகள் கொண்டிருக்கும் கோபத்தின் வெளிப்பாடாகவும் இதை முன்னெடுத்து வந்தேன். ஸ்டீல்ஸ், படத்தின் மூட் எல்லாம் பார்த்தால் உங்களை சீரியல்த்தனம் தொற்றிக் கொள்ளலாம். ஆனால் முழுக்க முழுக்க தற்கால சூழலுக்கு தேவையான ஒரு விஷயம் இது. குழந்தைகளின் உலகத்தை படம் பிடிக்கும் விதமாக "எழுமின்' படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் வி.பி. விஜி. "உறுமின்' படத் தயாரிப்பின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர். அழுந்த காலூன்றும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
 "எழுமின்'.. தற்கால சமூகத்துக்கு தேவையான அக்னி வார்த்தை....
 "விவேகானந்தரின் மரித்துப் போகாத வாழ் தத்துவங்களில் எழுமின் முக்கியமானது. அதை வல்லமை மிகுந்த ஒரு சினிமாவின் ஊடாக எடுத்து வருகிறேன். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களின் விறு விறு சம்பவங்கள்தான் கதை களம். இப்போது இருக்கிற சூழல்ல யாரும் விடுமுறையைக் கொண்டாடுவது இல்லை. நகரத்துக் குழந்தைகள் என்றால் சம்மர் கோர்ஸ் போய் விடுகிறார்கள். முன்னாடி விடுமுறை என்றாலே, ஊரில் இருக்கிற உறவினர்கள் வீட்டுக்குப் போவது, பொன்வண்டு, தும்பி, ஈசல் பிடிப்பது, தீப்பெட்டில நூல் கட்டி தூரமா நின்று பேசுவது, பட்டம் விடுவது, ஆற்றில் குளிப்பது, நீச்சல் பழகுவது, சைக்கிள் கற்றுக் கொள்வது என்று பல அனுபவங்கள் கிடைக்கும். முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம்னு எல்லாவற்றையும் அனுபவிக்கும் அந்தப் பருவத்தில்தான் இன்னொசென்ஸ் தொலையும். சமூகம் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். அந்த 12 வயதுப் பசங்களின் நல்ல குணங்களையும், ஒற்றுமையையும் படத்தில் சொல்லியிருக்கிறேன். எல்லார் வாழ்க்கையிலயும் மறக்க முடியாத அந்தப் பருவத்தை உணர்த்தத்தான், விவேகானந்தரின் வல்லமை மிகுந்த "எழுமின்' என்பதை தலைப்பாக வைத்தேன்.
 கதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...?
 நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.... ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. அப்பாக்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லை. அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, அநாவசியமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். அப்படி சிலர் தங்கள் இலக்குகளை அடைந்து புது வரலாறு படைக்கிறார்கள். இப்படித்தான் கதை போகும்.
 பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...?
 குழந்தைகளின் உலகம் அப்பழுக்கு இல்லாத பிராயம். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லாரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்குத்தானே? ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே? மரக்கிளை தூளியாவது... சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குழந்தையால்தான்... குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்.
 விவேக், தேவயாணி என படத்துக்கு இன்னொரு கலர் இருக்கு...
 விவேக் சார் சொன்னால், அது குழந்தைகளுக்கு பிடிக்கிறது. இளைஞர்களை கவரும் விதமாக வளர்ந்து வருகிறார். அப்துல்கலாமின் உறுதியான கொள்கைகளை எங்கெங்கும் எடுத்துச் செல்லும் விதமாக உருவாகி இருக்கிறார். அவர் இந்தப் படத்துக்கு அதீத தேவையாக இருப்பார் என்று தோன்றியது. அணுகி, கதை சொன்னேன். இந்த சமயத்தில் எனக்கு தேவையான சினிமா என்று உடனே உள்ளே வந்து விட்டார். தேவயாணியும் அப்படித்தான் தேர்வாகி உள்ளே வந்தார். குழந்தைகளின் திறமைகளை முன்னெடுக்கும் விதமான கதை என்பதால், இதற்கு எனக்கு நடிகர்களாக இருக்கும் சிறுவர்கள் தேவைப்படவில்லை. கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங், சிலம்பம் என தற்காப்பு கலைகளில் ஆர்வம் உள்ள சிறுவர்களை தமிழகம் முழுவதும் தேர்வு செய்து, அவர்களில் சிறந்தவர்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறேன். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களில் ஐந்து பேரே, இதற்கு தேர்வாகி வந்தனர். ஒளிப்பதிவுக்கு கோபி ஜெகதீஸ்வரன், படத்தொகுப்புக்கு கார்த்திக் ராம், இசைக்கு சணேஷ் சந்திரசேகர் என நல்ல டீம் கிடைத்தது. அனைவரின் ஒத்துழைப்பில் நல்ல படம் கைக்கு வந்திருக்கிறது. அனைவருக்கும் பெரும் நன்றி.
 - ஜி.அசோக்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com