மலையெல்லாம் நீலம்!

துலீப் மலர்களுக்காக பலரும் நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறார்கள். ஆண்டுதோறும் மலரும் துலீப் மலர்களுக்காக அந்த நாட்டிற்கு செல்லும் போது,
மலையெல்லாம் நீலம்!

துலீப் மலர்களுக்காக பலரும் நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறார்கள். ஆண்டுதோறும் மலரும் துலீப் மலர்களுக்காக அந்த நாட்டிற்கு செல்லும் போது, நமது குறிஞ்சி மலருக்காக யாரும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்தால் இல்லை என்ற வருத்தமான பதிலைதான் சொல்ல வேண்டும். உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் பார்க்க விரும்பும் இந்த மலர், இங்கே ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து, மலர்ந்து, பார்க்கும் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
சரி, இந்த குறிஞ்சி மலர் எங்கே எல்லாம் வளரும் அல்லது பூக்கும்? 
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசமே நீல நிறத்தில் பட்டாடை உடுத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றும். குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. "ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' என்பது அவற்றின் தாவரவியல் பெயர். மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக் குறிஞ்சி மலர் அதிகம் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி அல்லது நீலமலை என்றும், இந்த ஊட்டியே பெயர் பெற்றது என்று கூறுவோரும் உண்டு.
இந்த குறிஞ்சி மலரில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் உண்டு. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் 150 வகைகள் வரையில் நமது இந்திய திரு நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே காணலாம். 
பழந்தமிழர்களின் நிலவகையில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கியதுடன் இந்த குறிஞ்சி என்ற சொல்லும், மலரும் பின்னி பிணைந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகளை கூறமுடியும். தொல்காப்பியம், அகநானூறு, குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு, அகநானூறு ஆகியவைகளில் இந்த பெயர் அல்லது பூ குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதி வாசிகளும் நீலமலையில் குறிஞ்சிப் பூ சுழற்சியை வைத்து தங்களது வயதை கணக்கிடுகின்றனர் என்று சரித்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் குறிப்பாக நீலகிரியில் உள்ள "தோடர்' இன மக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்றும், மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் "பளியர்' என்ற மற்றொரு பழங்குடியினர் தங்கள் வயதை இப்படிதான் கணித்துக் கொள்வார்களாம். 2006 -ஆம் ஆண்டில் பூத்தது. இந்த வருடம் (2018) ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும். 
சுற்றுலாதுறையின் பல்வேறு சங்கங்களில் தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் இருப்பவரான மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் இந்த குறிஞ்சி மலர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசுகிறார், ""நான் பலமுறை இந்த மலர்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை எனக்கு இந்த குறிஞ்சி மலர்கள் தந்திருக்கின்றன. என்னைக் கேட்டால் குறிஞ்சி மலர் கூட ஒருவகையான அதிசயம்தான். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மலரும் மலர் அதிசயம் இல்லாமல் வேறு என்ன? அதனால் நமது சுற்றுலாத் துறையினர் இந்தப் பூக்களைப் பற்றி அதிகமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்'' என்றார். 
ஊட்டியிலேயே வாழும் செல்வி கூறுகையில், "நான் இந்த குறிஞ்சிப் பூக்களை ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். இதிலிருந்து என் வயதை நீங்கள் குத்து மதிப்பாக தெரிந்து கொள்ளலாம். சென்ற முறை இந்த குறிஞ்சி மலர்கள் மலர்ந்த போது தினமும் அதை பறித்து வந்து என் வீட்டில் பலமுறை அலங்காரமாக வைத்தேன். சென்ற முறை மலர்ந்த பூவை எனது புத்தகத்தில் நான் வைத்திருந்தேன். சிலவருடங்களுக்கு பிறகு அது காய்ந்தாலும் இருந்தது. பின்னர் ஒரு நாள் திடீரென்று அது காணாமல் போய்விட்டது. இந்த முறை மலரும் பூவை நான் பத்திரமாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com