பிடித்த பத்து: காலம் கை கொடுக்கும்.!

திரைப்பட விநியோகஸ்தர், கதை வசன பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு, தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார் :
பிடித்த பத்து: காலம் கை கொடுக்கும்.!

திரைப்பட விநியோகஸ்தர், கதை வசன பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு, தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார் :

பெற்றோர்: அம்மா பேரு வள்ளியம்மாள், அப்பா பேரு சுப்ரமணியம். இருவரும் எனது இரு கண்கள். அப்பா மிகவும் கண்டிப்பானவர், அன்பானவர், சிக்கனமானவர், ஈகை குணம் உள்ளவர். அவரது எண்ணம் உழைக்க கூடியவரே உயர்வார். எனது அம்மாவோ "ஊர் பிள்ளையை  ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது.அப்படிப்பட்டவர்களின்  மகனாக பிறந்தது நான் செய்த புண்ணியம்.  

பள்ளி: வண்ணாரபேட்டையில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் தான் எனது பள்ளிப் படிப்பு ஆரம்பம்.  பள்ளியில்  எல்லா போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசு பெறுவேன். அதுமட்டும் அல்லாமல் வீரபாண்டிய கட்டபொம்மன் போல் வேடமிட்டு எல்லாரது பாராட்டுகளையும் பெற்றேன். இதனால் சுற்றியுள்ள பல பள்ளிகளில் இருந்து அழைப்பு வர அங்கும் சென்று நடித்து காண்பித்தேன். என் பள்ளி நாட்கள் எனக்கு மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்.

குடும்பம்: எனது துணைவியார் மறைந்த கலாவதி  என் அக்கா மகள்தான். எந்த நேரமும் சினிமா சினிமா என்று நான் காலையில் கிளம்பினால் நடு இரவுவரை ஆகிவிடும். இதனால் குடும்பத்தை முழுமையாக கட்டிக்காத்து கரைசேர்தவர். பெரிய மகன் பரந்தாமன், தனியாக தொழில் செய்தாலும் பெரிய படங்கள் என்றால், என்னுடன் இருந்து பார்த்துக் கொள்வார். இளையவர் பிரபு. தாயாரின் மேல் அதிகமாக பாசம் உள்ளதால் தனது பெயரை கலாப் பிரபு என்று வைத்துள்ளார். சினிமா மீது அதிகமாக காதல் உள்ளதால் "சக்கரகட்டி', "இந்திரஜித்' படங்களை இயக்கியவர். இன்றுள்ள விஞ்ஞான தொழில் நுட்பங்களை அதிகம் தெரிந்தவர். மகள் கவிதா நட்ராஜன். என்னை பொருத்தவரை அவர்தான் எனது தாயார் என்று நான் நினைக்கிறேன். 

கலைஞர் கருணாநிதி: என் வாழ்க்கையில் பிரிக்கமுடியாதவர். எனது மகளின் திருமணத்திற்கு அவரை அழைத்தேன். 12 மந்திரிகளுடன் வந்திருந்து வாழ்த்தினார். அப்பொழுது சொன்னேன்  ""நீங்க ராஜாஜியை ஜெயிக்கிறீர்கள்'' என்று. ""நீங்க சொல்வது எனக்கு புரியலையே''  என்றார். ""நீங்கள் எல்லா காலத்திலேயும் எல்லாரையும் ஜெயித்து விட்டீர்கள். ராஜாஜி 93 வருடம் வாழ்ந்தார், பெரியார் 94 வருடம் வாழ்ந்தார்.  இவர்கள் இருவரையும் தாண்டி நீங்கள் வாழும் காலத்திலேயே ஜெயித்து வாழ்வீர்கள்'' என்று கூறினேன். என்னுடைய  வார்த்தையை ஆண்டவன் பலிக்க செய்து விட்டான். 94 முடிந்து பிறகுதான் அவர் மறைந்தார். என் வாழ்க்கையின் ஆசானாக அவரை என்றும் நினைத்து வாழ்கிறேன். 

டி.ராமானுஜம்: கலையுலகில் எனக்கு இரண்டு குருநாதர்கள் உண்டு. ஒருவர் டி.ராமானுஜம். மற்றொருவர் சிந்தாமணி முருகேசன்.  எல்லாராலும்  டி.ஆர். (ஈ.த.) என்று அன்பாக அழைக்கப்படும் இவர் எங்கள் குடும்ப உறுப்பினர் மட்டும் அல்ல தமிழ் திரை உலகின் தந்தை என்றும் கூறலாம்.  கலையுலகில் என்ன பிரச்னை வந்தாலும் நான் அவரைதான் நாடுவேன். என் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொடுத்தது கூட இவர்தான்.  அவர் இறந்த பிறகு அதே சேம்பர் வளாகத்தில் அவரது மார்பளவு திரு உருவசிலை நிறுவ போராடி அனுமதி வாங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நடிகர்கள்: கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று செய்ய வழி அமைத்துக் கொடுத்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அதற்கு பிறகு என் போற்றுதலுக்கு உரியவர்  ரஜினிகாந்த்.  "பைரவி' படத்தின் விநியோகஸ்தராக இருந்தபோது,  அந்த படத்தின் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனியின் "பைரவி' என்று நான் போட,  ரஜனிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்தை  அழைத்து, ""எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சீனியர் ஆர்டிஸ்ட் இருக்கும் போது என்னை "சூப்பர் ஸ்டார்' என்று போடுவது தவறாக இருக்கும். தயவு செய்து தாணுவிடம்   போடவேண்டாம்'' என்று சொல்லுங்கள் என்று கூறினார்.  சொல்லப்பட்ட  அடுத்த நாளே நான்   "பட்ங் ஞ்ழ்ங்ஹற்ங்ள்ற் ள்ன்ல்ங்ழ் ள்ற்ஹழ்'    ரஜனிகாந்த் என்று போட்டேன். நான் ஆத்மார்த்தமாக போட்டது இன்று நிலைத்துவிட்டது.  பலமுறை அவரது படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பளிதார். பல்வேறு காரணங்களால் நான் செய்ய முடியவில்லை. இழந்த எல்லாவற்றையும் வட்டியும் முதலுமாக "கபாலி' யில் என் ஆசை முழுவதும் தீர்த்து கொண்டேன். "யார்' படத்தின் 100 -ஆவது நாள் விழாவில் அடுத்து நான் தாணுவுக்குதான் படம் பண்ண போகிறேன் என்று மேடையிலேயே கூறினார். அப்போது  ""நீங்கள் விளம்பரங்களை அட்டகாசமாக செய்பவர். ரஜினி படத்திற்கு என்ன செய்யபோகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். ""வானத்தில் இருந்து செய்தியை அறிவிப்பேன்'' என்று கூறினேன். நான் சொன்ன ஆண்டு 1985. அதை 2016-இல்  நிறைவேற்றிவுள்ளேன். கமல் ஹாசனுக்கு நான் ரசிகனாக இருந்தவன்.  ""என் அப்பாவிற்கு அடுத்து எனக்கு தாணு சார் தான்'' என்று என்னை பெருமை படுத்தும் விஜய், நன்றியின் மறு உருவம் அஜீத். தம்பி சூர்யா என் மேல் மிகவும் பாசத்துடன் இருப்பவர்.  இப்படி எல்லா கதாநாயகர்களும்  என் மேல் பாசத்தை பொழிகிறார்கள். 

கோயில்: எனக்கு மொட்டை  அடித்து காது குத்தியது திருபோரூரில் உள்ள சுப்ரமணிய சாமி திருக்கோயில். நான் வாரத்திற்கு ஒரு முறை செல்லும் கோயில் திருவேற்காடு, கருமாரி அம்மன் ஆலயம். அங்கு ஒரு கல்யாண மண்டபம் கட்டி, அதை ஏ.ஆர். ரஹ்மான் திறந்து வைக்க, ஒரு பைசா கூட வாங்காமல் அங்குள்ள மக்களின் பயன் பாட்டிற்கு அதை நான் அளித்துள்ளேன். 

உணவு: தாய் கையால் கிடைக்கும் எதுவும்  அமிர்தம்தான். எனது தாயார் எங்களிடம் சாம்பார் சாதம் உள்ள ஒரு உருண்டையை கொடுப்பார். அதே போன்று பழையதை வைத்து இஞ்சித் துவையலோ அல்லது சுண்டக் கொழம்போ ஊற்றும் போது அது ஒன்றே போதும் என்று நாங்கள் நினைப்போம். அந்த அளவுக்கு அது சுவையாக இருக்கும். 

இடம்: பல நாடுகளையும்,  மக்களையும் நான் பார்திருந்தாலும், நயாகரா நீர்வீழ்ச்சியுள்ள பஃபேல்லோ நகரம்தான் நான் விரும்பும் நகரம். 

நாடும், தொழிலும்: என்னுடைய நாடு இந்தியா, என் மொழி தமிழ். என் தொழில் திரைப்பட தயாரிப்பு. என்னுடைய ஆத்மார்த்தமான படம் ஒன்றை நான் எடுக்க விரும்புகிறேன். இந்த நாட்டுக்கும், மானிடத்துவத்திற்கும்,   அடையாளமான ஒரு படத்தை உருவாக்க நினைக்கிறேன். அது உலக அளவில் பேசப்படும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படும்.  பல விருதுகளை கைபற்றக் கூடிய வாய்ப்பு இந்த படத்திற்கு கிடைக்கும். அதற்கான முயற்சியில் இறங்க காலம் எனக்கு கை கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com