புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகள்!

இயல், இசை, நாடகம்  என்ற மூன்று  தமிழுடன், "அறிவியல் தமிழ்' என்ற நான்காம் தமிழை  இணைத்தவர்   மணவை   முஸ்தபா.  ""ஆதித் தமிழனின் முதல் தமிழ்,   அறிவியல்  தமிழாகத்தான் இருந்தது. சங்க இலக்கியத்திற்கு
புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகள்!

இயல், இசை, நாடகம்  என்ற மூன்று  தமிழுடன், "அறிவியல் தமிழ்' என்ற நான்காம் தமிழை  இணைத்தவர்   மணவை   முஸ்தபா.  ""ஆதித் தமிழனின் முதல் தமிழ்,   அறிவியல்  தமிழாகத்தான் இருந்தது. சங்க இலக்கியத்திற்கு முன் வாழ்ந்த தமிழ் சமுதாயம்  இயற்கையுடன்  இயைந்த  அறிவியல்  சார்ந்த வாழ்க்கையைக் கொண்டிருந்தது.  பிறகு காலப்போக்கில்  பல்வேறு சமயங்களின்  தாக்கம்  வந்து   இயல்,  இசை,  நாடகம்  என்றானது''   என்று சொன்னவர்  மணவை முஸ்தபா.   

""நான் 44  ஆண்டுகள்  வாழ்ந்த சென்னை அண்ணாநகரில்  உள்ள  எனது இல்லத்தின்   ஒரு  பகுதி  என்றென்றும் அறிவியல் தமிழ் வளர்க்கும் அறிவியல் தமிழ் மன்றமாக மாற வேண்டும். தமிழ்ப்பணியை மேற்கொள்ளும் அறிஞர்கள் சென்னைக்கு வரும்போது இங்கு  தங்கி  தமிழ் வளர்க்க  எனது இல்லத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுவே எனது ஆவல்'' என்று மணவை முஸ்தபா சொல்லியிருந்தார்.  அவர்  மறைவிற்குப்  பின்   அந்த  கனவு என்ன ஆனது ?  மணவை  சேகரித்து  வைத்திருக்கும்  பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ்   நூல்களின்  கதி ..?

மணவை  முஸ்தபாவின்  தமிழ்க்  கனவை   நனவாக்கியிருக்கிறார்  அவரது மகன் செம்மல். ஆங்கில மருத்துவராக, ஆங்கில மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கும் பேராசிரியராக  இருக்கும் செம்மல், அண்மையில்  "தமிழ் இலக்கியத்தில்  அறிவியல்' என்ற  தலைப்பில் கனடாவில் டொரோண்டோ நகரில்  நடந்த கருத்தரங்கில் சொற்பொழிவாற்றி வந்துள்ளார். அங்கு கிடைத்த உற்சாகம் காரணமாக அறிவியல் தமிழ்  வளர்க்கும் முயற்சியில் உடனே மளமளவென்று இறங்கியும்விட்டார். 

செம்மல் மனம் திறக்கிறார்:

""தமிழ் சித்தர்களின் அறிவு நுட்பத்தை கண்டும் காணாமல் நாம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால்,  உலகம் அவ்வாறு இருக்காது. மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்கு தேவையான தரவுகள் தமிழ் சித்தர்களின் இலக்கியங்களில் உள்ளன.  திருக்குறள், வள்ளலாரின்  திருவருட்பா, தேவாரம், திருவாசகம்  இவற்றில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். தந்தை சென்ற வழியில்,  தினமும் அறிவியல் தமிழ் சார்ந்து புதிதாக சில

சொற்களை எழுத வேண்டும்.  இது நானே எனக்கு இட்டுக் கொண்ட கட்டளை. என் தந்தைக்கு நான் செய்யும் தொடர் சேவகம்.  அறிவியல் தமிழ் எழுதும்போது  அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்  உணர்வினை   எனக்குள் உணர்கிறேன்.   

எனக்குத் தெரிந்து   உலகில் 118 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.  இந்த மாபெரும்  சமுதாயம்  சிதறிய நிலையில்  வாழ்கிறது. பல்வேறு காரணிகளால் இந்த நிலை உருவானது. இருப்பினும் அறிவியல், தொழில் நுட்பம் மூலமாக இந்த நிலையை நம்மால் மாற்ற முடியும்.  இந்த நம்பிக்கையின் வெளிப்பாடே "மணவையார் தமிழ்ப்பாலம்'  எனப்படும் அறிவியல் தமிழ் மன்றம். 

இங்கு  இயங்கும்   "தமிழுக்கான வெள்ளை அறையில் , ரிக்கார்டிங்   தியேட்டர் , வீடியோ கான்ஃபெரென்ஸிங் வசதி  உண்டு.  இந்த   வசதிகளைப்   பயன்படுத்தி உலகில் எந்தப் பகுதியில் வாழும் தமிழரும் தங்களுடைய தமிழ் சார்ந்த கருத்துக்களை காலத்தால் அழியாத வகையில் பதிவு செய்திடலாம். தமிழ் அறிஞர்களுடன் கலந்துரையாடலாம். தமிழ் குறித்து விவாதிக்கலாம். சந்தேகங்களை  கேட்டு சரி  செய்து  கொள்ளலாம் .

எவையெல்லாம் தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகளை தாக்கி அழிக்கின்றனவோ தமிழுக்கு பாரமாக உள்ளதோ அவற்றை சரியாக அடையாளம் கண்டு அவற்றை நீக்க  ஓர் அமைப்பை  உருவாக்க வேண்டும் என்ற எனது முடிவுதான் அறிவியல் தமிழ் மன்றத்தின் தோற்றம்.   அறிவியல் பாடங்களை  ஓரளவு பயின்றவன். MBBS - மருத்துவம்,  உளவியலில் B.Sc, M.Sc, M.Phil, PhD, காது மூக்கு தொண்டை  மருத்துவத்தில்  DLO தேர்வு பெற்ற எனக்கு தமிழ் மீது தெளிவான  பார்வையும், புலமையும்  உள்ளதால் அறிவியல் தமிழ் மன்றத்தை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க விருப்பம்.   எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...  இன்னும் பத்து ஆண்டுகளில்  உலகின் மிகப்பெரிய தமிழ் அமைப்பாக இதனை உருவாக்குவேன். இந்த உலக உயிர்கள் நீரிலிருந்து தோன்றியது என்பது அறிவியல் உண்மை. அதைத்தான் "நீரின்றி அமையாது உலகு'  என்று வள்ளுவர் சொல்கிறார். 

இப்போது  மருத்துவ  உலகில்  "வலியை  உணராமல் இருக்கச் செய்யும்' மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வலியைக் குறித்து அது தரும் துன்பத்தைக் குறித்து அன்றே வள்ளுவர்  129 - ஆவது திருக்குறளான  "தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்று  எழுதியிருக்கிறார்.  அதில் மறைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை விளக்கி நூறு பக்க அளவில் "உள்ளாறும் ஆறாதே..' என்ற நூலை எழுதியிருக்கிறேன். 

"அறிவியல் அறிவியலாக மட்டுமே ஒரு பக்கம் இருக்கட்டும். பழைய இலக்கியங்கள் தனியாக மறு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டுமே...  ஏன் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கூற வேண்டும்'  என்றும் கேட்கலாம். அப்படி கேட்பவர்களுக்கு எனது பதில் இதுதான். அறிவியல் உண்மைகளுடன் ஒத்துப் போகக் கூடிய புதிய தொழில் நுட்பங்களைத் தேடுகின்ற ஓர் இளைய தலைமுறையை இன்றைய கல்வியாளர்கள் உருவாக்க வேண்டாமா? அது கல்வியாளர்களின் கடமை இல்லையா ?

பாரம்பரிய பெருமைகளுடன் இயைந்து பயணிக்கும் அறிவியல் எப்போதும் மனித இனத்திற்கு பாதுகாப்பானது. நமது முன்னோரின் இலக்கிய படைப்புகள் பாரம்பரிய பெருமைகளில் ஊறியவை.  அதை  வரும் தலைமுறைக்கு  அறியச்  செய்தால் , வளரும் பிள்ளைகள் அறிவியலில் அற்புதம் செய்வதுடன் பாரம்பரிய பெருமைகளையும் மதித்து நடப்பார்கள். அதற்கான முன்னோட்டமாக   "அயலானின் கடிதங்கள்'  என்ற தலைப்பில் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.

இறைவன் - தமிழ் - தந்தை  - இந்த  மூன்று  சக்திகளும் என்னை வழி நடத்தும் என்ற நம்பிக்கையில் இறங்கிய எனக்கு, கனடா, இலங்கை நாடுகளிலிருந்து கிடைத்த ஆதரவு முடுக்கிவிட்டுள்ளது. இந்த மன்றத்தின் சார்பாக, தமிழ்ப் பணி செய்து வருகின்ற தமிழ் அறிஞர்களை அவர்கள் வாழும் போதே கெளரவிப்பதுடன், அந்தத் தமிழ் அறிஞர்களை சர்வதேச தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் திட்டமும் உண்டு'' என்கிறார் டாக்டர் செம்மல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com