லேட்விய நாட்டு நாடோடி கதை: கரடியை மணந்த கிராமத்துப் பெண்!

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் ஏழைக் குடியானவன் ஒருவன் இருந்தான். பெண் குழந்தை  ஒன்றைப்  பெற்றுக் கொடுத்துவிட்டு அவனது  மனைவி இறந்து போனாள்.
லேட்விய நாட்டு நாடோடி கதை: கரடியை மணந்த கிராமத்துப் பெண்!

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் ஏழைக் குடியானவன் ஒருவன் இருந்தான். பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அவனது  மனைவி இறந்து போனாள். அவளும் வளர்ந்து அழகு மங்கையானாள்.  அவனது அருகில் சொந்தபந்தங்கள் யாரும் இல்லை.

தூரத்தில் இருந்த சொந்தங்களைப் பார்க்க  வேண்டுமானால் அடர்ந்த காடுகளின் வழியே பயணம் செய்துதான் அவர்களது ஊரை  அடைய வேண்டும்.

அப்படி ஒருமுறை அவன் உறவினர்  வீட்டில் இருந்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஆனால் காட்டு வழியில் வழி தவறி தடுமாறி நின்றபோது இரவு வந்துவிட்டது.  காட்டிற்குள்  சுற்றிச்சுற்றி  திரிந்து  வழி கண்டு  வெளிவர முயன்றபோது தற்செயலாக  ஒரு  சிறிய அழகிய அரண்மனை போன்ற வீட்டின் முன்னால்  வந்து நின்றான். வீட்டிற்குள் மெல்ல நுழைந்து கதவைத் தாண்டி, உள்ளே  நோக்கியபோது யாரும் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் திடீரென்று அவனுக்கு முன்னால் ஒரு பெரிய  கரடி பாய்ந்து வந்து நின்றது.
"" நீ  யார்?  உனக்கு என்ன வேண்டும்'' என்று அந்த கரடி அவனைப் பார்த்து  கேட்டது. 
"" உனக்கு  என்ன வேண்டும் சொல் முடிந்தால் உதவி செய்கிறேன்'' என்றது கரடி மீண்டும்.
""நான் என் உறவினர்  வீட்டில் இருந்து திரும்பி வருகிறேன்.  இந்த காட்டில் வழி தப்பிவிட்டது.  எப்படி வீடு போவது என்று தெரியவில்லை.  இன்று இரவுக்கு நான் இங்கே  தங்கிக் கொள்ளலாமா?''
"" ஓ, தங்கிக்கொள்ளலாமே . இங்கு என்னைத் தவிர, வேறு யாரும் இல்லை.'' 
கரடியால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த குடியானவன் அதற்கு நன்றி சொல்லி தங்க முடிவு செய்தான்.
கரடியோ கொஞ்சம்  உணவு கொண்டு வந்து கொடுத்து தானும்  உண்டு முடித்தது. பிறகு இருவரும் படுத்து உறங்கினார்கள். அவனுக்கு  ஆச்சரியம்.  ஒரு கரடி  எப்படி ஒரு  சொகுசான  வீட்டில் மனிதனைப் போலவே வாழ்கிறது. 
காலையில் எழுந்ததும் கரடி  அவனுக்கு காலை உணவு  கொடுத்து உபசரித்தது.  கரடிக்கு நன்றி சொன்ன அவன்  ""தான் வீடு திரும்ப வேண்டும்'' என்று தெரிவித்தான். கரடியும் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பியது.
அவனும் காட்டில் வெகுதூரம் நடந்து வெளியேற  முயன்றான். ஆனால் எவ்வளவோ தூரம் நடந்தும்  அவன் மீண்டும்    கரடியின் வீட்டிற்கு முன்னால் வந்து  நின்றான்.  கரடியும் அவனை வரவேற்று  அன்று  இரவும்  தங்க இடம் கொடுத்து  உணவும் கொடுத்தது. 
மறுநாள் காலை வீடு திரும்ப வேண்டி கரடியை வழி கேட்டான்.  "" உனக்கு வீட்டுக்கு வழி காட்டுவேன். ஆனால் ஒரு நிபந்தனை.  உன் மகளை  எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்'' என்றது கரடி.
குடியானவனுக்கு ஒரே கோபம், வெறுப்பு அந்த வீடு வசதியாக இருந்தாலும் ஒரு மனிதப் பெண் ஒரு கரடியோடு எப்படி வாழ்வது என்று மலைத்தான். இருந்தாலும் கரடியின் உதவி  இல்லாமல் அந்த காட்டைவிட்டு  தான் வெளியேறுவது இயலாத  காரியம் என்பதையும் உணர்ந்தான்.
மீண்டும் ஒரு முறை  அன்று முழுவதும் காட்டில் சுற்றிவிட்டு கரடியின் வீட்டிற்கே திரும்ப வந்து  சேர்ந்தான்.  காலையில் எழுந்தபோது கரடி, அவனது
மகளை  தனக்கு மனைவியாக்கும் படி வற்புறுத்தியது. குடியானவனுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. மகளை கரடியை மணந்து கொள்ளச் சொல்வது எப்படி என்று தவித்து நின்றான். இருந்தாலும் முடிவில் கரடிக்கு மகளைக் கொடுக்க ஒப்புக் கொண்டான்.  மகிழ்ச்சியில்  திளைத்த கரடி  மறுநாள் காலை பிரமாத உபசரிப்போடு வீட்டிற்குப் போகும் வழியையும்  சொல்லி அவனை அனுப்பி வைத்தது. 
வீடு திரும்பிய குடியானவனோ மகளிடம் நடந்தது அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னான்.  அனைத்தையும்  பொருமையாக கேட்ட  அவனுடைய மகளோ நிலைமையைப் புரிந்து கொண்டாள். 
""அப்பா, கரடி ஒரு விலங்குதான். இருந்தாலும் உங்களிடம் ஒரு மனிதனை விட மேலாகவே நடந்து கொண்டு இருக்கிறது. எனவே, அதனால் எனக்கு எந்த தீங்கும் நேராது என்பது நிச்சயம். நான் கரடியை மணந்து கொள்கிறேன்'' என்று அவள் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
மறுநாளே தந்தையும் மகளும் காட்டில் இருந்த கரடியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.  திருமணமும் நடந்தது. கரடியும் அந்த பெண்ணும் மிகவும் ஒன்றுபட்டு  மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினார்கள்.  அதைக் கண்டு மகிழ்ந்த குடியானவனோ சில நாள் அவர்களோடு தங்கி இருந்துவிட்டு தான் மட்டும் வீடு திரும்பினான்.
ஒரு நாள் இரவு  கரடியின் மனைவியான அந்தப் பெண்,  படுக்கையில் உறங்கிய தன் கரடி கணவனை கொஞ்சம் நிதானித்து  உற்றுப் பார்த்தாள். கணவனின் கரடித்தோல் போர்வைக்குள்ளே ஒரு மனித உடல் இருப்பதைக் கண்டாள்.
ஆச்சரியப்பட்ட  அவள்  தொடர்ந்து படுக்கையில் சில நாட்கள் கணவனை கவனித்து  பார்க்க முடிவு செய்து அப்படியே செய்தாள். அவளுடைய சந்தேகம் வலுக்கவே ஒருநாள் இரவு அறைக்கு வெளியே நின்று கதவுத் துளையின் வழியாக உள்ளே இருந்த கணவனைக் கவனித்தாள்.  கரடிக் கணவன் தன்னை மூடியிருந்த கரடிச்  சருமத்தை கழற்றி எறிந்து ஒரு முழு மானிடனாக பேரழகனாக வெளிப்பட்டதை பார்த்தாள்.  அவன் தலைமட்டும் கரடித் தலையாக நின்றது.
அந்த தலையையும் மனிதத் தலையாக மாற்றிவிடக் கூடுமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள்.
பிறகு  ஒருநாள் அந்த கரடி  ஆழ்ந்து  தூங்கிக் கொண்டிருந்தபோது அதன் காலடியில் கழற்றி போட்டு இருந்த அந்தக் கரடித்தோல் போர்வையை கொளுத்தி  எரித்துச் சாம்பலாக்கிவிட்டாள்.  அதன் விளைவாக படுக்கையில் இருந்த கரடிக் கணவன் எழுந்திருக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டான். அவன் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. 
அவனுடைய உடல் நிலையோ  இரண்டே  நாளில் மிகவும் மோசமானது. பெரும் துயரத்தில் ஆழ்ந்த அவளோ கதறி அழுதாள். அடுத்த மூன்று நாள்களும் அவன் மிகுந்த சிரமத்துக்கு ஆளானான்.
நான்காவது  நாள் விடிந்தது.  அங்கே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் கரடி கணவன்  மனித உருவில் ஒரு பேரழகனாக   வாலிபத் தோற்றத்தில் எழுந்து நின்றான். அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. தனது இரு கரங்களாலும் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டாள்.
அழுதவாறு தான் அவன் சருமத்தை எரித்துவிட்ட தவறுக்காக தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள்.  ஆனால் அவனோ கொஞ்சமும் கோபப்படாமல் அவளைத் தேற்றினான். 
தன்னை ஒரு கரடியாக ஒரு சூனியக்காரி  மாற்றி இருந்ததாகவும் அதனால் அவன்மேல் போர்த்தியிருந்த கரடியின் சருமம் நெருப்பில்  எரித்து சாம்பலாக்கப்படும்போது மீண்டும்  அவன்  பழைய மானிட  உருவத்தை திரும்பப் பெறுவான் என்று விதித்திருந்ததையும் அவளுக்குத் தெரிவித்தான். அந்தச்  சாபத்திலிருந்து அவள் தன்னையறியாமலே அவனைக் காப்பாற்றியிருந்ததற்காக அவளுக்கு அவன் நன்றி தெரிவித்தான்.
அடுத்து வந்த நாள்களில் அந்த  ராஜகுமார அழகனுக்கும்,  அந்த கிராமத்து குடியானவப் பெண்ணுக்கும்  ஊர் அறிய திருமண வைபவம் வெகு விமரிசையாக  நிகழ்ந்தது.  கணக்கற்ற  விருந்தினர்கள் வந்திருந்து விருந்துண்டு அவர்களை வாழ்த்திச் சென்றனர்.
காட்டில் இருந்த அழகிய வீடு இப்போது ஒரு அரண்மனையாக காட்சியளிக்க அதில் இளம் தம்பதிகளோடு பெண்ணின் தந்தையும் சேர்ந்து மூவருமாக இனிதே வாழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com