Enable Javscript for better performance
நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை!- Dinamani

சுடச்சுட

  
  vijai-andani1


  ""நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஆறாத வலிகள் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தைச் சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். . நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான் "கொலைகாரன்'. அடிக்கடி புழக்கத்தில் இருக்கிற வார்த்தைதான் அது. அப்படிப் பேர் வாங்கும்படி இந்த ஹீரோவுக்கு வந்த பிரச்னை என்ன? இதெல்லாம்தான்  படம்''  கதையின் உள்ளடக்கம் பேசி கரம் கொடுக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ். "லீலை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "கொலைகாரன்' கதையோடு வருகிறார்.

  * விஜய் ஆண்டனி என்றாலே எதிர்மறை தலைப்புதானா... எப்போதும் போல் வித்தியாசம் காட்டுகிறதே...
  நல்ல வேகம் காட்டுகிற சினிமா. அதற்கேற்ற தலைப்பு வேண்டும். விஜய் ஆண்டனி சாருக்கு கதை சொல்லி வந்து விட்டேன். அவர்தான் இரண்டு நாள்களுக்குப் பின் கொலைகாரன் டைட்டில் எப்படி இருக்கு... என்று செய்தி அனுப்பியிருந்தார். எனக்கு முதலில் இதில் உடன்பாடு இல்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பின் அவர் சொன்னதுதான் சரி என்று பட்டது. அப்படித்தான் இந்த தலைப்பு வந்து சேர்ந்தது. சமூக நலன், உண்மை, யாரிடமும் பார்க்காத பக்கங்கள் என இந்தப்படம் பேசும். சினிமாவில் மாற்றம் தேவைப்படும் சமயம் அதைச் செய்யத் தயங்கக்கூடாது என்று நினைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளைக் கடந்து விடுகிற மனசு, ஏதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும்.  அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம்  அதையே வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனைக் குழிக்குள் தள்ளி, கேட்காததைக் கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்தக் காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை. அதே சமயம் சமூக அக்கறையும் கலந்திருக்கும். 

  * இந்தக் கதையில் விஜய் ஆண்டனிக்கு பிடித்த அம்சம் என்ன....
  ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது.  அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.  எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை  அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான்  எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகின்ற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்துவது இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படி
  யோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.  ஒரு நல்ல சினிமாவுக்கான வியாபாரம் என ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டுச் செய்து முடித்திருக்கிறேன்.  

  * விஜய் ஆண்டனிக்கு இணையாக அர்ஜூன் பங்கும் கதையில் இருக்கும் போல....
  அர்ஜூன் சார் ஒரு கதையில் இருந்தால் இங்கே வெற்றி என்ற பரவலான பேச்சு உண்டு. அதற்காக மட்டுமே இல்லாமல், கதையில் ஒரு  கேரக்டர் வலுவானதாக இருந்தது. அதற்கு அவரைத்தான் யோசித்தோம். அவரை விட்டால் ஆள் இல்லை என இப்போது படத்தின் ரஷ் பார்க்கும் போது தெரிகிறது. அர்ஜுன் சார் அருமையான நடிகர். இதமான நண்பர். அவருடைய அனுபவத்தின் இடங்களை இந்தக் கதையில் நீங்களும் பார்க்கலாம். அவரைப் படம் முழுவதும் ரசிக்க நிறைய இடங்கள் உண்டு.  அவரே இயக்குநர் என்பதும் எனக்குப் பெரிய ப்ளஸ். 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இன்னும் உடம்பை அப்படியே வைத்துக் கொள்வதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார். அவரோடு இணைந்து செய்த இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கும் முக்கியமான படம்.  அனுபவங்களோடு நிற்கும் நடிகர்களோடு வேலை பார்ப்பதில் விஜய் ஆண்டனி சாருக்கு அவ்வளவு ஈடுபாடு. இருவரின் பங்குமே இந்தப் படத்துக்கு மிக முக்கியமானது. 

  * ஹீரோயின் யாரு... புது வரவா?
  ஆஷிமா என்று பெயர். தெலுங்கில் நல்ல பெயர் எடுத்திருக்கிற ஹீரோயின். மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வாங்கியவர். முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் கஷ்டம் புரிந்தவர். மேக்கப் போட்டு விட்டு காத்திருந்தாலும், நம்ம ஷாட் வர்றவரைக்கும் சுலபமாகக் காத்திருக்க முடியாது.  அந்தக் குறைபாடு இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு முகேஷ். இசை சைமன். எடிட்டர் ரிச்சர்ட். திலீப் சுப்ராயன் சண்டைப் பயிற்சி என எல்லோருமே ஆக்கப்பூர்வ சினிமாவுக்காகக் காத்திருப்பவர்கள். தயாரிப்பாளர் பிரதீப் இதன் முதல் காரணம். இவர்களின் பங்களிப்பில் இது அருமையான படம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai