காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!

தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி பல்வேறு காலகட்டங்களில் வருகை தந்து பாரதி, வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கதேவர் உட்படப்
காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!


இந்திய சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தவர் மகாத்மா காந்தி. குமரி முதல் இமயம் வரை அவர் கால்படாத இடமே இல்லை. அனைத்து மாகாணங்களுக்கும் சென்றார். சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றினார். அதன் விளைவாக அனைத்துப் பிரிவினரும் ஜாதி, மதம், இனம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி பல்வேறு காலகட்டங்களில் வருகை தந்து பாரதி, வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கதேவர் உட்படப் பல தலைவர்களைச் சந்தித்து உரையாடி சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் தந்தார். தென் ஆப்பிரிக்காவில் சந்தித்த தமிழ்நாட்டைச் சார்ந்த தில்லையாடி வள்ளியம்மை, வேதியப்ப பிள்ளை ஆகியோரும் சுதந்திர போராட்டக் களத்தில் காந்திஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகருக்கு மூன்று முறை சுதந்திரப் போராட்ட எழுச்சிக்காகவும்,  இலங்கை செல்வதற்காகவும் வந்துள்ளார். இது பற்றிய குறிப்புகள் தமிழ்நாட்டில் காந்தி என்ற நூலில் உள்ளன.
முதன் முதலாகத் தூத்துக்குடி மாநகருக்கு 27.03.1919 அன்று வருகை தந்துள்ளார். ரயில் மூலம் வருகை தந்த காந்திஜிக்கு  நகர மக்கள் சிறப்பான வரவேற்பினை தந்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். தூத்துக்குடி கீழுர் பகுதி மட்டக்கடை பஜார் அருகில் உள்ள கோபால்சாமி தெருவில் உள்ள எஸ்.ராஜகோபால் நாயுடு இல்லத்தில் அன்று இரவு தங்கியிருந்தார். மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் தென்இந்தியாவில் உள்ள ஆலயங்களையும், சமய மரபையும் புகழ்ந்துப் பேசினார். மறுநாள் காலை மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர், 8 ஆண்டுகள் கழித்து 06.10.1927-இல் வருகை தந்த காந்திஜி
பெரைரா தெருவில் உள்ள ஐ.எஸ்.

பெரைரா இல்லத்தில் தங்கினார். ஐ.எஸ்.பெரைரா இலங்கையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற குறிப்பு உள்ளது. அன்று மாலையில் வட்டக்கிணறு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஐ.எஸ்.பெரைரா தலைமை தாங்கினார். திலகர் தேசிய பள்ளி மாணவர்கள் கடவுள் வணக்கம் பாடினர். நகராட்சி மன்றத்தின் வரவேற்பு பத்திரத்தை அதன் தலைவர் ரோச் விக்டோரியா அளித்தார். காந்திஜியின் உரையை ராஜாஜியும், மாசிலாமணி பிள்ளையும் தமிழில் மொழிப் பெயர்த்தார்கள். "ஆங்கிலம் கற்பதற்கு முன் தமிழ் கற்க வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும்' என்றார். மேலும் திருக்குறளை மூலத்திலேயே படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், குறிக்கோளுடனும் தான் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழைக் கற்க தொடங்கியதை கூறினார்.


அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து 24.01.1934}ஆம் ஆண்டு தூத்துக்குடி வருகை தந்த காந்திஜிக்குப் பாளையங்கோட்டை பிரசன்ன விநாயகர் கோயில் முன்பு பூரண கும்ப மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. நகர மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

காரை விட்டு காந்திஜியால் இறங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் காந்திஜியை பார்க்க முண்டியடித்தனர். அன்று தூத்துக்குடி கீழுர் நாட்டுக்கோட்டை செட்டி தெருவில் இருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகியும், வழக்கறிஞருமான மு.சி. வீரபாகு வீட்டில் காந்திஜி தங்கினார். பின்னர் கடற்கரை தருவை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

இக்கூட்டத்தில் பேசிய காந்திஜி ""மூட நம்பிக்கையை விட்டுவிட வேண்டும். தீண்டாமையைத் துரத்த வேண்டும்'' என்றார். 

வழி நெடுக அலங்கார வளைவுகளும், ஒளி விளக்குகளும் இருந்தன. இவ்வளவு பெரிய அலங்கார ஏற்பாட்டை காந்திஜி விரும்பவில்லை. தன் உதவியாளரை அழைத்து இப்படி ஆடம்பரமாக ஏற்பாடு செய்தது தனக்குப் பிடிக்கவில்லை என்று கடிந்து கொண்டார். 

வழக்கமாக ஒவ்வொரு நாளும் தூங்கப் போவதற்கு முன் அன்றைய வரவு செலவினை பார்த்து ஒப்புதல் தருவது காந்திஜியின் வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகும். ஆனால் அன்றைக்கு 24.01.1934 பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்"" இவ்வளவு செலவினை ஏன் செய்தீர்கள். அதற்கான கணக்கினை தாருங்கள் அப்போது தான் ஆரம்பிப்பேன்'' என்றார். 

தங்களின் மீது உள்ள அன்பின் காரணமாக தூத்துக்குடி மக்களும், ஒலிபெருக்கி உரிமையாளர்களும் தங்களின் கைப்பணத்தில் இருந்து அவர்களாகவே செலவு செய்துள்ளார்கள். உரிய கணக்கினை இரவினில் தருகிறோம் என்று கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூறினர். அதை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்டு காந்திஜி கூட்டத்தில் பேசினார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்தபின் கணக்கினைப் பார்த்து சில திருத்தங்களைக் கூறினார். ""செலவு கணக்கைப் பார்த்து ஐந்தில் ஒரு பங்கை செலவழிப்பது நியாயமில்லை. பொதுப்பணத்தைக் கையாளுவதில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார். அன்று மு.சி.வீரபாகு வீட்டில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடாகி இருந்தது.

காந்திஜி சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே இரவு உணவினை உட்கொள்வது வழக்கம். எனவே அந்த விருந்தில் காந்திஜி சாப்பிடவில்லை எனத் தெரிகிறது. ஆனால் நிறைய பேர் கலந்து கொண்ட விருந்தினை கண்டு மு.சி.வீரபாகுவை அழைத்துப் பாராட்டி இந்த இல்லம் ஒரு தருமச்சாலை என்று பாராட்டினார். அன்று இரவு மு.சி. வீரபாகு வீட்டில் தங்கினார்.

மறுநாள் 25.01.1934 அன்று காலை 6 மணிக்கு போல்டன்புரம், சிவந்தாகுளம் சென்று சேரிகளையும், அங்குள்ள மக்களையும் சந்தித்தார். அப்பகுதியில் இருந்த படுக்கை போன்ற நீள கல்லில் அமர்ந்தார் என்று கூறுவதும் உண்டு. 
பின்னர் சிவந்தாகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றார்.

காந்தி வந்ததால் காந்தி விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் பண்ணையார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்டதாக இருக்கிறது. பின்னர் மீண்டும் பிரசன்ன விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 6.50 மணிக்கு எட்டையாபுரம் புறப்பட்டுச் சென்றார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது ரோச் விக்டோரியா, வடிவேல் நாடார், காசுக்கடைச் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்து அளித்தனர்.

காந்திஜியின் வருகை  தூத்துக்குடி மாநகரில் சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகத்தை ஏற்படுத்தியதோடு அதிகமானோரை பங்கு பெறச் செய்தது. காந்தியின் மீது கொண்ட அன்பினால் மக்கள் பலர் எளிய வாழ்க்கையைப் பின்பற்றினர். அவரது உபதேசங்களை மனதில் கொண்டு வாழ்ந்தனர். காந்திஜி மறைந்த போது தங்களின் அன்பின் அடையாளமாக நூற்றுக்கணக்கான அன்பர்கள் மொட்டை அடித்துத் தனது அஞ்சலியை செலுத்தினர்.

தூத்துக்குடிக்கு மூன்று முறை வந்த போது காந்திஜி தங்கிய வீடுகளில் முதன்முதலாக காந்திஜி வந்து தங்கிய வீடான தெருவில் உள்ள வீடு மட்டுமே இன்றைக்கும் அப்படியே உள்ளது. உரு மாறாமல் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மற்றைய வீடுகளான மு.சி.வீரபாகு பெரைரா வீடுகள் பழைய நிலைமையில் இருந்து மாறிவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com