தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக்

ஆட்சியராக இருந்த கால கட்டத்தில் ஆற்று மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு, அசுத்தம் செய்வதற்கும் அப்போதே  தடை விதித்தார். 
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக்


ஆங்கில ஆட்சியர் ஒருவருக்கு  நெல்லை கிராமத்து விவசாயிகள் நன்றி தெரிவித்து விழா எடுத்து கொண்டாடி இருக்கிறார்கள்.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்தவர்களில் ஆர்.கே.பக்கிள். 1866-ஆம் ஆண்டு முதல் 1868-ஆம் ஆண்டு வரை மற்றும் 1870- ஆம் ஆண்டு முதல் 1874- ஆம் ஆண்டு  வரை திருநெல்வேலி ஆட்சியராக பக்கிள் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் செய்த சேவையால் இன்றும் விவசாயிகள் அவரை மறக்காமல் உள்ளனர்.  

இவர் ஆட்சியராக இருந்த கால கட்டத்தில் ஆற்று மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு, அசுத்தம் செய்வதற்கும் அப்போதே  தடை விதித்தார். 

மேலும் பக்கிள் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த (இன்று தூத்துக்குடி பிரிந்ததுள்ளது தனி மாவட்டம்) திருநெல்வேலி மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இன்றும் அவரது பெயரை தாங்கி நிற்கின்றன. அந்த வகையில் பக்கிளால் கட்டப்பட்டது தான் ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு.

தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்த பக்கிள் மேற்கொண்ட முயற்சியால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தடுத்து வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்களை உருவாக்கி, அதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை வளமாக்கினார் பக்கிள்.

கடந்த 1874-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாமிரபரணி தண்ணீர் பெட்டை குளத்தைக் கடந்து வடகால் வழியாக தூத்துக்குடி வரை பாய்ந்தோடியது. பொட்டல்காடாக இருந்த தங்கள் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டுவந்து, விவசாயப் பூமியாக மாற்றிய ஆங்கிலேயே ஆட்சியர் ஆர்.கே.பக்கிளுக்கு நன்றி சொல்லும் முப்பெரும் விழாவை  கிராம மக்கள் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள். இதனையொட்டி ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும்  பெட்டைகுளம் கரையில் திரண்டு தாமிரபரணி நதிநீருக்கு வழிபாடு நடத்தியுள்ளனர்.  அங்குப் பெண்கள் பொங்கலிட்டு தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். 

பக்கிள் பெயரில் கல்வெட்டு: தொடர்ந்து விவசாயிகள் சங்க வளாகத்தில் 
ஆர்.கே.பக்கிள் திரு உருவ படத்தையும், கல்வெட்டையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ""144 ஆண்டுகளுக்கு முன் வெறும் பொட்டல்காடாக இருந்த எங்கள் பகுதியை தாமிரபரணியில் இருந்து வழித்தடம் அமைத்தும், குளங்களை ஏற்படுத்தியும், செழிப்பாக மாற வைத்தவர் ஆங்கிலேய ஆட்சியர் பக்கிள் துரை. அவர் மேல் கொண்ட விசுவாசத்தினால், எங்கள் சுற்று வட்டார கிராமங்களில் பலரும் தங்களின் குழந்தைகளுக்குப் பக்கிள் எனப் பெயரிட்டுள்ளனர். சிவத்தையாபுரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் போன்ற கிராமங்களில் இன்றைக்கும் நிறைய பக்கிள் துரைகள் இருக்கிறார்கள்.  இன்றும் நாங்கள் அவரை மறக்கவில்லை. நாங்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் கிராம மக்கள் ஒன்று கூடி அவருக்கு நன்றி விழா எடுத்துள்ளோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com