Enable Javscript for better performance
சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 63: புத்தாண்டை வரவேற்கும் திருவிழா- Dinamani

சுடச்சுட

  

  சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் 63: புத்தாண்டை வரவேற்கும் திருவிழா

  By - சாந்தகுமாரி சிவகடாட்சம்  |   Published on : 15th April 2019 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk8

  "தோல்வியின் அர்த்தம் வெற்றி"

  - ஜப்பானிய பழமொழி

  உலக நாடுகளில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஆனந்தமயமான, செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கே ஆசைப்படுகின்றனர். இறந்தகாலம் கடந்துவிட்டது, நிகழ்காலம் ஓடிக்கொண்டிருக்கிறது, எதிர்காலமானது எதிர்பார்த்தபடி அமையுமா என்கின்ற ஏக்கம் மனிதர்களின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு ஜப்பானியர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், முன்னோர் செய்த சில சடங்குகளையும், வழிமுறைகளையும் இன்றளவும் ஜப்பானிய மக்கள் செய்கின்றனர். டோரினோ இச்சி திருவிழா இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானதுதான்.

  ஓடோரி கோயில் கண்களுக்குத் தென்பட்டது. மக்கள் சாரை சாரையாகக் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நாங்களும் கூட்டத்தோடு கலந்து நடந்தோம். எதிர் திசையில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஜப்பானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கைகளில் ஏந்தி வந்த பொருளைப் பார்த்த என் விழிகள் குத்திட்டு நின்றன. ""ஷின்ஜி இவைகள் என்ன?'' என்றேன்.

  ""ஓ! குமேட்டுகளைப் பற்றிக் கேட்கிறீர்களா, வாருங்கள் கோயிலின் நுழைவாயிலைக் கடந்தபிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள்'' என்றாள். ஓடோரி கோயிலின் அகன்ற வாயிலின் வழியாக, நான்கு வரிசைகளில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். இவ்வளவு ஜன நெருக்கடியில், ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வது, தள்ளிக் கொள்வது என்பது இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அமைதியான முறையில் மக்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். நுழைவாயிலை அடைந்தோம். வாயிலின் இருபக்கமும் இருந்த இடத்தில், இரு இளைஞர்கள், சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். வாயிற்படியைக் கடந்து சென்ற பிறகு என் கண்களில் தென்பட்ட கடைகளும், அவற்றில் பலவகையான குமேட்டுகள் மரச் சட்டங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் என்னைப் பிரமிக்க வைத்தது.

  ஒரு வழியாக, ஓடோரி கோயிலின் கர்ப்பகிரகத்தை நெருங்கினோம். யாமேடோ டேக்ரூ (Yamato Takeru) என்கின்ற இளவரசன் போரில் வீர மரணம் அடைந்தான். இவனுடைய இறப்புக்குப் பிறகு ஒரு வெள்ளை அன்னப்பறவையாகி, ஓடோரி கோயிலாக மாற இருந்த  இடத்தில் தங்கிச் செல்ல, அங்கே கோயில் உருவானது. ஜப்பானிய மக்கள் வெள்ளை அன்னப்பறவைகளை வணங்கக் கட்டிய கோயில்தான் ஓடோரி கோயில்கள். எல்லா ஜப்பானியர்களைப் போல நாங்களும், இடுப்பை வளைத்து, தலை வணங்கினோம். கையில் பிடித்திருந்த ஊதுபத்திகளிலிருந்து வந்த புகையைக் காட்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

  ""வாருங்கள்.  இப்பொழுது குமேட்டுகளை விற்கும் கடைகளுக்குச் செல்லலாம்'' என்றாள் ஷின்ஜி. ஓடோரி கோயிலின் வலதுபக்கம் தொடங்கிப் பல சந்துகளிலும் குமேட்டுகளை விற்கும் கடைகள் இருந்தன. மூங்கில்களையும், வைக்கோல்களையும் கொண்டு செய்யப்பட்ட பல அலங்காரப் பொருட்களின் உள்ளே பல விதமான உருவ பொம்மைகள் காணப்பட்டன.

  நான் கேள்வியை முன் வைக்கும் முன்னரே ஷின்ஜி குமேட்டுகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினாள்.

  ஜப்பானியர்கள், தங்களுடைய அழகுணர்ச்சியைக் குறிப்பிடும் சொல்லாக வாபி சாபியை (Wabi Sabi) தேர்ந்தெடுத்துள்ளனர். எளிமை, அடக்கம், குறைபாடு உள்ளவை கூட அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் என்பார்கள். பழமையான வீடுகள், மண்பாண்டங்கள், துணிகள் வாபி சாபியை வெளிப்படுத்துகின்றது என்று கொண்டாடுவார்கள். இந்த வகையில் வந்த குமேட்டுகளும், வெற்றி, செல்வம் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பி இவைகளை வாங்கிச் சென்று வீடுகளில் வைப்பார்கள்.

  ""குமேட்டுகளின், அலங்காரத்திற்கும், அளவுக்கும் ஏற்றார்போல விலை இருக்கும். இதோ இந்தச் சிறிய குமேட்டு 1,000 யென்னுக்கு விற்கப்படுகிறது. இங்கே 2,000 யென் என்று தொடங்கி, 50,000 யென் வரையிலான குமேட்டுகளும் விற்கப்படும்''  என்றாள்.

  ""அப்பாடா, ஆச்சரியமாக இருக்கிறதே, இவ்வளவு கலைவண்ணத்துடன் செய்யப்பட்ட அதிர்ஷ்டப் பொருட்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.'' ஷின்ஜி ""அது என்ன அந்தக் குமேட்டுவின் நடுவில் வெண்மையான நிறத்தில் ஒரு குழந்தையின் முகம்போல ஒரு உருவம் தெரிகின்றதே. அட, அது புன்னகைத்துக்கொண்டு இருப்பது பார்க்க வெகு அழகாக இருக்கிறது'' என்றேன்.

  ""ஓ! இதுவா. இவள் மகிழ்ச்சியைக் குறிக்கும் கடவுள். இவளின் பெயர் ஓடாபுகு, (Otafuku) அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவள்.''

  ""அதோ அந்தக் குமேட்டுவில் ஏழு அதிர்ஷ்டக் கடவுள்கள் இருக்கிறார்கள். ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, அறிவு, கலை, அழகு இவைகளைத் தருபவர்கள்.''

  ""அது என்ன ஒரு சிறிய மரச்சுத்தியல் காணப்படுகிறதே என்றார்'' என் கணவர்.
  ""ஓ, அதுவா, ஈசன் போஷி (Issun Boshi) என்கின்ற கதையில் ஒரு சிறுவனுக்கு இந்த மரச்சுத்தியல் நினைத்ததை அடையும் வரத்தைக் கொடுக்கிறது. அதோ அந்தச் சிறிய பீப்பாய்கள், நல்ல விளைச்சலை அடைய, இந்தக் கோபன் (Koban) அதாவது தங்க நாணயம் இது போலியானது'' என்று ஷின்ஜி சிரித்து, பிறகு தொடர்ந்தாள், ""பணம் மற்றும் செல்வம் கிடைக்க'' என்றாள்.

  ""மற்றொரு குமேட்டில் கொக்குகளும், ஆமைகளும் இருந்தன. இவை நீண்ட ஆயுள்  கொண்டவை ஏன் தெரியுமா? கொக்குகள் 1,000 ஆண்டுகளும், ஆமைகள் 10,000 ஆண்டுகளும் வாழும். இபிசு (Ebisu) என்கின்ற ஏழு கடவுள்களில் ஒருவர் எப்பொழுதும் ஒரு ரெட் ஸ்நாப்பர், (red snapper) (அதாங்க நம்ம ஊர் சங்கரா மீனை) கையில் வைத்திருப்பார், மீன் அதிர்ஷ்டத்தின் சின்னம்''  என்றாள்ஷின்ஜி.

  ""அட, அது என்ன ஆந்தையை வைத்திருக்கிறீர்கள்'' என்றேன்.

  ""ஆந்தை எங்களுக்கு ஞானத்தின் சின்னமாக இருக்கிறது. இதை ஜப்பானிய மொழியில் (Fukurow) புகுரு என்போம். (பு) என்றால் இல்லை, (குரு) என்றால் கஷ்டம். கஷ்டம் இல்லை புரிகிறதா'' என்றாள்.

  இத்தகைய குமேட்டுகளை வீட்டிலும், அலுவலகத்திலும், வியாபார இடங்களிலும் வைத்திருந்துவிட்டு அடுத்த ஆண்டு இதே நாள் இந்தக் கோயிலுக்குத் திருப்பித் தந்துவிடுவார்களாம்.

  ஒவ்வொரு குமேட்டும் விற்பனையாகும் பொழுது, கடையின் உரிமையாளரும், பணியாளர்களும் பெருத்த சத்தத்தோடு கைகளைத் தட்டுகின்றனர். இது எதற்கு என்றதற்கு, ஒரு குமேட்டின் விலை 1,000 யென்கள் என்றால் பேரம் பேசி 800 யென்களுக்கு வாங்குவார்கள், கடைக்காரர் குமேட்டை விற்றுவிட்டு கைகளைத் தட்டும்பொழுது, மீதி 200 யென்களை, அவருக்கே திருப்பித் தந்துவிடுவார்கள். வாடிக்கையாளரை பாராட்டும் வகையில் இப்படிக் கைகளைத் தட்டுகிறார்கள்.

  நானும் ஒரு சிறிய குமேட்டை வாங்கினேன், கைத்தட்டல்களைப் பெற்றேன். டோரினோ இச்சி என்ற இந்தப் புது ஆண்டை வரவேற்கும் வினோதமான திருவிழா தந்த அனுபவங்கள் இன்றளவும் என் நெஞ்சில் இன்ப அதிர்வுகளை எழுப்பி மலைக்க வைக்கிறது.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai