Enable Javscript for better performance
தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்!- Dinamani

சுடச்சுட

  

  தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்!

  By -ரா. சுந்தர்ராமன்  |   Published on : 15th April 2019 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk2

  1943-ஆம் ஆண்டு செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல பிரபலங்களின் ஆதரவுடன் தமிழ் இசையை வளர்க்கும் நோக்கத்துடன் தமிழ் இசைச் சங்கத்தை ஆரம்பித்தார்.

  சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது இசையும் கூத்தும் வல்லபாணர், பாடினியர், விறலியர் போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாள இசைக்கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடியுள்ளனர். உடுக்கை, கல்லலகு, கின்னரம், குடமுழவம், தக்கை, தமருகம், கல்லவடம், கிணை முதலான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இதை நாம் சங்க காலப் பாடல்கள் வாயிலாக அறிகின்றோம்.

  அவ்வாறு அறியப்பட்ட ஒரு சில இசைக் கருவிகளை இப்போதும் பார்க்கமுடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா, ஆம், சென்னை பிராட்வேயில் அமைந்திருக்கும் தமிழ் இசைச் சங்கத்தின் இரண்டாவது மாடியில் “தொல் இசைக் களஞ்சியம்” என்ற பெயரில் சிறிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகத்தில் 80 பழமையான இசைக்கருவிகள் காட்சிக்காக  வைக்கப்பட்டுள்ளன.  நகரா(வட இந்தியர்கள் வாசிக்கும் தாளக் கருவியாகும்)  பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் இசைக்கருவி(இன்றும் பஞ்சமுக வாத்யம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி கோயில்களில் வாசிக்கப்படுகிறது) பழமையான ஸ்ருதிப் பெட்டி, படகு வடிவில் அமைந்த யாழ், மடக்கு வீணை, மயில்நாக வீணை போன்ற பழமையான கருவிகள் காட்சியகத்தை மெருகேற்றுகின்றன இது தவிர பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் தாய் சண்முகவடிவு வாசித்த வீணை, புல்லாங்குழல் வித்வான் மறைந்த என். ரமணி உபயோகப்படுத்திய தம்பூரா, விக்கு விநாயகராம் வாசித்த கடம், பாடகி நித்யஸ்ரீ கொடுத்துதவிய பாட்டி டி.கே. பட்டம்மாள் உபயோகப்படுத்திய ஸ்ருதிப் பெட்டி, பாடலாசிரியர் பாபநாசம் சிவன் தன் கைப்பட எழுதிய இரண்டு கீர்த்தனைகள் மற்றும் அவர் உபயோகப்படுத்திய கண் கண்ணாடிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வாசித்த இரண்டு நாதஸ்வரங்கள் காட்சி அரங்கின் நடுவே காட்சியளிக்கிறது. 

  அமைதியாக இருந்த களஞ்சியத்தின் வலது ஓர மூலையில் உள்ள ஹாலில் ஏதோ பேச்சுச் சத்தம், அதைக் கேட்டு உள்ளே நுழைந்தால், இடதுபக்கம் ”தவில்” இசைக்கருவி செய்வது எப்படி என்பதன் வீடியோ ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இதுபோல் பல்வேறு இசைக்கருவிகளின் தயாரிப்பை வீடியோவாக வெளியிடுவது என்பது நிர்வாகத்தின் திட்டங்களில் ஒன்று.  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் வீடியோவிற்கு எதிரே ஜப்பானிய இசைக்கலாசாரத்தின் அடையாளமான “"ஸங்க்யோகு' ”அமைப்பில் “"கோடோ'”, “"ஷாமிùஸன்'” மற்றும் “"ஷாகுஷாச்சி'” ஆகிய இசைக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. இக்கருவிகள் தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இணைப்பை வலியுறுத்துகிறது எனலாம்.  அதன் மேலே ஜப்பானிய பெண் அந்த இசைக் கருவியை வாசிப்பது போல் ஓவியம் சிறப்பாக உள்ளது. 

  இசைக் கருவிகளின் அருங்காட்சியகத்தில் ஆங்காங்கே பிரபல சங்கீத வித்வான்களின் ஓவியங்கள் பிரமாதமாக அலங்கரிக்கின்றன.

  அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் பதிவேடும் (Visitor's Book) உள்ளது, அதில் 1940 -50 - ஆம் ஆண்டுகளில் விஜயம் செய்த பிரபலங்களின் குறிப்பும் கையெழுத்தும் உள்ளன. “பார்வையாளர் பதிவேட்டில் உள்ள பக்கங்களை நவீன தொழில் நுட்ப உதவியுடன் தானியங்கி மூலம் ஒவ்வொரு பக்கமும் திருப்பும்படியாக அமைத்தால் வந்த பிரபலங்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை அனைவரும் அறியலாம். 

  மொத்தத்தில் ”"தொல் இசைக் களஞ்சியம்'” தமிழ் மக்கள், இசை படிப்பவர்கள், இசை விரும்பிகள் போன்றோர் பார்க்கவேண்டிய இடம். 

  சென்னை வரும் சுற்றுலாப் பயணிகள், சென்னையை சுற்றிப்பார்க்கும் இடங்களின் பட்டியலில் “தொல் இசைக் களஞ்சியம்” அருங்காட்சியகத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

  அருங்காட்சியக பார்வையாளர் கட்டணம் இருபது ரூபாய். செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். திங்கள்
  கிழமை விடுமுறை நாள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai