ஆதிச்சநல்லூர் சொல்லும் உண்மைகள்...

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் பரிசோதனை முடிவுகள் தற்போது பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. 
ஆதிச்சநல்லூர் சொல்லும் உண்மைகள்...

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் பரிசோதனை முடிவுகள் தற்போது பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. 

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட்ட நகரங்களில் ஒன்று. 

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-இல் இங்கு இனப் பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். இங்கு கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை எடுத்து சென்றுள்ளனர். 1900-இல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரீ என்பவர் தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார். 

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என  தற்போது தெரிய வந்துள்ளது.

ஆதிச்சநல்லூர், இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் கொற்கையினைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது ஒரு முக்கியமான பண்பாட்டுச் சிறப்பு மிக்க இடமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், மூன்றாம் தமிழ் சங்க காலத்தினைச் சார்ந்த சங்க இலக்கியங்களில் , ஆதிச்ச நல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை. 

ஆனால், கொற்கையினைப் பற்றி உள்ளது. திருச்செந்தூர், பொதிகை மலையினைப் பற்றியெல்லாம் குறிப்புகள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது மூன்றாம்தமிழ் சங்கம் தோன்றி, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம்.

எனவே, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாக , இந்த ஆதிச்ச நல்லூர் நாகரீகம் கருதப்படுகிறது. அதற்கு உறுதியாக, 2004-2005 ஆம் ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு நடந்தபோது கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் இவை சுமார் கி.மு. 1,700 ஆண்டுகளுக்கு முந்தியவை, அதாவது இன்றைக்கு 3,700 ஆண்டுகளுக்கு முந்தியவையாக இருக்கலாம் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். 

இதுவரை தமிழ் நாட்டில் கிடைத்த பண்பாட்டு எச்சங்களில் ஆதிச்சநல்லூர்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், தமிழகத்தில் எங்கெல்லாம் அகழாய்வு செய்கிறோமோ அங்கெல்லாம் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவை தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக அப்பொழுது இருந்தார்கள் என்பதன் சான்றாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு செய்தபோது எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைக்கவில்லை.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரீகம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com