நம்மாழ்வார் வழியில் இளைஞர்கள்!

நீங்கள் அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவசமாக மரம் நட்டுத் தருகிறோம்.
நம்மாழ்வார் வழியில் இளைஞர்கள்!

நீங்கள் அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவசமாக மரம் நட்டுத் தருகிறோம். சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம் என கடந்த சில நாட்களாக "வாட்ஸ் அப்' பில் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு செய்தி வந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது பேசியவர் ஈஸ்வர் அல்லா என்ற இளைஞர். தன்னார்வ குழுவின் உதவியோடு இந்தப் பணிகளைச் செய்து வருவதாகச் சொன்னார். எப்படி இந்த எண்ணம் உருவானது என்று அவரிடம் கேட்ட போது விரிவாகப் பேசினார்.

வேலூர் என்னுடைய பூர்வீகம்.  வேலை காரணமாகச் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். தற்போது மென்பொருள் துறையில் டிசைனராகப் பணியாற்றி வருகிறேன். சிறுவயதில் இருந்தே இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. 2012-ஆம் ஆண்டு என்னுடைய சமூகப்பணியைத் தொடங்கினேன். 

பருத்திபட்டு அருகே குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி மரங்கள் நடும் பணியைத் தொடங்கினேன். இதற்குச் சுற்றியிருந்தவர்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். மண், தண்ணீர், செடிகள், விவசாயம் பற்றி அவருடைய அனுபவத்தைச் சொல்லியிருந்தார். நிறையத் தகவல்கள்  கிடைத்தன. 

இதனை வெளிப்படுத்த என்ன வழி? அடிப்படை சிக்கல்கள் நிறையவே இருந்தன. அதனைத் தொடர்ந்து வர்தா புயல் பாதிப்பின் போது ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அவற்றைச் சீரமைக்கும் பணியில் குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவருடன் சேர்ந்து என்னால் முடிந்த பணிகளைச் செய்த போது ஏராளமான தன்னார்வ தொண்டர்களின் அறிமுகம் கிடைத்தது. ஏன் மீண்டும் மரம் நடும் பணியில் இறங்கக்கூடாது என்று தோன்றியது. 

மக்கள் நலமாக வாழ தேவைப்படும் 61 மரங்களை (கடுக்காய், பெரிய நெல்லிக்காய்,  தான்றிக்காய்,  கருங்காலி,  நீர்மருது, மலைவேம்பு, அரளி, செண்பகம் , வில்வம், வேம்பு என இந்தப் பட்டியல் நீளும்)  நடுவது என்ற முடிவு செய்து களப்பணியில் இறங்கி பணியாற்ற முடிவு செய்தேன். தன்னார்வ தொண்டர்கள் நண்பர்களுடன் ஆலோசனை செய்த போது தாராளமாகச் செய்யலாம் என்றார்கள்.

மரங்கன்றுகளைப் பொருத்தவரை நர்சரி கார்டன்களில் வாங்கினால் பணமும் அதிகம் செலவாகும். செடி அத்தனை தரம் வாய்ந்ததாக இருக்காது. இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தேன். சீசன் காலங்களில் அந்தந்த மரங்களின் விதைகளைச் சேரிக்க ஆரம்பித்தேன்.  சென்னை காவல் துறையில் பணிபுரியும் சரவணன்  தமிழகமெங்கும் பழமையான மரங்களைத் தேடி அதன் விதைகளைச்  சேகரித்து மாதம் தோறும் கொடுத்து மகத்தான சேவை புரிந்து வருகிறார் . போரூர் பள்ளியில் பணிபுரியும் ராஜ்குமார்  இவர் சென்னையில் எங்கு மரம் நடும் பணி நடந்தாலும் (இவரிடம் வாகனம் இல்லை, இல்லாத நிலையிலும்) பேருந்தில் பயணித்து நடக்கும் இடத்தில் முதல் ஆளாக வந்து கடைசி நபராகச் செல்வார். கடினமான வேலைகளைக்  கச்சிதமாகச் செய்து முடிப்பவர்.

ஆவடி வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்திருக்கும் சிவகுமார்  எளிமையான கருவிகளைத் தயாரித்துக் கொடுத்து, பணி சுமையினைப் பெருமளவு குறைத்து வருகிறார்.  அதுமட்டுமின்றி அவரது மொட்டை மாடியில் 500}1000 மரக்கன்றுகளைத்  தினமும் நீருற்றி வளர்க்கிறார். இவர்களைத் தவிர இன்னும் 16 பேர் களப்பணி ஆற்றுகிறார்கள். 

சரி இந்த விதைகளைச் செடிகளாக உருவாக்க இடம் வேண்டுமே? 

அம்பத்தூரில் வசிக்கும் நபர் ஒருவர் அவர் வீட்டு மாடியில் செடிகளை வளர்ப்பதற்குத்  இடம் தந்து உதவினார். குரோம்பேட்டை பகுதியிலும் இது போன்ற வேறு ஒரு நபர்  உதவியதால் எங்களால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நாங்களே தயார் செய்து விடுகிறோம்.  தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி, அம்பத்தூரை மையமாகக் கொண்டு திருவள்ளூர், பொன்னேரி, வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம். 

கண்டிகை அரசு பள்ளியில் காடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். வீடு, தெரு, குடியிருப்பு பகுதி, அலுவலகம், மருத்துவமனை, கோயில், பள்ளிவாசல், தேவாலயம், தியான மையம், விளையாட்டு மைதானம், பூங்காநாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கிடைக்கும்படியான, மற்றும் தற்சார்புடன் வாழ்வதற்குத் தேவைப்படக்கூடிய மரங்களை நம் சென்னையில் நட்டு வளர்க்க உதவுகிறோம்.

அழைப்பின் பெயரில் மட்டும் தான் மரம் நடுவீர்களா?

ஆமாம். நாங்கள் எல்லா இடங்களிலும் முடிந்தவரை மரம் நட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். இதிலுள்ள நடைமுறை சிக்கல் மரம் நடுவது பிரச்னை இல்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பது யார்? அதனால் தான் விரும்பிய நபர்களின் அழைப்பின் பெயரில் மட்டும் அவர்களின் வீட்டை சுற்றி மரம் நடுகிறோம். 


-வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com