Enable Javscript for better performance
ஈரான் நாட்டு நாடோடிக்கதை: தந்தையை மீட்ட மகன்- Dinamani

சுடச்சுட

  
  m8

  முன்னொரு காலத்தில் ஈரானில் ருஸ்தம் என்னும் மாவீரர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் ரஷ்யா ஈரானைத் தாக்க படை எடுத்து வந்தது. ஈரான் மன்னர் ஷா, ருஸ்தமை அழைத்துத் தனது படைகளுக்கு அவரைத் தளபதியாக்கி எதிரியைத் தாக்கச் சொன்னார். ருஸ்தம் போர்க்களம் செல்லத் தயாரானார். ஆனால், அவருக்கு ஒரே ஒரு வருத்தம். அவர் உயிருக்குயிராய் நேசித்த அழகிய இளம் மனைவி டாஸ்மினாவை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதுதான் அது. புறப்படுவதற்கு முன்னால் தனது அன்பு மனைவிக்கு விலையுயர்ந்த, நீலக்கல் பதித்த நெக்லஸ் ஒன்றைப் பரிசாக அளித்தார். அப்போது அவளைப் பார்த்துச் சொன்னார்:
   " இதோ பார் டாஸ்மினா, உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்தப் பரிசை எனக்குத் திருப்பி அனுப்பி வை. நான் உடனே திரும்பி வந்துவிடுவேன்.'' என்றார்."
   டாஸ்மினா மிக வருத்தத்துடன் கணவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். நாட்கள் விரைந்தன. போவதே தெரியாமல் மாதங்கள் கடந்தன. டாஸ்மினா ஓர் அழகிய ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தனக்குப் ஒரு பெண் குழந்தைப் பிறந்திருப்பதாகவே கணவனுக்குத் தகவல் அனுப்பினாள். தனக்குப் பிறந்திருப்பது ஆண் குழந்தை என்பது கணவன் ருஸ்தமுக்குத் தெரிந்தால் தன் மகனையும் ஓர் போர் வீரனாக்கி போரிட அழைத்துச் சென்றுவிடலாம். அந்த நிலையில் விதிவசத்தால் இருவரையுமே அவள் இழந்துவிட நேரலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
   ருஸ்தம் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றே ஆசைப்பட்டிருந்தார். ஆனால் அவருக்குக் கிடைத்த செய்தி அவரை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டது. அந்த வருத்தத்தில் வீட்டிற்கு வராமல் மனைவி டாஸ்மினாவிடமிருந்து விலகியிருக்கவே முடிவு செய்தார். தனது துருப்புக்களோடு போர்க்களத்திலேயே தங்கிவிட்டார்.
   ஷோரப், ருஸ்தமின் மகன், திடகாத்திரமுள்ள கம்பீர, அழகிய இளைஞனாக வளர்ந்திருந்தான். தந்தையையும் மீறும் வீரனாகத் திகழ்ந்தான். தந்தையின் போர்க்கள சாகஸங்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். மாபெரும் வீரராகப் புகழ் பெற்றிருந்த தன் தந்தையைக் காண ஆசைப்பட்டான்.
   ஒரு நாள் தன் தாயிடம் தன் ஆசையைத் தெரிவித்தான். "அம்மா, நான் அப்பாவைச் சந்தித்தாக வேண்டும். நான் அவரை நிச்சயம் தேடிக் கண்டுபிடித்து விடுவேன். எனக்கு அனுமதி கொடுங்கள்.'' ஷோரப் தாயிடம் கெஞ்சினான். ஆனால் அவளோ, " "மகனே, அவர் எங்கே இருக்கிறார் என்பதே நமக்குத் தெரியாதே. இதுநாள்வரை நம்மோடு அவர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. நீ எங்கு போய் அவரைத்தேடுவாய்?'" என்றாள்.
   "இல்லை அம்மா. நான் எப்படியும் அப்பாவைக் கண்டுபிடித்துவிடுவேன்.'' அவன் மன்றாடினான். இறுதியில் டாஸ்மினா அவனுக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்தாள்.
   தன் தந்தையைச் சந்தித்து மீண்டும் அவரை வீடு திரும்பச்செய்ய திட்டம் போட்டான். ஈரான் போர்ப்படை வீரர்களைச் சந்தித்து ஓர் சவால் விட்டான். தான்தான் ஈரானிலேயே யாருக்கும் அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத மாவீரன் என்றும் அதை அவர்களின் தளபதி ருஸ்தமுக்கே நிரூபித்துக் காட்டுவதாகவும் சூளுரைத்தான். அவனுக்குத் தெரியும் ருஸ்தம் எத்தனை கீர்த்திபெற்ற போர்வீரராக இருந்தாலும் அவர் தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்ளத் தவறமாட்டார் என்பது.
   ஷோரப் எதிர்ப்பார்த்தது நடந்தது. தன்னை எதிர்த்து போரிட சவால்விட்ட ஆணவம் படைத்த ஆண் மகனைக் களத்தில் சந்திக்கத் தான் தயார் என்று செய்தி அனுப்பினார் ருஸ்தம். இருவரும் போரிட குறிக்கப்பட்ட நாள் வந்தது. களத்தில் இறங்கி ஆயுதமேந்தி நின்றனர். ஷோரப்பின் பாச உணர்வு உந்தித்தள்ள தந்தையைப் பார்த்துச் சொன்னான்: "அப்பா, ருஸ்தம் அவர்களே! நான் நீங்கள் பெற்ற மகன்.''
   தனக்குச் சவால் விட்டவன் யாராக இருந்தாலும் அவனை எதிரியாகவே பார்த்தார் ருஸ்தம். கோபத்தோடு அவனைப்பார்த்து, "மேற்கொண்டு பேச்சு எதுவும் தேவையில்லை போரிடப்பார்.'" என்றவர் தன் கை ஈட்டியோடு அவனைத் தாக்கினார். ஷோரப் கொஞ்சம் நகர்ந்து தப்பித்துக்கொண்டு தன் ஈட்டியை எறிந்துவிட்டு வாளை எடுத்தான். இருவரும் ஆவேசத்தோடு வாளைச் சுழற்றி மோதினார்கள்.வாள்கள் சீறிப்பாய்ந்து, மின்னல் பொறி பறக்க உரசித்தாக்கின. ருஸ்தமின் வாள் தாக்குதலில் ஷோரப் தூள்தூளாக வெட்டுண்டு போவான் என்று கணப்பொழுது தோன்றியது. ஆனால் ஷோரப் சாதுரியமாகத் தப்பித்த வண்ணமிருந்தான்.
   போர் தொடர்ந்தது. திடுமென்று ருஸ்தமின் பாய்ச்சலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. தந்தையின்பால் ஷோரப்பின் அக்கறை அவனைக் கொஞ்சம் தயங்கச்செய்தது. தன் கேடயத்தைத் தாழ்த்தி அவருக்கு உதவ நினைத்த கணத்தில் ருஸ்தம் சரேலென்று அவன்மீது பாய்ந்து ஒரே வெட்டில் அவனைச் சாய்த்தார். வென்றுவிட்டபெருமிதத்தோடு சுற்றி நின்ற தன் சகாக்களைப் பார்த்த ருஸ்தம் தன் காலடியில் உயிர் விட்டுக்கொண்டிருந்த இளைஞன் தன் சொந்த மகன் என்பதை அறிந்திருக்கவில்லை.
   தரையில் விழுந்து மூச்சுத்திணற வலியில் துடித்துக்கொண்டிருந்த ஷோரப் மெல்ல புரண்டு அவன் தாய் அவனிடம் கொடுத்தனுப்பியிருந்த நெக்லசை மடியிலிருந்து எடுத்து தந்தையிடம் நீட்டி, "அப்பா! இந்த நெக்லசை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போதாவது நான் உங்கள் மகன்தான் என்பதை நம்புகிறீர்களா?'' என்று முனகிய குரலில் கேட்டான். ருஸ்தம் அவரது குற்ற உணர்வின் உறுத்தலின் வலியை அனுபவித்தவர் தன் காலடியில் கிடந்த வீரன் தன் சொந்த மகன்தான் என்ற உண்மையை அறிந்தார். உயிர் விட்டுக்கொண்டிருந்த மகனின் பக்கத்தில் சாய்ந்து விழுந்து சொல்லொணாத் துயரத்தில் விம்மி அழுதார்.
   ஷோரப்பின் அடங்கிக்கொண்டிருந்த குரல் பேசிற்று: "அப்பா, எனக்காக நீங்கள் அழவேண்டாம். என் அம்மா டாஸ்மினா தன் மகனை இழந்துவிட்டார்கள். உங்கள் மனைவியான அவரைப் பிரிந்து வெகுகாலம் இருந்துவிட்டீர்கள். வீட்டிற்குத் திரும்பிச்செல்லுங்கள். இறுதிவரை இனி அவரை ஒருநாளும் சத்தியமாகப் பிரியமாட்டேன் என்று சொல்லுங்கள். இதுவே உங்கள் மகனின் கடைசி ஆசை.''
   சோகத்தில் குனிந்த ருஸ்தமின் தலை நிமிர்ந்தது. மகனுக்குக் கொடுத்த அவரது வாக்குறுதியில் சத்தியம் தொனித்தது: "அப்படியே செய்வேன் மகனே.''
   அவர் காலடியில் அமைதியாக உயிர் நீத்த ஷோரப்பின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
   வீடு திரும்பிய ருஸ்தம் மனைவி டாஸ்மினாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். வாழ்நாளில் தான் ஒருபோதும் மீண்டும் வாளைத் தொடுவதில்லை எனும் உறுதி எடுத்துக்கொண்டார். தனது அருமை வீரத்திருமகனை இழந்துவிட்ட சோகம் மட்டும் அவர் வாழ்நாள் முழுதும் தொடரவே செய்தது.
   -கன்யாமித்ரன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai